ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

விடுதலைச் சிறுதைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.கவின் ஐடி பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பனையூரில் உள்ள த.வெ.க-வின் அலுவலகத்திற்கு இன்று காலையில் வந்த இருவரையும் விஜய் சந்தித்துப் பேசினர். இதற்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு, விஜய் அங்கு வந்து சேர்ந்தார். அவர் முன்னிலையில் அவர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தது குறித்து பிபிசியிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல்குமார், அ.தி.மு.கவில் தன்னை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனக் கூறினார்.

"இரண்டு ஆண்டுகளாக அந்தக் கட்சியில் இருந்தேன். தடா பெரியசாமி உள்ளிட்டோரை நான் தான் அ.தி.மு.கவில் இணைத்தேன். இருந்தபோதும் பெரிய முன்னேற்றம் இல்லை. என்னை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஆகவே, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

சி.டி.ஆர் நிர்மல் குமார் 2019ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், அண்ணாமலை மாநிலத் தலைவரான பிறகு, அவருடன் நிர்மல்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்தக் கட்சியிலிருந்து விலகிய அவர், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு ஐ.டி. பிரிவின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவின் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் துணை பொதுச் செயலாளராக சி.டி.ஆர். நிர்மல்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆதவ் அர்ஜுனாவின் பின்னணி என்ன?

விளையாட்டு வீரர், தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல்வாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட ஆதவ் அர்ஜுனா, திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மருமகனான இவர், இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இப்படி விளையாட்டுத் துறையைப் பின்னணியாகக் கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா, 2015ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை தி.மு.கவிற்காக தேர்தல் வியூகப் பணிகளில் ஈடுபட்டார்.

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்று ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வுக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட பிரசாந்த் கிஷோருடனும் இவர் இணைந்து செயல்பட்டார்.

இதற்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தன்னுடன் இணைந்து வேலை செய்தவர்களைக் கொண்டு, 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தேர்தல் வியூக மற்றும் கொள்கை உருவாக்க நிறுவனத்தைத் தொடங்கினார்.

இதற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காகப் பணியாற்ற ஆரம்பித்தார் ஆதவ் அர்ஜுனா. கடந்த 2024ஆம் ஆண்டு திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகளின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை நடத்தியதில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

பின்னர் அக்கட்சியில் இணைந்த ஆதவுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அடுத்து வந்த 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.கவுக்கு பொதுத் தொகுதி ஒன்று ஒதுக்கப்படும் என்றும் அதில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவார் என்றும் பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், இரு தொகுதிகளே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டிகளில் இருந்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஒரு பேட்டியில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், துணை முதலமைச்சர் ஆகும்போது, 40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?" என்று அவர் கேள்வியெழுப்பியது, தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதத்தில் விகடன் பிரசுரமும் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனமும் இணைந்து நடத்திய 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டார். இந்த விழாவில் முதலில் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அந்த விழாவில் பங்கேற்பதை அவர் தவிர்த்துவிட்டார்.

இந்த விழாவில் "மன்னர் பரம்பரை உருவாவதற்கு இனி ஒருபோதும் தமிழகம் இடம் தராது. 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது" என்று தி.மு.கவை மறைமுகமாக விமர்சித்தார் ஆதவ் அர்ஜுனா.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அவர் வி.சி.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். விரைவிலேயே அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டு வந்தன. அதன்படி, இன்று அவர் அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)