You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு - காரணம் என்ன? தடுப்பது எப்படி?
- எழுதியவர், லஷ்மி படேல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வாழ்க்கையில் நல்ல நிலைமையை அமைத்துக்கொள்ள இளைஞர்கள் முயற்சிக்கும் வயதில், ஆமதாபாத்தில் வாழும் 26 வயதான தவால் தேசாய் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் அறிவுரையின்றி தலைவலிக்காக வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டதே அவருடைய இந்த நிலைக்குக் காரணம். இதன் காரணமாக அவரது இரு சிறுநீரகமும் செயலிழந்தது.
இது தவால் தேசாயின் கதை மட்டுமல்ல. மருத்துவர்கள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், மாறிவரும் வாழ்வியல் முறைகளால் இளம் வயதினரிடையே சிறுநீரக செயலிழப்பு அதிகமாகி வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் குஜராத்தில் 40 வயதுக்குட்பட்ட 763 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது அம்மாநிலத்தில் நடைபெறும் மொத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 70 சதவிகிதம் ஆகும். அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகத்திற்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
26 வயதில் தவாலின் சிறுநீரகம் செயலிழந்தது எப்படி?
தற்போது 32 வயதாகும் தவாலுக்கு 26 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அவர் கூறுகையில், “எனக்கு அடிக்கடி தலைவலி வரும். அதனால், நான் மருந்தகங்களில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உட்கொள்வேன். தலைவலிக்காக நான் மருத்துவரை சந்தித்ததில்லை. பின்னர்தான், எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி அதனால் தலைவலி வந்தது தெரியவந்தது” என்றார்.
மேலும், “அதிகளவில் வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வது, புகையிலை, நொறுக்குத் தீனிகள் உண்பது ஆகிய பழக்கங்கள் எனக்கு இருந்தன. அதனால், 26 வயதிலேயே என்னுடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன” என்றார் அவர்.
தவாலை போன்றே, 38 வயதான பார்த் கோரிங்காவுக்கு 30 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்தது. தற்போது ஒரேயொரு சிறுநீரகத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார்.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய அவர், “எனது சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானது பற்றி எந்த அறிகுறியும் எனக்கு ஏற்படவில்லை. நான் மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். அலுவலகத்தில் வழக்கமான ரத்தப் பரிசோதனையை செய்திருந்தேன். அப்போது, என்னுடைய ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது. அதனால், முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டேன். அந்த முடிவில் க்ரியாட்டினின் அளவு அதிகமாக இருந்தது. இதனால், சிறுநீரகவியல் மருத்துவரை அணுகுமாறு என்னுடைய குடும்ப மருத்துவர் கூறினார்” என்கிறார்.
“ஆனால், முதல் ஆறுமாதங்களுக்கு நான் மூலிகை மருந்துகளை உட்கொண்டேன். ஆனால், அந்த மருந்துகள் என் உடல்நிலையை மேம்படுத்தவில்லை. பின்னர் சிறுநீரகவியல் மருத்துவரிடம் சென்றபோது, என்னுடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது தெரியவந்தது. இதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.” என்று கூறினார்.
‘கவலைக்குரிய விஷயம்’
இளம்வயதினரிடையே சிறுநீரக செயலிழப்பு அதிகமாகி வருவதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் அதிகமாகிவருகின்றன என்கிறார், குஜராத் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (IKDRC) இயக்குநருமான மருத்துவர் பிரஞ்சல் மோதி.
IKDRCதான் குஜராத்தில் உள்ள ஒரே அரசு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை. மேலும், மாநிலத்தின் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் மையமாகவும் இது திகழ்கிறது.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய மருத்துவர் பிரஞ்சல் மோதி, “மாறிவரும் வாழ்வியல் முறை காரணமாக, இளைஞர்களிடையே சிறுநீரக நோய்கள் பெருகிவருகின்றன. முன்பு, இத்தகைய சிறுநீரக செயலிழப்பு வயதானவர்களிடம் மட்டுமே காணப்படும். இப்போது, இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது” என்றார்.
இதுகுறித்த புள்ளிவிவரங்களை கூறிய அவர், IKDRC மையத்தில் 2021 முதல் 2023 வரை 1,046 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாக கூறுகிறார்.
அவர்களுள் 763 நோயாளிகள் 40 வயதுக்குட்பட்டோர். இப்புள்ளிவிவரங்களின்படி, இக்காலகட்டத்தில் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுள், 70% இளம்வயதினரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவர் பிரஞ்சல் மோதி கூறுகையில், “இளைஞர்களிடையே சிறுநீரக செயலிழப்பு அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. வாழ்வியல் முறைகளை மாற்றுவதன் மூலம் இதனை தடுக்க முடியும். ‘நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு’ பல காரணங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் அதற்கு குறிப்பிட்ட காரணத்தை அறிய முடிவதில்லை” என்றார்.
தவால் தேசாய் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து 8 ஆண்டுகளாகின்றன. இப்போது அவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். எனினும், அவரால் எல்லாவித உடலுழைப்பு வேலைகளையும் செய்ய முடியாது. தொற்று ஏற்படுவதை தவிர்க்க அவர் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மக்கள் திரள் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை அவர் தவிர்க்க வேண்டும்.
தனக்கு ஏற்பட்ட தலைவலியை தவால் சாதாரணமாக எடுத்துக்கொண்டதால் அவர் தன் சிறுநீரகங்களை இழக்க வேண்டியிருந்தது.
சிறுநீரக நோய் குறித்து பேசிய சிறுநீரகவியல் மருத்துவர் உமேஷ் கோதானி, “நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் சீறுநீரக செயலிழப்புக்கு காரணமாக உள்ளன. வாழ்வியல் மாற்றத்தால் மிக இளம் வயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன."
"சிலர் ரத்த அழுத்தம், நீரிழிவு இரண்டையும் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்க மாட்டார்கள் அல்லது தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 40 வயதுக்கு மேலானோர் இரண்டையும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “உடல்நிலை சரியில்லாமல் போகும் போதுதான் வாழ்க்கையின் முக்கியத்துவம் புரிகிறது. வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். போதிய உறக்கம், சரியான நேரத்தில் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். நான் பலருக்கும் சிறுநீரக நோய்கள் குறித்து எடுத்துக் கூறுகிறேன். உடல்நிலை சரியில்லாத போது மருந்தகத்தில் மருந்துகள் வாங்கி உட்கொள்வதை நிறுத்த வேண்டும். மருத்துவரின் அறிவுறுத்தலின்படியே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்” என்றார்.
ஆனால், தனக்கு எவ்வித தீய பழக்கங்களும் இல்லை என்கிறார் பார்த். அவர், ஆயுர்வேத மருந்துகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். புகைப்பழக்கம், வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் இல்லாமல் ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால், சிறுநீரக செயலிழப்பு தனக்கு ஏற்பட்டதற்கான காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சிறுநீர் பாதை தொற்று இருந்தால், சிறுநீரக செயல்பாடும் மோசமாகும் என, மருத்துவர் உமேஷ் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “பல சமயங்களில் சிறுநீரக நோய் எவ்வித அறிகுறியும் இல்லாமல் தோன்றும். வேறொரு பிரச்னைக்காக பரிசோதனை மேற்கொள்ளும்போது கூட சிறுநீரக நோய் கண்டறியப்படும்” என்றார்.
தவால் தேசாய்க்கு அவருடைய தந்தையின் சிறுநீரகம் பொருந்தியது. ஆனால் அவருடைய இதய செயல்பாடு காரணமாக அவரின் தந்தையின் சிறுநீரகத்தைப் பொருத்திக்கொள்ள வேண்டாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பின் அவருடைய உறவினர் ஒருவரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தப்பட்டது. பார்த்-க்கு அவருடைய தந்தை சிறுநீரகம் வழங்கினார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் பார்த் மருந்து நிறுவன வேலையிலிருந்து வெளியேறிவிட்டார். ஆமதாபாத்திலிருந்து வெளியேறி தன் சொந்த ஊரான ராஜ்கோட்டில் வசித்துவருகிறார்.
ஆயுர்வேத மருந்துகள்
மருத்துவர் உமேஷ் கோதானி, ''கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் அல்லது நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எடுத்துக் கொள்வதும் சிறுநீரகத்தை பாதிக்கும்'' என்றார்.
மேலும், “கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு அதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டவர்களையும் நாங்கள் பார்க்கிறோம். ஆயுர்வேத மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் அறிவுறுத்தலின் பேரிலேயே அம்மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் மருத்துவர் உமேஷ்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
மருத்துவர்கள் பிரஞ்சல் மோதி மற்றும் உமேஷ் கோதானி கூறிய அறிகுறிகள்:
- தொடர்ந்து காய்ச்சல்
- நீங்காத தலைவலி
- காலில் வீக்கம்
- மூச்சுவிடுவதில் சிரமம்
- உடல் சோர்வு
- தோல் நிறத்தில் மாற்றம்
- பின் குதிகாலில் வலி
- சிறுநீரின் அளவு குறைந்துபோதல் அல்லது சிறுநீர் வெளியேறாமல் இருப்பது
எப்படி தடுப்பது?
- சீக்கிரமாக உறங்க சென்று, அதிகாலையில் எழ வேண்டும். போதிய உறக்கம் இருக்க வேண்டும்.
- தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்.
- உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்
- வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளுதல், குறைவான அளவு உட்கொள்ள வேண்டும்
- வாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்
- நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும்
- எனர்ஜி ட்ரிங்க் மற்றும் மென் பானங்கள் ஆகியவை மிகவும் ஆபத்தானவை. அவற்றை குழந்தைகள் அருந்துவதையும் தடுக்க வேண்டும்.
தடுப்பது எப்படி?
இருவழிகளில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் என்கிறார் மருத்துவர் பிரஞ்சல் மோதி. கடுமையான சிறுநீரக செயலிழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு.
“வயிற்றுப்போக்கு, குறைவாக தண்ணீர் அருந்துதல் காரணமாக ஏற்படும் நீரிழப்பு, மலேரியா, டெங்கு, தொற்று காரணமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்” என்கிறார் அவர்.
உமேஷ் கோதானி கூறுகையில், “இந்த பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பதை தடுக்க முடியும். மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் அதனை சரிசெய்ய முடியும். ஆரம்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை மூலமாகவும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த முடியும்” என்றார்.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு குறித்து கூறிய மருத்துவர் பிரஞ்சல் மோதி, “இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சில சமயங்களில் குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய முடிவதில்லை. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, போதைப் பழக்கம், புகைப்பழக்கம், வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்ளுதல், மன அழுத்தம், போதிய உறக்கமின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், அதிக உப்பு உள்ள உணவுகள், துரித உணவுகள், ஒழுங்கற்ற உணவு முறைகள் காரணமாக இது ஏற்படுகிறது” என்றார்.
மருத்துவர் உமேஷ் கோதானி கூறுகையில், “சிறுநீரக நோய் அமைதியாக கொல்லும் நோய். ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. முன்கூட்டியே கண்டறிந்தால், அதை மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றத்தால் சரிசெய்ய முடியும்” என்றார்.
யாரெல்லாம், எப்படி சிறுநீரக தானம் செய்ய முடியும்?
உயிருடன் இருப்பவர்களின் சிறுநீரகங்கள் மற்றும் இறந்தவர்களின் சிறுநீரகங்களை எப்படி தானம் செய்வது என்பதை பிரஞ்சல் மோதி கூறினார்.
“உயிருடன் இருப்பவர்களின் சிறுநீரகமே தானமாக வழங்குவதற்கு சிறந்தது. ஏனெனில், அதை சரியான நேரத்தில் தானமாக பெற முடியும். இதனால், அறுவை சிகிச்சை செய்பவர்கள் உயிர்பிழைக்கும் விகிதம் அதிகம். சிறுநீரகம் தானம் வழங்குபவர் இளம் வயதினராக இருந்தால் நீண்ட காலத்திற்கு அது செயல்படும்.'' என்கிறார்
பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், கணவர், மனைவி, தாத்தா-பாட்டிகள் என உறவினர்களே பெரும்பாலும் சிறுநீரக தானம் வழங்குகின்றனர்.
நெருங்கிய உறவினர்களின் சிறுநீரகம் பொருந்தவில்லையென்றால், அத்தை, மாமா, தாய்வழி உறவினர்கள் என தூரத்து சொந்தங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்கலாம். இதற்கு, மாநில அரசு குழுவிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
மூளைச்சாவு அல்லது தலையில் தீவிரமான காயம் ஏற்பட்டவர்களிடமிருந்து, குடும்பத்தினரின் ஒப்புதலுடன் சிறுநீரகத்தை தானமாக பெறலாம்.
தங்கள் உறவினரை இழந்த வலி அக்குடும்பத்தினருக்கு இருந்தாலும், இறந்தவரின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பிறருக்கு வாழ்க்கை கிடைக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)