ரோகித் - ஹர்திக் இடையே என்ன நடக்கிறது? மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன பிரச்னை?

புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானம். திங்கட்கிழமை இரவு ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போட வந்தார் ஹர்திக் பாண்டியா. வான்கடே மைதானம் முன் எப்போதும் பார்த்திராத சம்பவம் அது. பல ஜாம்பவான்களை உற்சாகப்படுத்திய ரசிகர் கூட்டம், முதல்முறையாக சொந்த அணியின் கேப்டனுக்கு எதிராகவே கூச்சலிட்டது. மும்பையின் கோட்டையிலேயே அந்த அணியின் கேப்டனை நோக்கி ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் என ரசிகர்களை எச்சரிக்கும் விதமாக ‘Behave’ என காட்டமாகக் கூறினார் வர்ணணையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே, மும்பை ரசிகர்கள் பலரும் ஹர்திக்கை தொடர்ச்சியாக கேலி செய்கின்றனர். சொந்த நாட்டு வீரரையே எல்லை மீறி ரசிகர்கள் அவமதிக்கும் காணொளிகள் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் ஹர்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்களுக்கு என்ன கோபம்? மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன பிரச்னை?

5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா

ஐபிஎல்லில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களால் முடியாததை ரோஹித் செய்து காட்டினார். அதானாலேயே அவருக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது.

ஆனால் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்ற நினைத்தது மும்பை இந்தியன்ஸ். கடந்த ஆண்டு டிசம்பரில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டபோது மும்பை ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.

மும்பையில் இருந்து குஜராத் டைட்டன்ஸுக்கு சென்று அந்த அணிக்கு முதல்முறையாக 2022இல் கோப்பையை வென்று கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. அவரை மீண்டும் கடந்த டிசம்பரில் மும்பை அணியில் எடுத்தது அணி நிர்வாகம். அத்தோடு கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது மும்பை அணி.

ரோஹித்திற்கு பதிலாக ஹர்திக்

கேப்டன் பொறுப்பு அழுத்தம் நிறைந்தது. அது இல்லை எனில், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடியும் என ரோஹித்தே அணி நிர்வாகத்திடம் பேசி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு எடுத்ததாக சில ஊடகங்கள் அப்போது கூறின. ஆனால் இந்த முடிவை மும்பை ரசிகர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகுதான் நடப்பு தொடரில் முதல்முறையாக ஆமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்த்து மும்பை அணிக்கு தலைமை தாங்கினார் ஹர்திக்.

மைதானத்தில் திரண்டிருந்த பெருவாரியான மும்பை ரசிகர்கள், ஹர்திக்கிற்கு எதிராக கூச்சலிட்டனர். ரோஹித்தின் பெயரையும் மாறி மாறி முழங்கினர். கூடவே குஜராத் ரசிகர்களும் தங்கள் முன்னாள் கேப்டன் மீது அதிருப்தியுடன் நடந்து கொண்டனர்.

இதன் உச்சகட்டமாக, ஆட்டத்தின்போது நாய் ஒன்று குறுக்கிட்டபோது ரசிகர்கள் ஹர்திக்கின் பெயரை குறிப்பிடடு முழக்கங்களை எழுப்பினர். இது ரசிகர்களின் ஆக்ரோஷமான மனநிலையை எதிரொலித்தது.

முதல் ஆட்டத்திலேயே ஹர்திக் மீது ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் இருந்தனர். கூடவே அந்த போட்டியில் மும்பை அணி படுதோல்வியடைந்தது. குஜராத் அணி 233 ரன்களை சேர்த்தது.

மும்பை அணி விளையாடிய அடுத்த ஆட்டமும் அந்த அணிக்கு தலைவலியாக மாறியது. ஐதாராபாத் அணி 277 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் எனும் சாதனை, 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராகவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஹர்திக் மீதான அழுத்தம்

மும்பை அணியின் மோசமான செயல்பாடுகளாலும் ஹர்திக் மீதான அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் மும்பை ரசிகர்கள் கருத்து பதிவிடத் தொடங்கினர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஹர்திக்கை எல்லை மீறி கேலி செய்வது அதிகரித்தது.

ரசிகர்களின் இந்த செயல்பாட்டை இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கண்டித்துப் பேசினார். தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், ரசிகர்களுக்கு இடையிலான மோதல் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

“வீரர்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நம் நாடு. ரசிகர் சண்டைகள் இப்படி ஒரு அசிங்கமான பாதையில் செல்லக் கூடாது. இந்தியாவில் மட்டும் தான் இதுபோன்று நடக்கும். இதர நாட்டு வீரர்களின் ரசிகர்கள் யாரும் தங்களுக்குள் சண்டையிடுகிறார்களா?

இது ஒரு சினிமா கலாசாரம். விளையாட்டை ஒருபோதும் சினிமாவுடன் ஒப்பிடாதீர்கள். சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்களே தோனியின் கீழ் விளையாடியுள்ளனர். உங்களுக்கு பிடித்த வீரர்கள் அல்லது அணியைப் பற்றி நீங்கள் விரும்புவதை கூற உங்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் மற்றொரு வீரரை தாழ்த்தி பேசாதீர்கள்” என அஷ்வின் குறிப்பிட்டார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தற்போது அஷ்வின் விளையாடி வருகிறார்.

“ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை என்பது அவரது உடல் மொழியில் தெரிகிறது. அவர் தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார்” என முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

தொடரும் மும்பை அணியின் தோல்விகள்

இந்த நிலையில், தொடச்சியான இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜஸ்தானை எதிர்த்து திங்கட்கிழமை சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

முதல் இரு ஆட்டங்கள் மும்பைக்கு வெளியில் நடந்தன. முதல்முறையாக சொந்த மண்ணில் விளையாடியது மும்பை இந்தியஸ், ஆனால் அப்போதும் ஹர்திக் மீதான ரசிகர்களின் அதிருப்தி குறைந்தபாடில்லை.

போட்டியிலும் கோட்டைவிட்டது மும்பை. 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது. நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாத ஒரே அணியாக மும்பை அணி வலம் வருகிறது. மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடமே ஹர்திக் பாண்டியா வழங்கிவிடலாம் என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

ஹர்திக் - ரோஹித் இடையே என்ன நடக்கிறது?

திங்கட்கிழமை நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை ரசிகர்கள் ஹர்திக்கிற்கு எதிராக கூச்சலிட்டபோது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ரோஹித் ரசிகர்களை அமைதி காக்கும்படி சைகை செய்வது போன்ற சில காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

ஹர்திக்கிற்கு எதிராகவும் ரோஹித்திற்கு ஆதரவான ஒரு மனநிலையிலும் மும்பை ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஹர்திக்- ரோஹித் இடையேயான உறவு எப்படி உள்ளது என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஆனந்திடம் கேட்டோம்.

“ஹர்திக் ஒரு போட்டியில் ரோஹித்தை லாங்-ஆன் பீல்டில் நிற்க வைத்தார். இதை வைத்து, இருவருக்கும் இடையே ஏதோ விரோதம் உள்ளது போல ரசிகர்கள் தான் கற்பனையாக பல கதைகளை உருவாக்குகிறார்கள். இருவருமே தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இதையெல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

தோனி கேப்டனாக இருந்தபோது மூத்த வீரர் சச்சினை அவர் லாங்-ஆன் பீல்டில் நிற்க வைக்கவில்லையா. இப்போது அதே தோனி, ருத்ராஜ் கேப்டன்சியின் கீழ் ஆடவில்லையா. இதற்கு முன் இந்திய அணிக்காக விராத் கோலியின் கேப்டன்சியின் கீழ் அவர் விளையாடியதைப் பார்த்தோம். இதையெல்லாம் பார்த்தும் கூட மும்பை அணி ரசிகர்கள் இவ்வாறு செய்வது வேடிக்கையாக உள்ளது” என்று கூறியவர் தொடர்ந்து பேசினார்.

“ஒரு கிரிக்கெட் வீரர் முதலில் ஒரு கேப்டனின் கீழ் ஆடுவார், பின்னர் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர் ஒரு புதிய கேப்டனை உருவாக்கிவிட்டு மீண்டும் அணியில் ஒரு வீரராக மட்டுமே தொடர்வார், பின்னர் ஓய்வு பெறுவார். இது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம் தான்.

ரசிகர்கள் தான் உணர்ச்சிகரமான மனநிலையில் இதை அணுகுகிறார்கள். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இதையெல்லாம் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். அவர்களுக்குள் எந்த விரோதமும் இருக்காது” என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் ஆனந்த்.

உண்மையில் என்ன பிரச்னை?

மும்பை அணிக்கு ஹர்திக்கின் கேப்டன்சி என்பது ஒரு சிக்கலே இல்லை என்று கூறும் ஆனந்த், சில குறிப்பிட்ட வீரர்களை அணியின் வெற்றிக்காக எப்படி பயன்படுத்துவது என தீர்மானிப்பதில் தான் சிக்கல் உள்ளதாக கூறுகிறார்.

"சூர்யகுமார் யாதவ் அணியில் இல்லாதது ஒரு பெரும் பின்னடைவு தான். ஹர்திக் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். தென்னாபிரிக்க இளம் வீரர் குவேனா மபகாவை அவர் பயன்படுத்தியது விமர்சிக்கப்பட்டது. மபகா இன்னும் இந்திய ஆடுகளங்களுக்கு பழகவில்லை. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்களே இந்த ஆடுகளங்களில் திணறுவார்கள்.

இத்தகைய சில சிக்கல்களே மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணம். இதனால் ரசிகர்களும் ஹர்திக்கிற்கு எதிராக இருக்கிறார்கள். சூர்யகுமார் மீண்டும் அணிக்குள் வருவார், டிம் டேவிட்டும் பார்முக்கு வருவார். சீக்கிரமாகவே இந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து மும்பை அணி வெற்றியை நோக்கிச் செல்லும். அப்போது ஹர்திக்கை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் ஆனந்த்.

இத்தனை சர்ச்சைகளுக்கு நடுவே, இதுவரை மும்பை அணி நிர்வாகம் ஹர்திக்கிற்கு எதிராக ரசிகர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் கூறவில்லை. ஹர்திக் கேப்டனாக தொடர்வாரா? சரிவில் இருந்து மும்பை அணியை மீட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)