மதுரை அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அரசு அமைத்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கின் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்தக் காளைகளை மாடு பிடிவீரர்கள் மல்லுக்கட்டி பிடித்து பரிசுகளை அள்ளினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் போட்டி போட்டு விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், ரொக்கம் தங்க காசு, சைக்கிள், பரிசாக வழங்கப்பட்டது.
மொத்தமாக 6 சுற்றில் 478 காளைகள் 250 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் அதிக காளைகளை பிடித்த பூவந்தியைச் சேர்ந்த மாடு பிடிவீரர் அபிசித்தர் 10 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார். அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநதி ஸ்டாலின் சார்பில் ஒரு கார், தமிழ்நாடு அரசின் சார்பில் 1 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. இவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முறையாக காளை பிடித்ததை கணக்கிடாமல் இரண்டாமிடம் அறிவிக்கப்பட்டதால் பரிசை பெற மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் , இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா காளைக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பில் ஒரு கார், அரசு சார்பில் ஒரு லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பிடித்த வீரர்கள் பரத் குமார், தமிழரசு மற்றும் காளைக்கு 75 ஆயிரம் ரொக்கம், ஒரு இருச் சக்கர வாகனம், மூன்றாமிடம் பிடித்த வீரர் மணிகண்டன் மற்றும் காளைக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.
முழு விவரம் காணொளியில்....

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



