You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நந்தன்: அந்த ஒரு விமர்சனத்திற்கு இப்படத்தின் மூலம் பதில் கொடுத்துள்ளாரா சசிகுமார்?
தமிழக ஊராட்சி பதவிகளை வகிக்கும் தலித் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளையும் ஆதரவையும் பெற்று பதவிக்கு வரும் தலித் தலைவர்கள் எவ்வாறு கைபொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நந்தன் படத்தின் ஒன்லைன்.
இந்த படத்தை ரா. சரவணன் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஆர்.வி. சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
கதை என்ன?
புதுக்கோட்டையில் உள்ள வணங்கான்குடி என்ற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக அப்பகுதியில் இருக்கும் ஆதிக்க சாதியினரே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். கொப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) பல ஆண்டுகளாக அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத சூழலில் அந்த ஊராட்சி ரிசர்வ் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த, அவர்களுடைய பேச்சை கேட்கும் ஒருவரை தலைவராக தேர்வு செய்வோம் என்று கொப்புலிங்கம் அவருடைய வீட்டில் வேலை செய்யும் அம்பேத்குமாரை (சசிகுமார்) அப்பதவிக்காக போட்டியிட வைக்கிறார்.
அம்பேத்குமார் கைபொம்மையாக பதவி வகிப்பாரா அல்லது சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுப்பாரா என்பதே படத்தின் கதை.
நடிப்பும் இயக்கமும் எப்படி?
"எந்த நேரமும் வெத்தலை குதப்பும் வாய், தோள்பட்டை வரை வளர்ந்த முடி, அழுக்கு பனியன், 'அய்யா என்ன செஞ்சாலும் நல்லதுக்குதான்' என வெள்ளந்தியாக நம்பக்கூடிய குணம் என கூழ்பானை (படத்தில் சசிகுமாரை அழைக்கும் பெயர்) கதாபாத்திரத்தில் அவர் ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் மீட்டர் மாறாமல் நடித்துள்ளார். ஆனால், பிரசிடெண்ட்ட் ஆன பிறகு அவருடைய குணாதிசயம் மாறவில்லை என்றாலும் சில இடங்களில் கூழ்பானையையும் மீறி சசிகுமார் நமக்கு தெரிவதை தவிர்க்க முடியவில்லை," என்று விமர்சனம் செய்துள்ளது தமிழ் இந்துவின் காமதேனு.
"தென் மாவட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த கதாபாத்திரங்களிலேயே சசிகுமார் நடித்து வருகிறார் என அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தன. அதை உடைக்கும் விதமாக, நந்தனில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நந்தனில் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்," என்று விமர்சித்துள்ளது தினமணி.
பாலாஜி சக்திவேல் நடிப்பு குறித்து கூறும் காமதேனு, சாதிய ஆணவத்தை சுமந்து திரியும் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி போய் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளது.
சசிகுமாரின் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி தேவையான பங்களிப்பை செலுத்துகிறார். சமுத்திரகனியின் சிறப்பு தோற்றம் கவனிக்க வைக்கிறது. கிராமத்து எளிய மனிதர்களை படத்துக்குள் கொண்டு வந்த நடிக்க வைத்திருப்பது யதார்த்தம் கூட்டுகிறது என்று விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.
இயக்கம் எப்படி?
"சாதிய ரீதியா ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வந்தால் தங்களுடைய மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என நம்புகிறார்கள். ஆனால், அந்த அதிகாரத்துக்கு வர எதிர்கொள்ளும் அவமானங்கள், பதவிக்கு வந்த பிறகும் அவர்கள் நடத்தப்படும் விதம் இதெல்லாம் ‘நந்தன்’ படத்தில் அசலாக கொண்டு வர நினைத்த இயக்குநர் இரா. சரவணனுக்கு வாழ்த்துகள்.
இந்தக் கதையை சினிமாவாக்க கமர்ஷியலாக எந்த விஷயங்களையும் கொண்டு வராமலும், திடீரென கதாநாயகனை சூப்பர் ஹீரோ போல சித்தரிக்காமல் இருப்பதும் ஆறுதலாக உள்ளது" என்றும் விமர்சனம் செய்துள்ளது காமதேனு.
"படம் துவங்கும் போதே அழுத்தமான வசனங்களால் அந்த ஊரின் நிலை இதுதான் எனத் தெரிய வருகிறது. 'ஆள்வதற்கு அல்ல... வாழ்வதற்குக் கூட இங்கு அதிகாரம் தேவை,' என்கிற வசனம் நந்தனின் கதையை முழுமையடைய வைக்கிறது. அரசியல் ரீதியான கேலி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. போகிற போக்கில், இன்றைய சில அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, செயல்களையும் கிண்டல் செய்திருக்கிறார்," என்று விமர்சித்துள்ளது தினமணி.
''கூழ்ப்பானை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் தொடர்ந்து பல இடங்களில் அவரின் இடம் இதுதான் என்று கொப்புலிங்கம் மற்றும் அவரின் ஆட்கள் தொடர்ச்சியாக உறுதிப்படுத்துகின்றனர். இது நிறைய இடங்களில் வந்தாலும் கூட, உண்மையின் உரைக்கல்லாக திகழ்கிறது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்தைப் பற்றி கூறியுள்ளது.
தடுமாறும் நந்தன்
"அதிகாரமும் சாதியும் இவர்களை எந்த அளவுக்கு ஒடுக்குது, இதனால் அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல காட்சிகளில் காட்டியிருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. பல காட்சிகள் அடுத்து இதுதான் நடக்க இருக்கிறது என்பதையும் எளிதாக கணிக்க முடிகிறது. பல விஷயங்களை வலிந்து திணித்த உணர்வும் பார்வையாளர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். 'நந்தன்' பலவீனமான திரைக்கதையால் தடுமாறுகிறது," என்றும் காமதேனு விமர்சனம் செய்துள்ளது.
"ஆனால், நந்தன் திட்டமிட்டபடி முழுமையான திரைப்படமாக உருவாகவில்லை. திரைக்கதையும் உருவாக்கமும் படத்தின் பெரிய பலவீனம். கத்துக்குட்டி, உடன் பிறப்பே போன்ற படங்களை இயக்கியவர் ஏன் நந்தனின் உருவாக்கத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்தார் எனத் தெரியவில்லை," என்று விமர்சனம் செய்துள்ளது தினமணி.
நந்தனின் கதை முக்கியமானது என்றாலும் ஒரு திரைப்படமாக ஏமாற்றத்தையே தருகிறது என்கிறது தினமணி விமர்சனம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)