You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லட்சுமி: ராயல் என்ஃபீல்ட் ஓட்டும் 56 வயது பெண் - 30 ஆண்டு மனத்தடையை உடைத்த 'அந்த தருணம்' எது?
- எழுதியவர், மகாலட்சுமி.தி.ரா
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருமணத்திற்கு முன்பு தங்களுக்குள் இருக்கும் ஆசை, கனவு லட்சியம் ஆகியவற்றை திருமண வாழ்க்கைக்கு பிறகு பல பெண்கள் இந்த சமூகத்தில் தொடர்வதில்லை.
அதிலும் குழந்தை பெற்ற பிறகு பல பெண்களுக்கு, குடும்பம்,குழந்தைகள், வீட்டுப்பொறுப்பு என அவர்களது வாழ்க்கை நகர்ந்துக் கொண்டே இருக்கும்.
இப்படி சராசரியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை தனது மகளின் உதவியோடு மாற்றி, கனவுகளை தேடிச் சென்று சாதித்த ஒரு தாயின் கதை தான் இது.
டிவிஎஸ் 50 முதல் ராயல் என்பீல்ட் வரை
"வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தா அவுங்களோட டிவிஎஸ் 50 எடுத்து ஓட்டுறதுல இருந்து ஆரம்பிச்ச என்னோட பைக் பயணம், இப்போ ராயல் என்பீல்ட் பைக் ஓட்டுற வர வளர்ந்து நிக்குது. இது அனைத்திற்கும் என் மகள் தான் காரணம்," என்று கூறுகிறார் லட்சுமி.
56 வயதான லட்சுமிக்கு பைக் ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். பதின்ம வயதிலேயே பைக் மீதான் காதலால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பைக் ஓட்டி வந்துள்ளார் லட்சுமி.
தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர்.
ராயல் என்ஃபீல்ட் பைக் ஓட்டி இவர் பதிவிட்ட வீடியோ சமூக ஊடக பக்கங்களில் வைரலானது. பிபிசி தமிழுக்காக லட்சுமியிடம் பேசினோம்.
லட்சுமியின் தந்தை லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். இதனால் தன்னுடைய இளம் வயதிலேயே லாரியில் தனது தந்தையுடன் செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தந்தையுடன் லாரியில் பல ஊர்களுக்கு இளம் வயதிலேயே லட்சுமி சென்று வந்துள்ளார்.
"அப்பாவுடன் லாரியில் செல்வதை பார்த்து ஊரில் பலவாறு என்னை குறித்து விமர்சனம் செய்தார்கள். ஆனால் நான் அதை நினைத்து கவலைப்படவில்லை. அப்பாவுடன் தொடர்ந்து லாரியில் பயணம் மேற்கொண்டேன்," என்கிறார் லட்சுமி.
பின்னாளில், தந்தைக்கு உதவியாக உறவினர்களின் பைக்கை எடுத்துக் கொண்டு லாரிக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்க சென்று வந்த லட்சுமி, பெண் பிள்ளைகள் அனைத்திலும் திறம்பட இருக்க வேண்டும் என்று தனது தந்தை அடிக்கடி கூறியதை நினைவுகூர்ந்தார்.
திருமணத்திற்கு பிறகு தடைபட்ட ஆசை
26 வயதில் திருமணம், அதைத் தொடர்ந்து குழந்தை என லட்சுமியின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களால் அவரால் பைக் ஓட்டும் ஆசையை பூர்த்தி செய்யமுடியவில்லை.
குழந்தையை வளர்ப்பது, குடும்பத்தை பராமரிப்பது என அவரின் வாழ்க்கை இயல்பாக மாறிவிட்டது.
ஆனாலும் விவசாயியான தனது கணவருக்கு உதவியாக, கனரக வாகனம் ஓட்டிய அனுபவத்தைக் கொண்டு, வயலில் டிராக்டர் ஓட்டி அவ்வப்போது கணவருக்கு உதவியாக இருந்துள்ளார் லட்சுமி.
பின்பு, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
56 வயதில் மீண்டும் பைக் ஓட்ட ஆரம்பித்தது எப்படி ?
லட்சுமியின் 19 வயது மகளான மேகா, கல்லூரியில் படித்து வருகிறார். தாயைப் போலவே, மேகாவும் தனது 17 வயதிலிருந்தே பைக் ஓட்ட ஆரம்பித்துள்ளார்.
18 வயது நிறைவடைந்த பிறகு தனது பெயரில் பைக் ஒன்றை வாங்கி அதை ஓட்ட முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று ஓட்டி வருகிறார் மேகா.
இது குறித்து பிபிசியிடம் பேசிய மேகா, "ஆரம்ப காலத்தில் அப்பாவிடம் பைக் ஓட்ட கற்றுக்கொடுக்கும் படி கேட்பேன். ஆனால் அப்பா மறுத்து விடுவார். பின்பு நானே என் அண்ணனின் பைக்கை ஓட்டிப் பழக ஆரம்பித்தேன்."
தன்னுடைய பைக் பயணத்தின் முக்கிய தருணமாக அந்த ஒரு நாளை நினைவு கூர்ந்தார் மேகா.
"ஒரு நாள், அம்மா விளையாட்டாக எனக்கு மீண்டும் பைக் ஓட்ட ஆசையாக இருக்கிறது என்றார். நானும், அம்மாவிடம் ‘நீ பைக் ஓட்டுமா’ என்று சொன்னேன். ஆரம்பத்தில் தயங்கிய அம்மா, பிறகு பைக்கை ஓட்ட ஆயத்தமானார்," என்கிறார் மேகா.
பைக்கை மீண்டும் ஓட்ட தனது தாய் விரும்பியபோது, பிறர் என்ன சொல்வார்கள் என்ற தயக்கம் அவரிடம் இருந்தது. அந்த மனத்தடையை உடைத்து அவரிடம் என்னுடைய பைக்கை கொடுத்து ஓட்டச் சொன்னதாக மேகா கூறுகிறார்.
"ரொம்ப வருடம் கழிச்சு பைக் ஓட்டும் போது அம்மா முதலில் பயந்தாங்க. பைக்க பேலன்ஸ் பண்ண சிரமமா இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு அப்புறம் சிறப்பாக ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க," என்று தனது தாயின் ஆசையை பூர்த்தி செய்த மகிழ்ச்சியை விவரித்தார் மேகா.
தனது கனவுக்கு மீண்டும் வடிவம் கிடைத்தது குறித்து பிபிசியிடம் பேசிய லட்சுமி, "ஆசையா இருக்குதுனு மறுபடியும் வண்டி ஓட்ட ஓத்துக்குட்டேன். ஆனால் ராயல் என்ஃபீல்ட் பைக் ரொம்ப கனமா தான் இருந்துச்சு. அதனால கண்டிப்பா முடியாதுன்னு விட்டுட்டேன். கடைசியா என்னோட பொண்ணு மேகாவோட உதவியால இத்தனை வருசம் கழிச்சு திரும்பவும் பைக் ஓட்டியிருக்கேன்."
அம்மா - பொண்ணு ட்ரெண்டிங் காம்போ
தாய் லட்சுமியும், மகள் மேகாவும் பைக் ஓட்டும் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது.
மகள் மேகா அவரது ஸ்போர்ட்ஸ் பைக்கிலும், தாய் லட்சுமி அவரது ராயல் என்ஃபீல்ட் பைக்கிலும் செல்லும் ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் இதுவரை 19 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
"பெண்கள் சமையலறையில் முடங்கக் கூடாது என அம்மா அடிக்கடி கூறுவார் . அதுபோலவே இன்று அம்மாவின் ஆசையையும் நிறைவேற்றி வருகிறேன்," என்று கூறும் மேகா பைக் ரைடராக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்.
தற்போது இருவரும் பைக் ஓட்டும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், யூ டியூப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இருவரும் இணைந்து தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ்நாட்டில் இன்னும் பல ஊர்களில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன, அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள பலரும், பெண்பிள்ளைக்கு பைக் எதுக்கு, படிக்கும் காலத்தில் இதெல்லாம் தேவையா என்று பேசுவது இன்றும் தொடர்கிறது. அன்று எனக்கு நடந்ததை, இப்போது என் மகளும் எதிர்கொள்கிறாள்," என்றார் லட்சுமி.
சமூகத்தில் மற்றவர்கள் பேசும் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு, பைக் ரைடராக ஆக வேண்டும் என்கிற தனது மகளின் கனவுக்கு உறுதுணையாக நிற்பேன் என்று உறுதியுடன் கூறுகிறார் லட்சுமி.
"வாழ்க்கைல நமக்கு புடிச்சத பண்ணனும், அதுல எவ்ளோ சிறப்பா பண்றோம் அப்படிங்கிறது தான் முக்கியம். பொண்ணுங்களுக்கு கல்யாணம், சீர்வரிசை இதையெல்லாம் விட சுதந்திரமா வாழ்க்கைல முடிவு எடுக்க விடணும்," என்று தனது பைக்கில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி லட்சுமி கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்