'210 கிமீ வேகத்தில் பறந்த கார்கள்' - அமெரிக்காவை அஞ்சி நடுங்கச் செய்த வானொலி நிகழ்ச்சி

அமெரிக்கா, தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், ஆசன் வெல்ஸ், வானொலி நிகழ்ச்சி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றுக்காக சிபிஎஸ் ஸ்டுடியோவில் ஒத்திகை செய்யும் ஆசன் வெல்ஸ்
    • எழுதியவர், விட்னஸ் ஹிஸ்டரி ப்ரோகிராம்
    • பதவி, பிபிசி உலக சேவை

ஒரு அறிவியல் புனைவு நாவலை தழுவி 1938-ஆம் ஆண்டில் ஒலிபரப்பான வானொலி நிகழ்ச்சி, வரலாற்றில் மிகவும் பிரபலமான ஒலிபரப்புகளுள் ஒன்றாக ஆகும் அளவுக்கு பரவலாக பயத்தைக் கிளப்பியது.

இதற்கு பின்னால் இருந்தவர் 23 வயதான ஆசன் வெல்ஸ் (Orson Welles). நிகழ்ச்சி ஒலிபரப்பான மூன்று ஆண்டுகள் கழித்து அவர் சிட்டிசன் கேன் (Citizen Kane) எனும் திரைப்படத்தை இயக்கி, இணைந்து எழுதி நடிக்கவும் செய்தார். அந்தத் திரைப்படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி செக்கோஸ்லொவாகியா மீது ஹிட்லரின் நாஜி ஜெர்மனி படையெடுத்த ஒரு மாதம் கழித்து வந்த ஹாலோவீனுக்கு முந்தைய நாள் இரவு ஒலிபரப்பானது. 1918-ஆம் ஆண்டில் உருவான செக்கோஸ்லொவாகியா நாடு, ஹிட்லர் படைகளால் 1938-ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டது.

அதிகரித்து வந்த பாசிசம் மற்றும் உடனடி போருக்கான அச்சுறுத்தல் ஆகியவை மேலோங்கி இருந்த காலம் அது.

ஆசன் வெல்ஸும் அவருடைய மெர்க்குரி தியேட்டரும் ஹெச்ஜி வெல்ஸ் எழுதிய 'தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு நாடக நிகழ்ச்சி தயாரித்தனர். இந்த நாவல், செவ்வாய் கிரகவாசிகள் பூமி மீது படையெடுப்பது போன்ற புனைவை அடிப்படையாகக் கொண்டது.

நாம் கேட்கப் போவது ஒரு புனைவு என்பதை அறியாமலேயே, சுமார் 60 லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை கேட்க தயாராயினர்.

"நிகழ்ச்சியை கேட்டவர்கள் திடீரென மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் வாகனத்தை வேகமாக ஓட்ட ஆரம்பித்தனர்," என 1970-ஆம் ஆண்டில் பிபிசியிடம் ஆசன் வெல்ஸ் கூறியிருந்தார். உண்மையாகவே செவ்வாய் கிரகவாசிகள் பூமி மீது படையெடுப்பதாகவே மக்கள் நம்பியதாக பழைய நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்தார்.

ஒரு 'சுவாரஸ்யமான' தழுவல்

அமெரிக்கா, தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், ஆசன் வெல்ஸ், வானொலி நிகழ்ச்சி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த நாவல் 1958-ஆம் ஆண்டில் படமாக எடுக்கப்பட்டது

1897-ஆம் ஆண்டு முதன்முறையாக பிரசுரமான ஹெச்ஜி வெல்ஸ் நாவலின் கதைப்படி, செவ்வாய் கிரகத்தில் இருந்து உலோகத்தாலான சிலிண்டர்கள் பிரிட்டனின் சர்ரி நகரின் கிராமப்புற பகுதியில் விழும். இந்த அழிவுகரமான கதிர்வீச்சை உமிழும் மூன்று கால்களை கொண்ட சண்டையிடும் இயந்திரங்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ராணுவம் வரவழைக்கப்படும்.

1938-ஆம் ஆண்டில் ஹோவார்ட் கோச் எனும் இளம் எழுத்தாளர் இந்தக் கதையை வானொலி நிகழ்ச்சியாக தயாரிப்பதற்காக பணியாற்றினார்.

"வெல்ஸின் நாவலில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த விளக்கம், அவற்றின் ஆயுதங்கள் மற்றும் படையெடுப்பு நிகழ்ந்ததாக ஒரு பொதுவான யோசனை தவிர வேறு எதுவும் இல்லை," என கோச் பின்னர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

அந்த நாடகத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குவதற்காக அதற்கான காட்சி அமைப்பை புதுப்பித்தனர். வேற்றுக்கிரகவாசிகள் படையெடுக்கும் பகுதியாக அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

"இதற்கான திட்டமிடல் எனக்கு சிறிது உற்சாகத்தை அளித்தது," என கோச் நினைவுகூர்ந்தார்.

"எனக்கு அதிக நேரம் இருக்கவில்லை, நான் வரைபடத்தை விரித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டேன், பென்சிலை கீழே வைத்துவிட்டேன், அது க்ரோவர்ஸ் மில் பகுதியில் இறங்கியது."

நியூ ஜெர்சியில் உள்ள க்ரோவர்ஸ் மில், செவ்வாய் கிரகத்திலிருந்து வேற்றுகிரகவாசிகளின் இயந்திரங்கள் தரையிறங்கும் பகுதியாக அந்நிகழ்ச்சியில் மாற்றப்பட்டது.

அமெரிக்கா, தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், ஆசன் வெல்ஸ், வானொலி நிகழ்ச்சி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வானொலி நிகழ்ச்சியும் அதனால் ஏற்பட்ட பீதியும் அமெரிக்காவின் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியானது.

நிகழ்ச்சி ஒலிபரப்பான இரவு... நியூயார்க்கில் உள்ள வானொலி ஸ்டுடியோவில் நடிகர்கள் குழுமினர், பின்னர் ஆசன் வெல்ஸ் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

நிகழ்ச்சி தொடங்கிய நான்கு நிமிடங்களுக்குப் பிறகு, வேறொரு வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி முடிந்துபோன நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால், அவர்கள் நாடகத்தின் அறிமுகத்தைத் தவறவிட்டிருந்தனர், இசைக்குழுவினரால் இசை வாசிக்கப்படுவதை கேட்டனர். ஆனால், சமீபத்திய செய்தி ஒன்றால் அந்த இசை தொடர்ந்து குறுக்கிடப்பட்டது.

நிகழ்ச்சியை கேட்டவர்களுக்கு மிகுந்த பயத்தைக் கிளப்பிய அம்சம் எது என ஆசன் வெல்ஸிடம் கேட்டபோது, அதுகுறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றார். "எனக்கு தெரியவில்லை. பல விஷயங்கள் இருக்கலாம்," என்றார் அவர்.

அப்போதைய அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் குரல் ஒரு காரணமாக இருக்கலாம்.

"ரூஸ்வெல்ட்டின் குரலில் மிகவும் சிறப்பாக பேசக்கூடிய நடிகர் எங்களிடம் இருந்தார்," என வெல்ஸ் நினைவுகூர்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த நடிகர், "இந்த நாட்டின் குடிமக்களே, இந்த நாடு எதிர்கொள்ளும் சூழ்நிலையின் தீவிரத்தை மறைக்க நான் முயற்சிக்க மாட்டேன்," என்று தெரிவிப்பார்.

அமெரிக்கா, தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், ஆசன் வெல்ஸ், வானொலி நிகழ்ச்சி,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிபிஎஸ் வானொலி ஸ்டுடியோவில் மைக் முன்பு நிற்கும் ஆசன் வெல்ஸ்

உண்மையில் பயம் அப்போதுதான் ஏற்பட்டிருக்கும் என வெல்ஸ் நம்புகிறார். "அப்போதுதான் மக்கள் சாலைகளில் ஓடியிருப்பார்கள் என நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

நாடகத்தை நம்பத்தகுந்த வகையில் உருவாக்க, தயாரிப்பு குழு சில சாமர்த்தியமான தந்திரங்களை செய்தது. நடக்கும் இந்த மோசமான விஷயத்தைப் (நிகழ்ச்சி) பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்காக ஒரு அனுபவமற்ற ஆபரேட்டரை அவர்கள் வைத்திருந்தனர், செவ்வாய்கிரகவாசிகள் வருகிறார்கள் என்பதை செய்தியாளர் ஒருவர் உயிர்ப்புடன் விவரித்தார்.

"காடுகள் தீப்பிழம்புகளாக மாறிவருகின்றன... எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.... தற்போது இந்த வழியாக வருகிறது."

அதன் பின் தான் நடுங்க வைக்கும் தருணம் வந்தது.

அமைதி.

"நாங்கள் ஒரு மயான அமைதியை ஏற்படுத்தியதுதான் உண்மையான தந்திரம், சிறுசத்தம் கூட இல்லை," என வெல்ஸ் கூறுகிறார்.

"அதன்பின் மைக் விழும் சத்தம் கேட்கும்... அதன் பின் இன்னும் அமைதியாக இருக்கும்."

அதன்பின், "யாராவது இருக்கிறீர்களா?" என ஒரு தனித்த குரல் ஒன்று வெடித்துக் கிளம்பும்.

அதை நினைவுகூறும் போது வெல்ஸ் சிரிக்கிறார்: "அதன் பின் தான் குடியிருப்புவாசிகள் தலைகளில் துண்டை போட்டுக்கொண்டு ஓடினார்கள். தலையில் ஏன் துண்டை போட்டு ஓடினார்கள் என தெரியவில்லை, ஆனால் அப்படி தான் செய்தனர்."

'செவ்வாய்கிரகவாசிகளால்'

ஞாயிற்றுக்கிழமை இரவு அது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கடந்து சென்ற கார்களைக் கண்டு போக்குவரத்து காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். "வேகத்தைக் குறைக்குமாறு காவலர்கள் அறிவுறுத்தினர். ஆனால், ஓட்டுநர்கள் 'முடியாது, நான் மலைப்பகுதிக்கு செல்கிறேன்' என பதிலளித்தனர்," என பிபிசியிடம் அதை நினைவுகூர்ந்தபோது வெல்ஸ் தெரிவித்தார்.

க்ரோவர்ஸ் மில் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளுக்கு அது சிரிக்கக்கூடிய விஷயம் அல்ல.

"செவ்வாய் கிரகவாசிகள் தரையிறங்குவது பற்றிய இந்தக் கதையை அவர்கள் தொடர்ந்தனர், அது நொடிக்கு நொடி பயங்கரமாகிக் கொண்டிருந்தது. நாங்கள் அங்கிருந்து செல்வது நல்லது என முடிவெடுத்தோம்," என 1988-ஆம் ஆண்டு பிபிசி நேர்காணலுக்கு குடியிருப்புவாசி ஒருவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

"அதனால், நாங்கள் காரில் ஏறினோம். மின்சாரம் இல்லாத நிலையில், மிகுந்த இருட்டாக இருந்ததால் மண்ணெண்ணெய் விளக்கை எடுத்துக்கொண்டது எனக்கு நினைவில் உள்ளது. அந்த இடத்தைப் பார்த்து நான் எனக்குள், 'இங்கு நான் மீண்டும் வருவேனா என தெரியவில்லை. தொல்லியல் ஆய்வாளர்கள் வந்து இதைப் பார்த்துவிட்டு இங்கிருந்த மக்கள் செவ்வாய்கிரகவாசிகளால் இங்கிருந்து சென்றுவிட்டனர் என கூறுவார்கள்' என கூறிக்கொண்டேன்."

அமெரிக்கா, தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், ஆசன் வெல்ஸ், வானொலி நிகழ்ச்சி,
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மற்றொரு குடியிருப்புவாசி ஒருவர், "எதையாவது" சுடுவதற்கு தயாராக ரைஃபிள் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டதாக கூறினார்.

"நாங்கள் க்ரோவர்ஸ் மில்ஸ் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றோம், அங்கு ஏராளமானோர் இருந்தனர். 100 அடி உயர செவ்வாய்கிரகவாசி என ஏதும் இல்லை... அவர்கள் எங்கு சென்றனர் என நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். அங்கு நாங்கள் எவ்வளவு நேரம் இருந்தோம் என தெரியவில்லை, ஆனால் நாங்கள் திரும்பிவிட்டோம், எல்லோரும் கோபத்தில் இருந்தனர்."

மோசமான பெயர் எடுத்த அந்த நிகழ்ச்சி குழப்பங்களை விளைவித்தது, சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன, ஆனால் உயிரிழப்புகள் இல்லை என நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுள் ஒருவர் கூறினார். இச்சம்பவம், குற்றங்கள் அல்லது பேரழிவுகள் பற்றிய புரளி கதைகளை ஒலிபரப்புவதைத் தடை செய்ய தூண்டியது.

இந்த நாடகத்திற்கு பின்னால் இருந்த குழு, வரலாற்றை உருவாக்கியது. சிட்டிசன் கேன் படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குநர்களுள் ஒருவராக ஆசன் வெல்ஸ் உருவானார். ஹாலிவுட்டின் கிளாசிக் படமான காசாபிளாங்கா படத்தின் திரைக்கதையில் ஹோவர்ட் கோச் பங்காற்றினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு