You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா அபார வெற்றி: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை பதிவு செய்து விராட் கோலி அசத்தியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றனர்.
ரோகித் - சுப்மான் கில் தொடக்க ஜோடி அசத்தல்
இந்தியா - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களம் கண்ட கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மான் கில்லும் நிலைத்து ஆடினர். பொறுமையாக ஆடிய அவர்கள் அவ்வப்போது ஏதுவான பந்துகளை எல்லைகோட்டிற்கு விரட்டவும் தவறவில்லை. இதனால், இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ந்து, 6 ரன்னுக்கும் அதிகமாகவே இருந்தது.
இருவருமே நிலைத்து ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 100 ரன்களை கடந்துவிட்டது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித்தும், சுப்மான் கில்லும் அரைசதம் விளாசினர்.
விராட் கோலி அபார சதம்
20-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. சுப்மான் கில் 6 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன் எடுத்த நிலையில் இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், 83 ரன்களை எடுத்த நிலையில் தில்ஷன் மதுஷன்கா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 67 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.
தொடக்க ஜோடி ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் 28 ரன்களும், ராகுல் 39 ரன்களும் சேர்த்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தனர்.
அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணி 373 ரன் குவிப்பு
கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் இது 45 ஆவது சதம், சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 73வது சதமாக அமைந்தது.
இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 87 பந்துகளில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 113 ரன் சேர்த்த நிலையில் கசுன் ரஜிதா பந்துவீச்சில் குசால் மென்டிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களைக் குவித்தது.
இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே சோகம்
இதையடுத்து, 374 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 23 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 5 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களம் கண்ட குசால் மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
நிலைத்து ஆடிய தொடக்க வீரர் நிஸாங்கா அவுட்
மற்றொரு தொடக்க வீரர் நிஸாங்கா நிலைத்து நின்று நிதானமாக ஆடினார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த அசலங்கா 23 ரன்களும், தனஞ்ஜெயா 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷனகா நேர்த்தியாக, அதேநேரத்தில் அதிரடியாக மட்டையை சுழற்றினார். ஆனால், அவருக்கு மறுபுறத்தில் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நிலைத்து ஆடிய தொடக்க வீரர் நிஸாங்கா 72 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கடைசி வரை போராடிய இலங்கை கேப்டன்
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் மலைபோல் நின்று இலங்கை அணியை கரை சேர்க்க கேப்டன் ஷனகா போராடினார். அவ்வப்போது சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அவர் பறக்கவிட்டார்.
எனினும், அவரது ஆட்டம் இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் தருவதாக மட்டுமே அமைந்தது. வெற்றி இலக்கை எட்டுவதற்குப் போதுமானதாக இல்லை.
இந்தியா 67 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எடுத்தது. ஷனகா 88 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடடன் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா தரப்பில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 3 விக்கெட், முகமது சிராஜ் 2 விக்கெட், முகமது சமி, ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்