You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விராட் கோலி: வெற்றியின் முகவராக மீண்டும் உயிர்த்தெழுந்த நாயகன்
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன் & அஸ்ஃபாக் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
சில கிரிக்கெட் வீரர்கள் ஸ்கோர் செய்வதில் கெட்டிக்காரர்கள். சோதனைகள் ஏதுமற்ற நிதானமான களத்தில் அற்புதமான ஷாட்களை செதுக்கி அவர்கள் தங்கள் சாதனை வரலாற்றை எழுதுவார்கள். ஆனால், விராட் கோலிகள், மகேந்திர சிங் தோனிகள், யுவராஜ் சிங்குகள் வேறு வகை உயிரினங்கள்.
களம் கொதித்துக்கொண்டிருந்தாலும், அணி படுகுழியில் இருந்தாலும் நிதானம் தவறாமல், பதறாமல் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, உடன் நிற்கும் வீரரின் தோளைத் தட்டிக் கொடுத்து, புலியின் வாய்க்குள் சென்றுவிட்ட ஆட்டின் தலையை உயிரோடு மீட்பது போல அழகாக வெற்றியை மீட்டுவிடும் அசகாய சூரர்கள் இவர்கள்.
இந்த வகை வீரரான விராட் கோலி, நீண்ட நாள்களாக ஃபார்மில் இல்லாமல் இருந்தது அவருக்கும், அணிக்கும் கவலையளிக்கும் விஷயமாக இருந்துவந்தது.
சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தான் ஃபார்முக்கு மீண்டுவிட்ட செய்தியை கூறிவிட்டார் விராட் கோலி.
ஆனால், அது சாதாரண அறிவிப்பு. இப்போது ஆஸ்திரேலியாவில் அவர் செய்திருப்பது பிரகடனம்.
டி20 உலகக் கோப்பை தொடர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். ஆஸ்திரேலிய ஆடுகளம். அணி கடும் சோதனையில் சோதனையில் சிக்கிய தருணம். ஃபார்முக்குத் திரும்பியதை ஒருவர் பிரகடனம் செய்வதற்கு இதைவிட பொருத்தமான நேரம் எது?
விக்கெட்டுகள் உதிர்ந்துகொண்டிருந்த நிலையில், ஒரு முனையில் நிதானமாக நின்று அணியை தோல்வியின் புதைகுழியில் இருந்து மீட்டு, தன்னையும் ஃபார்முக்கு மீட்டுக்கொண்ட விராட் கோலி, இந்த வெற்றியை கண்ணீரோடு கொண்டாடியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
ஆம் இந்த நாள் இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றிலும், கோலியின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத நாளாகத்தான் இருக்கப் போகிறது.
விராட் கோலிக்கு மட்டுமல்ல, அவரை உயிர் மூச்சாக பின்தொடரும் அவரது ரசிகர்களின் கன்னங்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியிருக்கும்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நிகரான எதிர்பார்ப்புடன் நடைபெற்ற பாகிஸ்தானுடனான சூப்பர் 12 ஆட்டத்தில், விராட் கோலி செய்த பங்களிப்பு கிரிக்கெட் வரலாற்றின் ஒளிமயமான பக்கங்களில் ஒன்று.
கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், சேவாக், ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் இன்றைய போட்டியை கிரிக்கெட் வரலாற்றின் சிறந்ததொரு ஆட்டமாக வர்ணித்துள்ளனர்.
'அவர் அழுததைப் பார்த்ததில்லை'
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்தியாவை தனது அதிரடியான ஷாட்களால் மீட்டெடுத்திருக்கிறார் கோலி. 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகனை, ரோஹித் சர்மா தனது தோளில் தூக்கி வைத்து கொண்டாடியது ரசிகர்களை உணர்ச்சிவயப்படுத்தியது.
ஆட்டம் முடிந்ததும் தனக்கே உரிய பாணியில் தரையில் ஓங்கி அடித்து உணர்ச்சிவசப்பட்டதோடு கோலியின் கண்களும் கலங்கியிருந்தன. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட விராட் கோலிக்கு இந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டம் ஓர் உற்சாக டானிக்.
"இது மாயம் போல இருந்தது. எனக்கு சொற்களே இல்லை. அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. எனக்கு உண்மையில் சொற்களே வரவில்லை. இறுதிவரை களத்தில் நின்றால் நம்மால் முடியும் என ஹர்திக் நம்பினார். ஷாஹின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடிவு செய்தோம். ஹாரிஸ் பாகிஸ்தானின் முதன்மையான பந்துவீச்சாளர். அவரது ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தேன். கணக்கு ரொம்ப சிம்பிள். நவாஸ் பந்துவீச மீதம் ஒரு ஓவர் இருந்தது. ஹாரிஸ் ஓவரை பிளந்துகட்டினால், அவர்கள் பயந்துவிடுவார்கள். அதைதான் நானும் செய்தேன். இதுநாள் வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் ஆடியது மறக்க முடியாததாக இருந்தது. ஆனால் அதைவிட ஒருபடி மேல் இன்றைய ஆட்டம் அமைந்தது" என்றார் விராட் கோலி.
வெல்லவே முடியாது என்கிற சூழலிலும் நம்பிக்கையை துளிர்விடச் செய்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த விராட் கோலி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையிலேயே மிகச்சிறப்பான விருந்தை படைத்திருக்கிறார்.
விராட் கோலியை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.. நான் ஒருபோதும் அவர் அழுததை கண்டதில்லை. நான் இன்று அதை பார்த்தேன். இது மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே.
உங்கள் வாழ்க்கையிலேயே இதுதான் மறக்க முடியாத ஆட்டம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு விருந்தாக அமைந்தது. முக்கியமாக ரவுஃப் வீசிய 19வது ஓவரில் பேக் ஃபூட்டில் நீங்கள் அடித்த அந்த சிக்ஸ், கண்கொள்ளா காட்சியாக அமைந்தது என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டினார்.
தலை வணங்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
The KING is back . Take a bow, Virat Kohli (அரசர் மீண்டும் வந்தார். தலைவணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் விராட் கோலி) என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டு தலை வணங்கியுள்ளது.
டி20 இன்னிங்ஸில் நான் பார்த்ததிலேயே இதுதான் ஒரு சிறந்த இன்னிங்ஸ் என முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். கோலி நெருக்கடியை சந்தித்த சமயங்களில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். கோலியின் இன்றைய ஆட்டம், form is temporary and class is permanent என்பதற்கான ஒரு நினைவூட்டலாக அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி ஆடிய விதத்திற்கு ஹேட்ஸ் ஆஃப். இந்தியாவுக்காக அவர் விளையாடியதில் இது மிகவும் சிறப்பான ஆட்டம். பார்ப்பதற்கே நன்றாக இருந்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்