ஐபிஎல்: கோடிகளை கொட்டிக் கொடுத்தும் ஏமாற்றம் தரும் நட்சத்திர வீரர்கள் - ஓர் அலசல்

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐ.பி.எல். தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் வெளியேறிவிட்டன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் முட்டி மோதுகின்றன.

2 ஆண்டு கொரோனா பேரிடர் கால இடைவெளிக்குப் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் வழக்கமான பாதைக்குத் திரும்பியுள்ளது. அனைத்து அணிகளுமே சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக அனுபவித்து ஆடி வருகின்றன. ஐ.பி.எல். என்றாலே பேட்ஸ்மேன்களின் வாண வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்ற இலக்கணம் மீறாமல் இம்முறையும் போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்னும் சொல்லப் போனால், வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக நடப்புத் தொடரில் பவுண்டரி, சிக்சர் மழை பொழிகிறது. பேட்ஸ்மேன்கள் கண்ட சதங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகம். அதிக முறை 200 ரன்களைத் தாண்டியது, 200 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது என இம்முறை பெரும்பாலான போட்டிகள் ரசிகர்களுக்கு சிறப்பாக விருந்து படைத்தன.

ஒரே ஓவரில் தலைகீழாக மாறிய ஆட்டங்கள், கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டங்கள் என எல்லாவற்றையும் தாண்டி கடைசிப் பந்தை வீசிய பிறகு வென்றுவிட்டதாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்த அணி பின்னர் தோற்றுப் போய் தலையை தொங்கவிட்டுச் சென்றது என நடப்பு ஐ.பி.எல். தொடரில் நடந்தேறிய பரபரபுக்கு பஞ்சமே இல்லை.

இம்முறை, சர்வதேச அனுபவம் இல்லாத, உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடிய இந்திய இளம் வீரர்களின் பங்களிப்பு அனைத்து அணிகளுக்குமே பிரதானமாகிவிட்டிருந்தது. சொற்பத் தொகைக்கு அவர்களை வாங்கிப் போட்ட அணிகள், அதனால் மிகப்பெரிய பலனை அடைந்தன. அதேநேரத்தில், கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி, சர்வதேச அளவில் மின்னிய நட்சத்திரங்களை வாங்கியும், சில அணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சின.

அந்த நட்சத்திரங்கள் ஐ.பி.எல்.லில் ஜொலிக்காமல் போனது அவர்கள் சார்ந்த அணிக்கே பெரும் பாதகமாக விடிந்தும் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்த்த அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை பரிசளித்த அத்தகைய வீரர்கள் குறித்த ஓர் அலசல் தொகுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் அனைத்துமே ஐ.பி.எல்.லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

சாம் கரண் - ரூ.18.25 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 'சுட்டிக் குழந்தை'யாக தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் அறியப்பட்ட, இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரரான சாம் கரணை யாருமே வாங்காத அளவுக்கு சாதனை அளவாக ஊதியத்தை அள்ளிக் கொடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வேகப்பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலுமே கலக்கும் இவர், ஆட்டத்தை எந்தவொரு கட்டத்திலும் தங்கள் பக்கம் திருப்புவார் என்று அந்த அணி நம்பியது. நடப்புத் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடியுள்ள சாம் கரண், 216 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 24, அதிகபட்சம் 55, ஸ்டிரைக் ரேட் 129.

பந்துவீச்சில் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். சிறப்பான செயல்பாடு 31/3. ஒரு ஓவருக்கு சராசரியாக 10.22 ரன்களை இவர் விட்டுக் கொடுத்துள்ளார். வரிசையாக தோல்விகளுடன் சீசனைத் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியை, தவான் காயத்தால் ஓய்வு எடுக்க அடுத்த இரு போட்டிகளுக்கு தலைமை தாங்கி வெற்றித் தேடித் தந்தார். ஒரு கேப்டனாக, அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினாலும், ஒரு வீரராக தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் சாம் கரண் சாதிக்கவில்லை.

ஹாரி புரூக் - ரூ.16.25 கோடி

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரரான ஹாரி புரூக், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரே ஆட்டத்தில் கொண்டாடப்பட்ட வீரராக இருந்து, பின்னர் அந்த அணியாலே நீக்கப்படும் அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்காவது வீரராக இறங்கி ஜொலிக்காத இவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தொடக்க வீரராக களமிறக்கியது. தொடக்க வீரராக இரண்டாவது போட்டியிலேயே சதம் கண்டு அசத்திய ஹாரி புரூக், 'அதன் மூலம் சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டேன்' என்று நேர்காணலில் பேசியும் விட்டார். இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களாலும், சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் அவர் விமர்சனத்தை எதிர்கொண்டார்.

9 போட்டிகளில் 163 ரன்களை எடுத்துள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றி தேடித்தந்த ஹாரி புரூக், வேறு எந்தவொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரது சராசரி 20.38. ஸ்டிரைக் ரேட் 121.64.

கே.எல். ராகுல் - ரூ.17 கோடி

கே.எல்.ராகுலுக்கு இது போதாத காலம் போல. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐ.பி.எல்.லிலும் அவரது மோசமான செயல்பாடு தொடர்கிறது. ஐ.பி.எல். என்றாலே பார்முக்கு வந்து, ஆரஞ்சு தொப்பிக்கு மல்லுக்கட்டும் வீரர்களில் முன்னிலை வகிக்கக் கூடிய கே.எல். ராகுல் இம்முறை துரிதமாக ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக, தொடக்க வீரராக களம் கண்ட அவரது ஆட்டம் சில நேரங்களில் ரசிகர்களால் வெறுக்கப்படக் கூடிய அளவுக்கு மோசமாக இருந்தது. டி20 போட்டிகளுக்கே உரிய வேகம் அவரிடம் இல்லை. முன்னாள் வீரர்கள் சிலர், அவர் சுயநலமாக ஆடுகிறார் என்று கூட விமர்சித்தனர். காயம் காரணமாக லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் கே.எல்.ராகுல் ஐ.பி.எல்லை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் அந்த அணியின் கேப்டன் பொறுபை குருணால் பாண்டியா கவனிக்கிறார்.

கே.எல்.ராகுல் 9 போட்டிகளில் விளையாடி, 34.25 ரன் சராசரியுடன், மொத்தம் 274 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 113.22

பென் ஸ்டோக்ஸ் - 16.25

இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைகளில் ஏந்த காரணமான பென் ஸ்டோக்சுக்கு எந்த விலை கொடுக்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகவே இருந்தது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படக் கூடிய சர்வதேசத் தரம் வாய்ந்த மிகச் சில வீரர்களில் அவரும் ஒருவர். ஆனால், காயத்தால் அவதிப்பட்ட அவரால் சென்னை அணி எதிர்பார்த்த பங்களிப்பை இம்முறை கொடுக்க முடியவில்லை. முதலிரு போட்டிகளில் விளையாடிய அவர், முறையே 7, 8 ரன்களை மட்டுமே எடுத்தார். முழு உடல் தகுதியுடன் இல்லாத அவருக்கு கேப்டன் தோனி பரீட்சார்த்தமாக ஒரு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 18 ரன்களை எதிரணி குவித்துவிட்டதால் அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ் பந்துவீசவே இல்லை.

காயம் காரணமாக எஞ்சிய ஆட்டங்களில் ஆடாத பென் ஸ்டோக்ஸ், சென்னை ஆடும் ஆட்டங்களில் வீரர்களுடன் டக் அவுட் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. லீக் ஆட்டங்கள் நிறைவுறும் தருவாயை எட்டிவிட்ட சூழலில், சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும் கூட, ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக அவர் தாய்நாடு திரும்பிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்த்ரே ரஸ்ஸல் - ரூ. 12 கோடி

கடந்த 2 ஐ.பி.எல். தொடர்களில் அச்சுறுத்தும் வீரராக வலம் வந்த ஆந்த்ரே ரஸ்ஸலின் ஆட்டம் இம்முறை அவ்வளவு பிரமாண்டமானதாக இல்லை. பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அசத்தக் கூடிய அவர், முழுமையான உடல் தகுதி பெறாததால் முதலில் சில ஆட்டங்களில் பந்துவீசவே அல்லை. பேட்டிங்கில் மிரட்டல் ஆட்டம் இருந்தாலும் கூட, சிடைத்த சில வாய்ப்புகளில் அதனை பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்றமுடியவில்லை. இம்முறை அவரிடம் இருந்து ஒரு அரைசதம் கூட வரவில்லை. அவருக்கு முன்னதாக களமிறங்கும் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசியதன் மூலம் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார். அப்படியான, அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஆட்டம் ரஸ்ஸலிடம் இருந்து வெளிப்படவில்லை.

இதுவரை 13 ஆட்டங்களில் 220 ரன்கள் சேர்த்துள்ள அவரது சராசரி 22. அதிகபட்சம் 42 ரன். ஸ்டிரைக் ரேட் 150. பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரஸ்ஸலின் சிறப்பான செயல்பாடு 22/3 ஆகும். ஓவருக்கு சராசரியாக 11.29 ரன்களை அவர் கொடுத்துள்ளார்.

டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி

டெல்லி கிங்சுக்காக களமிறங்கிய டேவிட் வார்னர், சாலை விபத்தில் சிக்கி ரிஷப் பந்த் விளையாட முடியாமல் போனதால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். கேப்டனாக ஜொலிக்க முடியாத அவரால், அந்த அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துவர முடியவில்லை. முதல் அணியாக டெல்லி வாய்ப்பை இழந்து வெளியேறியது. தனிப்பட்ட முறையிலும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. வார்னரிடம் இருந்து அவரது வழக்கமான அதிரடி இம்முறை வெளிப்படவில்லை. தொடக்க வீரராக களமிறங்கி, அவர் மிகவும் மந்தமாக பேட்டிங் செய்தது களத்திற்கு வெளியேயும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

12 போட்டிகளில் 32 ரன் சராசரியுடன் அவர் மொத்தம் 384 ரன்களை எடுத்திருந்தாலும் கூட, அதற்கான அவர் எதிர்கொண்ட பந்துகள், டி20 போட்டிகளைப் பொருத்தவரை சிறப்பான ஒன்றாக பார்க்கப்படக் கூடியது அல்ல. ஐ.பி.எல்.லில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக, அதிரடியை வெளிப்படுத்தி ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் இருப்பவரான வார்னர் இம்முறை அவரது அணிக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்குமே பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

ஷாரூக் கான் - ரூ.9 கோடி

பேட்டிங்கில் கீழ் வரிசையில் களம் கண்டு, முதல் பந்தில் இருந்தே பவுண்டரி, சிக்சர்களை விளாசும் திறன் கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஷாரூக் கானை, சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்காதவராக இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்தது. சவால் நிறைந்த டி20 போட்டிகளில் இக்கட்டான தருணங்களில் தனது அதிரடியால் அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். ஆனால், அந்த நம்பிக்கையை ஷாரூக் கான் காப்பாற்றியிருக்கிறாரா என்பதை பின்வரும் புள்ளிவிவரங்களை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

12 போட்டிகளில் 109 ரன்களை மட்டுமே எடுத்துள்ள இவரது சராசரி 18 ரன். ஸ்டிரைக் ரேட் 160. லக்னோ சூப்பர் ஜெயேன்ஸ்ட் அணிக்கு எதிராக, சிக்கந்தர் ரசாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற போது எடுத்த 23 ரன்களே அவரது அதிகபட்சமாகும். அதுதவிர மற்ற எந்த ஆட்டங்களில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.

தீபக் சாஹர் - ரூ.14 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே ஆடி வரும் அவரை, கடந்த ஏலத்திற்கு முன்பாக விடுவித்து, பின்னர் அதிக விலை கொடுத்து அந்த அணி வாங்கியது. தொடக்கத்தில் பவர் பிளே ஓவர்களை சிறப்பாக வீசுவதுடன் விக்கெட்டுகுளையும் வீழ்த்தக்கூடியவரான தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் விளையாடவே இல்லை. இதனால், பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களை யாரைக் கொண்டு வீச வைப்பது என்று கேப்டன் தோனியே திணறிவிட்டார். அவர் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளின் விளைவாகவே, 'குட்டி மலிங்கா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மதீஷா பதிரானா வெளியே அடையாளம் காணப்பட்டார்.

ஒரு போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கியது உள்பட மொத்தம் 7 போட்டிகளில் பந்துவீசியுள்ள தீபக் சாஹர் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். சிறப்பான பந்துவீச்சு 27/3. ஒரு ஓவருக்கு சராசரியாக 9.45 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

பிரித்வி ஷா - ரூ.7.5 கோடி

14 வயதிலேயே பள்ளி கிரிக்கெட்டில் 546 ரன்களை குவித்து ஒரே நாளில் தேசத்தின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச போட்டிகள் வரை விளையாடிவிட்ட பிரித்வி ஷாவுக்கு இந்த ஐபிஎல் தொடர், நினைவில் நிறுத்தி மகிழக் கூடிய ஒன்றாக இருக்கப் போவதில்லை. தொடக்க வீரராக களம் கண்ட அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறுவதே வாடிக்கையாகிப் போனதால், அதிருப்தியடைந்த டெல்லி அணி நிர்வாகம், அவருக்கு அடுத்தபடியாக வாய்ப்பு வழங்கவில்லை. முதல் 6 போட்டிகளில் களமிறங்கிய அவர், வெறும் 47 ரன்களை மட்டுமே எடுத்தார். சராசரி 7.83 ரன், அதிகபட்சம் 15.

பிரித்வி ஷாவின் புட் ஒர்க் முன்னாள் வீரர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் ஒரே தவறை மீண்டும் மீண்டும் அவர் செய்ததால் முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

தினேஷ் கார்த்திக் - ரூ.10.5 கோடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், பேட்டிங் ஆர்டரில் கீழ் வரிசையில் களம் கண்டு அதிரடியாக ரன்களை சேர்க்கக் கூடியவர். இக்கட்டான தருணங்களில் பவுண்டரி, சிக்சர்களை விளாசி அணிக்கு கைகொடுக்கக் கூடியவர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எதையுமே அவர் இம்முறை பூர்த்தி செய்ய தவறிவிட்டார். பெங்களூரு அணியே பாப் டூப்ளெஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகிய மும்மூர்த்திகளை நம்பியே இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பிற வீரர்களின் செயல்பாடு இருக்கிறது.

இதுவரை 12 ஆட்டங்களில் 140 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரது சராசரி 12.73. ஸ்டிரைக் ரேட் 135.

லிவிங்ஸ்டன் - ரூ.11.5 கோடி

இங்கிலாந்தைச் சேர்ந்த லாம் லிவிங்ஸ்டனை அவரது தடாலடி ஆட்டத்தை நம்பி பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் விலை கொடுத்து வாங்கியது. அவர் சுழற்பந்துவீச்சிலும் அணிக்கு பங்களிக்கக் கூடியவர். தசைப்பிடிப்பு காரணமாக முதலில் சில ஆட்டங்களை தவறவிட்ட அவர், பிற்பாதி ஆட்டங்களில் களம் கண்டார். இதுவரை மொத்தம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள லிவிங்ஸ்டன், 176 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 82 ரன்களை எடுத்துள்ள அவரது சராசரி 29.33. ஸ்டிரைக் ரேட் 160.

ஸ்டிரைக் ரேட் சிறப்பாக இருந்தாலும் அவரது அதிரடி ஆட்டம் ஒரு முறை மட்டுமே வெளிப்பட்டது. மற்ற ஆட்டங்களில் அவரது ஆட்டம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரது பந்துவீச்சு எடுபடவே இல்லை. 7 போட்டிகளிலும் சேர்த்து 7 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ள அவர், 2 விக்கெட்டுளை எடுத்துள்ளார். ஓவருக்கு சராசரியாக 13.43 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். லிவிங்ஸ்டனிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்பார்த்த விஷயம் இதுவல்ல என்பது நிச்சயம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: