காணொளி: இண்டிகோ பிரச்னையின் முழு பின்னணி
கடந்த சில தினங்களாகவே இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
FDTL விதிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களே இதற்கு காரணம் என இண்டிகோ நிறுவனம் கூறியது.
ஆனால், திங்களன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இந்த பிரச்னைக்கு FDTL மட்டுமே காரணம் இல்லை எனக் கூறினார்.
இந்த பிரச்னையின் முழு பின்னணி என்ன என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
விமானிகளுக்கான பணி நேர வரம்பு என்பதே FDTL என அழைக்கப்படுகிறது.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்படி, இந்த விதிகளின் அடிப்படையில், விமானப் பாதுகாப்புக்காக, ஒரு விமானி 28 நாட்களில் 100 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.
விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தனது வருகையை குறிப்பிடும் நேரத்திலிருந்து அவரது பணி தொடங்கியதாகக் கருதப்படும்.
நவம்பர் 1 முதல் விமானிகளுக்கான பணி நேர விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இண்டிகோ நிறுவனம் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அதன் விமான சேவை பாதிக்கப்பட்டது, அதிக பயணிகளை பாதிப்படைய செய்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து நிபுணர் ஹர்ஷ் வர்தன் பிபிசியிடம் பேசுகையில், "நமது நாட்டில் விமானப் போக்குவரத்துச் சந்தை கணிசமாக வளர்ந்துள்ள சூழலில், 65% பங்கைக் கொண்ட நிறுவனம் சிக்கலை எதிர்கொண்டால், இந்த நெருக்கடி முழு சந்தையையும் ஸ்தம்பிக்க வைக்கும்." என்றார்.
இதற்கு அரசாங்கக் கொள்கைகளே காரணம் என்று விமர்சித்த ஹர்ஷ் வர்தன், "தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டும் இதற்குப் பொறுப்பேற்க முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இதற்கு சம அளவில் பொறுப்பாகும்" என தெரிவித்தார்.
இண்டிகோ ஏகபோக ஆதிக்கமா?
"நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில், சந்தையில் ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர், கோஏர் போன்ற பல விமான நிறுவனங்கள் இருந்தன. போட்டியும் அதிகமாக இருந்தது. ஆனால் படிப்படியாக, இந்த விமான நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன" என்று ஹர்ஷ் வர்தன் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் இந்தக் காலகட்டத்தில், இண்டிகோ தொடர்ந்து விரிவடைந்து, மற்ற நிறுவனங்கள் போட்டியிட முடியாத வகையில் ஒரு நிலையான கட்டண அமைப்பை உருவாக்கியது. விமான நிறுவனத்தை இயக்குவதற்கான செலவு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. மற்ற விமான நிறுவனங்களால் நமது செலவுக் கட்டமைப்புக்குள் நிலைத்திருக்க முடியவில்லை" என்றார்.
விமான நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஆகும் செலவுகளில் 60 சதவீதம் வெளிநாட்டு நாணயத்தில் செய்யப்படுவதும், செலவு அதிகரிப்பதற்கான ஒரு காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதால் இந்த சுமை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், மற்ற விமான நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதால், இண்டிகோ ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக மாறியது.
மேலும், "2013-ல் 32% ஆக இருந்த இண்டிகோவின் சந்தைப் பங்கு, இப்போது 65 சதவிகிதத்தை எட்டியுள்ளது" என்ற தகவலையும் ஹர்ஷ் வர்தன் குறிப்பிடுகிறார்.
இதனால் என்ன ஆபத்து?
விமான நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அல்லது விரிவாக்கம் செய்யலாம் என்ற சூழல் உள்ளதாக ஹர்ஷ் வர்தன் கூறினார்.
"முன்பு, ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் சூழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது அவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போட்டி ஆணையம் முறையான நடவடிக்கை எடுத்தாலும், எந்தவிதமான நியாயமற்ற ஆதாயத்தையும் தடுப்பதில்லை" என்கிறார் ஹர்ஷ் வர்தன்.
இது பற்றி உதாரணத்துடன் விளக்கினார். "ஒரு நிறுவனம் ரூ.200 கோடி வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அதை விட அதிகமான முதலீடுகளைச் செய்ய விரும்பினால், சிறப்பு அனுமதி பெற வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏகபோக ஆதிக்க சூழல் உருவாகாமல் தவிர்க்க முடியும்" என்றும், அரசாங்கத்தின் கொள்கையே ஏகபோக ஆதிக்கத்திற்கு ஆதரவாக மாறிவிட்டது என்றும் அவர் விமர்சிக்கிறார்.
இதற்கு தீர்வு என்ன?
இந்த ஏகபோக உரிமையைத் தவிர்க்க இரண்டு வழிகள் உள்ளதாக ஹர்ஷ் வர்தன் கூறுகிறார்.
முதலில், "அரசு தனது செலவுக் கட்டமைப்பை முறைப்படுத்த வேண்டும். தற்போது அதிகப்படியான வரிகள் விதிக்கப்படுகின்றன. விமான நிலையங்களை நிர்வகிப்பவர்களும் பயணிகளிடமிருந்து பல்வேறு கட்டணங்களை வசூலிக்கிறார்கள். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல பெயர்களில் வரிகள் உள்ளன. இந்தக் காரணங்களால், இத்துறையில் புதிய முதலீடுகள் வரவில்லை" எனக் கூறினார்.
இரண்டாவதாக, "அரசாங்கம் உரிய சூழலை உருவாக்காவிட்டால், புதிய முதலீடுகள் வராது" என்றும்,"சந்தை பங்கை உச்சவரம்புக்குள் வைத்திருக்க வேண்டும், யாரும் 30 சதவிகிதத்திற்கு மேல் செல்ல அனுமதிக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



