"அலறல் சத்தத்தை ரசித்தவர் அப்ரூவரா?" - ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை சந்தேகிக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர்

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் முதல் நபராக (A1) குற்றம் சுமத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறி உண்மையைக் கூற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

"இது வழக்கை இழுத்தடிப்பதற்கான நாடகம்" என ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்ரூவர் ஆக மாறுவதால் என்ன நடக்கும்? தண்டனை கிடைப்பதில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

2020 ஜூன் 19. கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொதுமுடக்கம் காரணமாக இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்ஸ் மற்றும் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஜெயராஜை சாத்தான்குளம் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பின்தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் பென்னிக்ஸ் சென்றுள்ளார்.

தந்தை-மகன் என இருவர் மீதும் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்தனர். இதன்பிறகு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஜூன் 20 அன்று மருத்துவ அலுவலர் சான்று அளித்ததால் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் ஜூன் 23 அன்று ஜெயராஜும் உயிரிழந்தனர்.

காவல் மரணத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட பத்து காவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. (குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் ஒருவரான பால்துரை 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்)

2,427 பக்க குற்றப்பத்திரிகை

வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்பட்ட காவலர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இரு கட்டங்களில் 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. கைதான நாளில் இருந்து காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்பட ஒன்பது பேரும் மதுரை மத்திய சிறையில் அடைபட்டுள்ளனர்.

தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில், வழக்கில் இருந்து தான் அப்ரூவராக மாற விரும்புவதாக காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், அரசுக்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாக இருக்க விரும்புவதால் அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியுள்ளார். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

'மனசாட்சிக்கு உட்பட்டு தந்தை-மகனை இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' எனவும் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் முதல் நபராக ஸ்ரீதர் இருப்பதால், அவர் தாக்கல் செய்த மனு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுவது என்ன?

"ஐந்தாண்டுகளாக எதுவும் பேசாமல் தற்போது அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் கூறுகிறார். இது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், ஜெயராஜின் மகள் பெர்சிஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குற்றம் சுமத்தப்பட்டவர்களில் முதல் நபராக ஸ்ரீதர் இருக்கிறார். என் அப்பா-தம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காவல்நிலையத்தில் அவர் இருந்துள்ளார். பெண் காவலரின் சாட்சியத்தில், இவரது பங்கு குறித்தும் கூறியுள்ளார்" என்கிறார்.

"காவல்நிலையத்தில் இருந்தபோது, 'சத்தம் வரவில்லை, நன்றாக அடி' என உதவி ஆய்வாளரிடம் இவர் கூறியதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அவர் ரசித்ததாகவும் சாட்சி கூறியுள்ளார். அந்தவகையில், அப்ரூவர் என்ற பெயரில் தற்போது நாடகமாடுவதாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், பெர்சிஸ்.

வழக்கை இழுத்தடிக்கும் வேலைகளை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மேற்கொள்வதாகக் கூறும் பெர்சிஸ், "தனக்கென எந்த வழக்கறிஞரையும் ஸ்ரீதர் வைத்துக்கொள்ளவில்லை. தானே வாதாடுவதாகக் கூறி, குறுக்கு விசாரணை என்ற பெயரில் தலையிட்டு தாமதம் செய்கிறார்" என்கிறார்.

"தற்போது நடக்கும் வழக்கின் விசாரணை முறை திருப்தியளித்தாலும் இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்" என்கிறார், பெர்சிஸ்.

"சட்டத்தின்படி இரண்டு வழிகள்"

"அப்ரூவர் ஆக மாற உள்ளதாகக் கூறும்போது முதல் நபராக (ஏ1) குற்றம் சுமத்தப்பட்டவருக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதா?" என, பெர்சிஸின் வழக்கறிஞர் ராஜிவ் ரூஃபஸிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"சட்டத்தின்படி இரண்டு வழிகள் உள்ளன. அவரது கோரிக்கையில் அர்த்தம் உள்ளதாக நீதிமன்றம் கருதினால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 305, 306 ஆகிய பிரிவுகளின்படி மன்னிப்பு கோருவதை (Tendor of burden) ஏற்றுக்கொள்ளும்.

அடுத்து, ஸ்ரீதரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அப்ரூவராக வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என நீதிமன்றம் முடிவெடுக்கும். அதுதொடர்பாக நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

"அதேநேரம், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரின் கோரிக்கை ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் ராஜிவ் ரூஃபஸ், "வழக்கில் முறையான சாட்சிகள் ஏராளமானோர் உள்ளனர். கண்ணால் கண்ட சாட்சிகளும் உள்ளனர்" என்கிறார்.

"சாட்சிகள் இல்லாத வழக்குகளில் இதுபோன்ற கோரிக்கைகள் தேவைப்படலாம். அந்தவகையில் ஸ்ரீதரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது கடினம் என்றே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையில் அப்ரூவர் ஆகும் முயற்சியை ஸ்ரீதர் தரப்பினர் கையில் எடுத்துள்ளதாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது"

"தனக்குக் கீழ்நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே தவறு செய்ததாகக் கூறி அப்ரூவர் ஆவதற்கு ஸ்ரீதர் முயற்சித்தாலும், நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் குறைவு" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

"ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார். தனக்குத் தெரியாது என அவர் கூற முடியாது. நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டாலும் ஸ்ரீதர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் கருணாநிதி.

தொடர்ந்து பேசிய அவர், "குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களில் முதல் நபராக குறிப்பிடப்பட்டிருப்பதால், குற்றத்தில் அவர் பிரதான பங்கு வகித்ததாகவே பார்க்கப்படும். தன் மீது தவறு இல்லை என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

"ஸ்ரீதருக்கு எதிரான சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை இருந்தால் தான் வழக்கில் முதல் நபராக சேர்க்கப்படுவார். இந்த வழக்கில், 'ஆய்வாளர் கூறுவது தவறு. அவர் முன்னிலையில் தான் செய்தோம்' என மற்ற காவலர்கள் கூறினால், அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது" எனவும் அவர் தெரிவித்தார்.

"சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, புலனாய்வு அதிகாரி கூறியுள்ள விவரங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பார்த்து அப்ரூவராக ஏற்கலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். அவ்வாறு கேட்பதாலேயே ஏற்றுக்கொண்டதாக பார்க்க முடியாது" எனவும் கருணாநிதி குறிப்பிட்டார்.

"சமீபத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது இறந்துள்ளார். காவல் மரணங்களில் வழக்குகளை விரைந்து நடத்தும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்கிறார்.

தூத்துக்குடியில் உப்பளத்தில் வேலை பார்த்து வந்து ஒருவர் காவல் மரணத்தில் இறந்து போன வழக்கில், 24 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைத்த சம்பவத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

24 வருடங்களுக்கு பிறகு தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்ற தொழிலாளியை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி, தாளமுத்து நகர் காவல்நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் (18.9.1999) காவல்நிலைய லாக்கப்பில் அவர் உயிரிழந்தார். தனது கணவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக வருவாய் கோட்டாட்சியரிடம் அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார்.

விசாரணையில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் உள்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

"24 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டுத் தான் கிருஷ்ணம்மாள் குடும்பத்தினர் வழக்கை நடத்தியுள்ளனர். விரைந்து நீதி கிடைக்கும்போது தான் தவறு செய்யும் காவலர்களுக்கு பாடமாக அமையும்" எனக் கூறுகிறார் பெர்சிஸ்.

"கடந்த ஐந்தாண்டுகளாக குடும்ப உறவுகளின் சுக, துக்க காரியங்களுக்குச் செல்ல முடியவில்லை. நாங்கள் ஏதோ குற்றம் செய்தது போல சிலர் பேசும்போது வேதனையாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"அப்பாவும் தம்பியும் இறந்தபிறகு அங்கு வசிப்பது பாதுகாப்பில்லை என்பதால் தென்காசிக்கு குடிபெயர்ந்துவிட்டோம். இன்று வரை எங்கள் குடும்பத்தினர் யாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை" எனக் கூறுகிறார் பெர்சிஸ்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு