You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளியின் விளிம்புக்கே சென்று குதித்து சாதித்தவர் பாராகிளைடிங் செய்த போது மரணம்
விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார்.
56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் சாதனையை நிகழ்த்தி பிரபலமானார் பாம்கார்ட்னர்.
ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஸ்கைடைவிங் செய்த ஒலியின் வேகத்தை முந்தி சாதனை புரிந்தவரும் இவர்தான்.
தனது அசாத்திய சாகசங்களால் 'பயமறியா ஃபெலிக்ஸ்' (Fearless Felix) எனப் போற்றப்பட்டார்.
1999ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள உலகின் உயரம் குறைந்த பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்துள்ளார்.
அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட்டில் இருந்து மிக உயரமாக குதித்த நபர்' என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.
வான்வெளியில் இருந்து குதித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தியபின் பாம்கார்ட்னர் கூறியதாவது "உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார்.
'இவர் மறைந்தாலும், வலிமை மற்றும் கம்பீரத்தின் மறுஉருவமாக அறியப்படுவார்' எனக்கூறி இவரின் கிராம மக்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர்.
சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு