மெக்கா: நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பேர் இருக்கவல்ல கிராண்ட் மசூதியின் வரலாறு

காணொளிக் குறிப்பு,
மெக்கா: நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பேர் இருக்கவல்ல கிராண்ட் மசூதியின் வரலாறு

ஹஜ் யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக விரிவாக்கத்தை சந்தித்து வரும் கிராண்ட் மசூதியில் யாத்ரீகர்கள் கூடுகின்றனர்.

கிராண்ட் மசூதி ஆரம்பத்தில் காபா எனப்படும் கல்லால் கட்டப்பட்ட கட்டடத்தைச் சுற்றிய ஒரு திறந்த வளாகமாகத் தொடங்கியது.

இறைத் தூதர்கள் இப்ராஹிம் மற்றும் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரால் இது கட்டப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்.

இஸ்லாத்தின் தொடக்க காலமான 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு சுவர் மற்றும் பளிங்கு தூண்கள் எழுப்பப்பட்டன.

கிராண்ட் மசூதியின் வரலாறு

சௌதியை நிறுவியரான மன்னர் அப்துல்அஜிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் சௌத் 1932 முதல் 1953 வரை தனது ஆட்சிக் காலத்தில் மேலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதிகாரப்பூர்வ முதல்கட்ட விரிவாக்க பணிகள் 1955இல் தொடங்கியது. அதன்பின்னர், 1988-லும் 2011லும் விரிவாக்க பணிகள் நடைபெற்றன.

கிராண்ட் மசூதி தற்போது 15 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒரே நாளில் 30 லட்சம் மக்கள் அங்கு இருக்க முடியும். இது 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரியது.

காபாவைச் சுற்றி யாத்ரீகர்கள் நடந்து செல்லும் திறந்தவெளிப் பகுதியான மதாஃப்-ல் (Mataf), ஹஜ்ஜின் போது மணிக்கு ஒரு லட்சம் பேர் கடந்து செல்கின்றனர்.1950களில் வெப்பத்தை தாங்கும் பளிங்குக் கற்களால் மசூதியின் தரை அமைக்கப்பட்டது.

எஸ்கலேட்டர்கள் மற்றும் குளிரூட்டும் அமைப்பு 1980 களின் பிற்பகுதியில் நிறுவப்பட்டன. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மைக்காக கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரமலான் மற்றும் ஹஜ் காலங்களில் இந்த மசூதி பரபரப்பாக இருக்கும், இருப்பினும் தினசரி தொழுகைக்காக திறந்திருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு