You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தில் என்ன நடந்தது?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மக்களினால் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியது சர்வதேச அளவில் பேசுப் பொருளாக மாறியது.
இலங்கை நிலப் பரப்பு தொடர்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதிக போட்டித்தன்மையுடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியமை பூகோள அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஒரு நாள் இலங்கை விஜயமானது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றைய தினம் (அக்டோபர் 4) இலங்கையில் ஒரு நாள் விஜயம் செய்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வருகைத் தந்தார். எஸ்.ஜெய்சங்கருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்நிலை குழுவொன்றும் வருகைத் தந்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர் வரவேற்றனர்.
எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை முதலில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணங்களில் , தமிழ் கட்சிகளை சந்திப்பது வழமையானது என்ற நிலையில், இம்முறை தமிழ் கட்சியை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு, இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பல்வேறு துறைகளின் ஊடே பலப்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்தார்.
அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஜனாதிபதிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரியப்படுத்தினார். அதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகைத்தர வேண்டுமென இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.
இலங்கை பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான கலந்துரையாடலின் போது பேசியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரியவிற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து இரண்டு தரப்பினரும் கலந்துரையாடல்களை நடாத்தித்தியுள்ளனர்.
சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்
இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கிய வங்குரோத்து நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு, சஜித் பிரேமதாஸ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் ஒத்துழைப்பை தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ, இந்தியாவுடனான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
இலங்கை அரசியலில் இந்தியாவின் அணுகுமுறை
இலங்கை அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக செயற்பாட்டை இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
'அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதுமே தான் பெரிய நாடு என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதல் விஜயத்தையும் நான் அப்படியே பார்க்கின்றேன். இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்துடனும் நேரடி தொடர்புகளை இந்தியா பேணி வருகின்றது. வேறு நாடுகள் அரசியல் கட்சிகளுடன் நேரடி தொடர்புகளை இந்தியா போன்று வைத்திருக்காது. இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரிய பலமொன்று வர போவதை ஏற்கனவே உணர்ந்ததால்தான் அநுர குமார திஸாநாயக்கவை முன்கூட்டியே நேரில் அழைத்து இந்தியா பேசியிருந்தது. இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும், இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் தக்க வைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது." என்று அவர் கூறினார்.
தமிழ் கட்சிகளை ஏன் சந்திக்கவில்லை?
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் தமிழ் கட்சிகளை சந்திக்கவில்லை என்பது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழிடம் பேசினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே தமிழ் கட்சிகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறினார். இந்தியா இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்த போதிலும், அது சாத்தியப்படாத ஒன்று எனவும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)