தினகரன் - நயினார் நாகேந்திரன் மோதலின் பின்னணியில் அண்ணாமலையா?

- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள அதேநேரத்தில் மறுபுறம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இடையிலான வார்த்தைப் போரும் கவனம் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்ற விமர்சனத்தை முன்வைத்தார் டிடிவி தினகரன்.
"நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணி கட்சியினரை அரவணைத்துச் செல்ல தெரியவில்லை, தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் சென்றார்," என்று அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துகளை அவர் பகிர்ந்தார்.
டிடிவி தினகரன் - நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை மூவருக்கும் இடையே என்ன நடக்கிறது?
என்ன நடந்தது?
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது அவருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் நிலவியது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவின.
ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த வேளையில், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார்.
அதேநேரத்தில், தமிழக பாஜக தலைவர் பதவியிலும் மாற்றம் வந்தது. அண்ணாமலைக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவரானார்.
1989ல் அதிமுகவில் நுழைந்தார் நயினார் நாகேந்திரன். பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன் 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.
2006-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
"ஜெயலலிதாவின் தலைமையில் இருந்தது போல அதிமுக இப்போது இல்லை" என பாஜகவில் இணைந்தபோது தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், K Annamalai
"நயினார் நாகேந்திரன் அதிமுக - பாஜக இடையே பாலமாக இருப்பார் என்பதால் தான் அவரை மாநில தலைவராக்கினர். அதிமுகவினரின் உணர்வுகள் நயினாருக்கு அத்துப்படி. அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமியை அடிப்படையில் பிடிக்காது. ஆனால், தற்போதைய சூழல் காரணமாக ஏற்றுக்கொண்டுள்ளார்." எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில்தான், சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சில தினங்களுக்கு முன்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அதே முடிவை அறிவித்தார். கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக நயினார் நாகேந்திரனை குறிப்பிட்டார் டிடிவி தினகரன்.
கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டே நயினார் நாகேந்திரன் செயல்படுகிறார். அவருடைய செயல்பாடுகள், மனநிலைதான் நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேற காரணம்." எனத் தெரிவித்திருந்தார்.
என்ன கணக்கு?
அதிமுகவிலிருந்து விலகி தனித்தனியே செயல்பட்டு வரும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவருக்குமே தென்மாவட்ட முக்குலத்தோர் சமூக வாக்குகள் தான் முதன்மை இலக்கு என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவருமே இல்லை எனும் சூழல் உள்ளது. இவ்வாறான சூழலில், முக்குலத்தோர் வாக்குகளின் முகமாக நயினார் நாகேந்திரனை மாற்றுவதற்கான முயற்சியாகவும் இந்த கூட்டணி விலகல் பார்க்கப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கருதுகிறார்.
"டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா என மூவரும் அதிமுகவுக்கு வெளியே தனித்தனியே நிற்கின்றனர். மூவருக்கும் அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போதைக்கு முக்குலத்தோர் சமூகத்தில் நயினார் நாகேந்திரன் தான் அத்தகைய தோற்றத்தில் இருக்கிறார். அப்படியான சூழலில், டிடிவி தினகரன், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் மூவரும் இன்று இதுபற்றி பேசவில்லையென்றால், நாளை பேச முடியாமலே போய்விடும். ஏனெனில், இந்த மொத்த விவகாரத்தில் அந்த மூவரின் செல்வாக்குதான் குறைகிறது." என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Getty Images
இதே கருத்தை பிரதிபலிக்கிறார், சாவித்திரி கண்ணன்.
"ஓபிஎஸ் பலம் பொருந்திய ஆளாக இருந்தால் அவரை யாரும் விடமாட்டார்கள். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கென தற்போது தொண்டர் படை இல்லை. ஒரு லெட்டர் பேட் கட்சியாக உள்ளார். அவர் சமூகத்தை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் உள்ளனர். அதனால், அவருடைய சாதி வாக்குகளை பிரிக்கக்கூடியவராக ஓபிஎஸ் இருப்பார் என்பது அரசியல் சூழலாக இல்லை." என்றார்.
டிடிவி தினகரன் தனது செய்தியாளர் சந்திப்பில், "(அதிமுகவில்) எல்லோரையும் ஓரணியில் இணைக்க வேண்டும் என முயற்சித்தவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். ஆனால், அமித் ஷா அப்படி முயற்சிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் கூறுகிறார். அமித் ஷா எல்லோரையும் இணைக்க முயற்சித்தபோது, நயினார் நாகேந்திரன் செலக்டிவ் அம்னீசியாவில் இருந்தாரா அல்லது தூக்கத்தில் இருந்தாரா எனத் தெரியவில்லை." என்று கூறியிருந்தார்.
ஓபிஎஸ் குற்றச்சாட்டு
ஜூலை மாத இறுதியில் ஆடி திருவாதிரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் மோதி கங்கைகொண்ட சோழபுரம் வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தும், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மோதியைச் சந்திக்க நேரம் கேட்டு, பலமுறை அழைத்தும் மெசேஜ் அனுப்பியும் நயினார் நாகேந்திரன் அதுகுறித்து பதில் தெரிவிக்கவில்லை எனக் கூறியிருந்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய மெசேஜையும் ஊடகங்களுக்குக் காட்டினார்.
அதேபோன்று, நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சிகளை சரியாக கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார் தினகரன்.
"நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை. நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப் பிடித்ததே கூட்டணியிலிருந்து வெளியேற காரணம்." என்றும் அவர் கூறியிருந்தார்.
அப்போது, 'நண்பர்' அண்ணாமலை எனக் குறிப்பிட்ட தினகரன், "கூட்டணியில் இருந்து வெளியேறியதன் பின்னணியில் அண்ணாமலை இல்லை" என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததை அவர் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே ஊடகங்களிடம் கூறினார்.
"நான் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வேன் என ஊடகங்களும் பலரும் நம்பியது எனது தவறு அல்ல, அவர்களுடைய தவறுதான்." என தினகரன் கூறினார்.

பட மூலாதாரம், x
நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன?
ஆனால், டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுகளை நயினார் நாகேந்திரன் மறுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "அமித் ஷா இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளார். தினகரனிடம் நேரில் ஓரிரு முறை பேசியிருக்கிறேன், அப்போது எதுவும் சொல்லாமல் இப்போது நயினார் தான் காரணம் எனக் கூறியிருக்கிறார்." என்றார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மற்றும் கடந்த வாரம் நடைபெற்ற ஜி.கே. மூப்பனார் நினைவு தின நிகழ்வில் டிடிவி தினகரன் அழைக்கப்படவில்லை. இவை, தனிப்பட்ட நிகழ்வுகளாக இருந்தாலும் அதிமுக-பாஜக கூட்டணி நிகழ்வுகளாகவே அரசியல் அரங்கில் கருதப்பட்டன.
இதை குறிப்பிட்ட நாகேந்திரன், "அவை தனிப்பட்ட கட்சிகளின் நிகழ்வுகள். அதற்கு தினகரன் அழைக்கப்படவில்லை என்பதில், நான் தான் காரணம் என்பது எந்த அடிப்படையில் என்பது தெரியவில்லை." எனல் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Annamalai/X
நயினார் நாகேந்திரன் தனது கட்சியின் தேசிய தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டே செயல்படுவதாகக் கருதுகிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். "தனி மனிதர்களுக்காக (ஓபிஎஸ், தினகரன்) கூட்டணியை பலவீனப்படுத்தக் கூடாது என நயினார் நாகேந்திரன் நினைத்துள்ளார். ஓபிஎஸ்-ஐ சந்திக்க அமித் ஷா, மோதி விரும்பவில்லை, அதே நிலைப்பாட்டைத்தான் நயினார் நாகேந்திரனும் எடுத்துள்ளார்." என கூறுகிறார் அவர்.
இதற்கு மத்தியில், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டணியிலிருந்து வெளியேறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணாமலை வெளிப்படையாகவே கூறினார்.
"டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் எடுத்திருக்கும் முடிவுகளை நிச்சயமாக மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருக்கிறது. இருவரும் நல் உள்ளம் கொண்டவர்கள், நல்ல மனிதர்கள். இப்போதே குழப்பி, தேவையில்லாத ஊகங்களுக்கு நாங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்காது," என அண்ணாமலை கூறியிருந்தார்.
டிடிவி தினகரனின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது என்பது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், "தன்னுடைய வார்த்தைகளாலேயே டிடிவி தினகரன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதன் மூலம் இந்த கூட்டணியில் அவர் பொருந்தவில்லை என்பது தெளிவு. அப்படியிருக்கும் போது, அவரால் அதிமுக-பாஜகவை ஆதரிக்க முடியுமா?" என கேள்வியெழுப்பினார்.
டிடிவி தினகரன் - அண்ணாமலை நட்புக்குக் காரணம் இபிஎஸ் மீதான கோபம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னணியில் அண்ணாமலையா?
இந்த ஒட்டுமொத்த பிரச்னைக்கு பின்னாலும் அண்ணாமலை இருப்பதாகவே கருத முடியும் என கூறுகிறார், பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
"அண்ணாமலைதான் இதை இயக்குவதாக கருத முடியும். வேறு வழியே இல்லையே. எதற்காக மாற்று கட்சியில் உள்ள ஒருவர் அண்ணாமலையை ஆதரித்து பேச வேண்டும்? அண்ணாமலை பின்னால் இருந்தால்தானே அப்படியான வார்த்தைகள் வரும். ஒருவரை பற்றி ஆதரவாகப் பேசுபவருக்கு அதனால் என்ன லாபம் என்பதைப் பார்க்க வேண்டும் தானே? அரசியலில் அப்படித்தானே சிந்திக்க முடியும். தினகரன் - அண்ணாமலை கூட்டாளிகள் கிடையாது. அப்படியிருக்கும் போது மாற்று கட்சியில் உள்ள ஒருவரை ஆதரித்து பேசும்போது அது மிகத்தெளிவாக இயக்குவதால்தான் இருக்க வேண்டும்." என்கிறார் அவர்.
நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை இடையே உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவதை இது சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறுகிறார்.
பாஜக பதில் என்ன?
ஆனால், தமிழ்நாடு பாஜகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, எந்தவொரு கட்சியின் தனிப்பட்ட முடிவுகளுக்குள்ளும் பாஜக செல்வாக்கு செலுத்துவதில்லை என கூறுகிறார்.
"இது ஒரு கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம். மாற்றுக் கட்சியை சேர்ந்த நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஒரு கட்சியின் பிரச்னைகள் குறித்து வேறொரு கட்சி நபர் செல்வாக்கு செலுத்த முடியுமா என்பதில் எனக்கு ஐயப்பாடு இருக்கிறது. குறிப்பிட்ட ஒருவரை குற்றம் சுமத்துவது முறையல்ல என நான் கருதுகிறேன்." என்றார்.
அதேசமயம், திமுகவை எதிர்க்க, அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத்தான் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எனினும், ஒரு கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு பாஜகவை சேர்ந்த யாரும் அண்ணாமலையோ, நயினார் நாகேந்திரனோ செல்வாக்கு செலுத்த முடியாது, அதற்கு ஆதரவையோ ஆதரவின்மையையோ தெரிவிக்க முடியாது. திமுகவை வீழ்த்துவதில்தான் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












