போரால் பட்டினி கிடந்த இத்தாலிய குழந்தைகள்; புதிய வாழ்வளித்த 'ஹேப்பினஸ் டிரெயின்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி விட்னெஸ் ஹிஸ்டரி
1945 முதல் 1952 வரை, 'ஹேப்பினஸ் ட்ரெயின்' என்று அழைக்கப்பட்ட ரயில்கள் தெற்கு இத்தாலியிலிருந்து வடக்கு இத்தாலிக்கு 70,000 குழந்தைகளை அழைத்துச் சென்றன. அந்த குழந்தைகளை பணக்கார குடும்பங்களுடன் வாழ வைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அந்த ரயிலில் பயணித்தவர்களில் ஒருவர் தான் பியான்கா டி'அனியெல்லோ.
அவர் பிபிசியிடம், அந்த ஹேப்பினஸ் ட்ரெயின் தனது வாழ்க்கையை எப்படி என்றும் மாற்றியது என்று பகிர்ந்து கொண்டார்.
"ரயில்களே இல்லை என்று நான் நினைத்தேன். அதற்கு முன்பு ஒருபோதும் நான் ரயிலைப் பார்த்ததில்லை," என்கிறார் பியான்கா.
அவர் முதல் முறையாக ஹேப்பினஸ் ரயிலில் ஏறும்போது அவருக்கு வெறும் 10 வயதுதான்.
"அது குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஒரு துயரமிக்க நாளாக இருந்தது" என்று பியான்கா நினைவுகூர்கிறார்.
1947-ஆம் ஆண்டு தெற்கு இத்தாலியின் சலேர்னோ என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ரயில் நிலையத்தில் கூடி, ஹேப்பினஸ் ரயிலில் ஏற தயாராக இருந்தனர்.
அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்கள் எங்கு செல்லப் போகிறார்கள் என்பது குறித்து தெரியாது.
ரயில் புறப்படும் முன், அக்குழந்தைகள் பெற்றோரிடம் கையசைத்து விடைபெற்றனர். மீண்டும் எப்போது சந்திப்போம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
பெனிட்டோ முசோலினியின் பாசிச ஆட்சி 1943-இல் முடிவுக்கு வந்த போதிலும், இரண்டாம் உலகப்போரின் அழிவிலிருந்து இத்தாலி மீண்டு வரவில்லை. தெற்கில் வறுமை பரவலாக இருந்தது.
அந்தச் சூழலில் தான், மிகவும் வறுமையில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சியாக 'ஹேப்பினஸ் ரயில்' திட்டம் தோன்றியது.
1945 மற்றும் 1952 வரை, வறுமையில் வாடும் சுமார் 70,000 குழந்தைகள் தெற்கு இத்தாலியிலிருந்து வடக்கு நோக்கி ரயிலில் பயணம் செய்தனர். இது ஒரு தற்காலிகத் திட்டமாக இருந்தாலும் கூட, பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் குடும்பங்களிடம் அக்குழந்தைகளை தங்க வைத்து ஓரளவு சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கச் செய்வது தான் அத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
இந்தத் திட்டம் இத்தாலியில் 'ட்ரெனி டெல்லா ஃபெலிசிட்டா' (Treni della Felicità) அதாவது, 'ஹேப்பினஸ் ரயில்கள்' என்று அழைக்கப்பட்டது.
அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கொண்ட கடினமான சூழலைச் சீர்செய்யும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக, இத்தாலிய பெண்கள் ஒன்றியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து இதை ஏற்பாடு செய்தன.
அப்போது பியான்காவுக்கு அது குறித்துத் தெரியாது. ஆனால் அந்த ஹேப்பினஸ் ரயிலில் சென்ற பயணம் அவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றியது.
"குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது"

பட மூலாதாரம், Getty Images
பியான்கா, இரண்டாம் உலகப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நேபிள்ஸிலிருந்து 55 கிலோமீட்டர் தென்கிழக்கில் உள்ள சலேர்னோ என்ற நகரத்தில் வளர்ந்தார்.
தற்போது 88 வயதான அவர், அந்த காலகட்டத்தை நினைக்கும் போதெல்லாம் "துயரமும், வறுமையும்" தான் நினைவுக்கு வருவதாகக் கூறுகிறார்.
அந்த சூழலைப் பற்றி பேசியபோது, "எங்களிடம் தண்ணீர் இல்லை, குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காது, குளிப்பதைப் பற்றி யோசிக்கவே முடியாது." என்றார்.
"ஒவ்வொரு வீட்டிலும் சாப்பிட எதுவும் இருக்காது. நான் கிட்டத்தட்ட உயிரிழக்கும் சூழலில் இருந்தேன், என் நுரையீரல் பாதிக்கப்பட்டது. குழந்தைகள் காசநோயால் அவதிப்பட்டார்கள்," என்கிறார் பியான்கா.
பியான்காவின் தந்தை 40 வயதில் இறந்தார். அவரது மரணத்துக்குப் பிறகு, எட்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவரது தாய்க்குச் சென்றது.
"வீட்டில் யாரும் சம்பாதிக்கவில்லை... எங்களால் முடிந்தவரை நாங்களே எங்களைப் பார்த்துக் கொண்டோம். மிகக் கடுமையான சூழலில், சிலர் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். தாய்மார்கள், 'என் குழந்தை இறந்தால் இனி துன்பப்பட மாட்டான்' என்று எண்ணிய காலம் அது," என பகிர்ந்து கொள்கிறார் பியான்கா.
மேலும், போர் முடிவதற்கு முன்பு, பசியால் வாடிய குழந்தைகள் புல்லைக் கூட உண்பார்கள் என்றும் பியான்கா கூறுகிறார்.
ஆனால் வறுமைக்குக் காரணம் போர் மட்டும் அல்ல என்று கூறும் பியான்கா, "அப்போது முசோலினி தலைமையிலான பாசிச ஆட்சி இருந்தது. ஒவ்வொரு குடும்பமும், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தது என்பதைப் பொறுத்து, ரொட்டி துண்டு பெற்றார்கள்," என்று விளக்குகிறார்.
"அப்போது ஒரு கூப்பன் முறை இருந்தது, அந்த கூப்பன்களுடன் நீங்கள் கடைக்குச் சென்றால், உங்களிடம் எத்தனை கூப்பன்கள் இருக்கிறதோ, அதற்கேற்ப அவர்கள் ரொட்டி துண்டு கொடுப்பார்கள்." என்றார்.
பிறகு, "தண்ணீர் கிடைத்தால், குழந்தைகள் அந்த ரொட்டியை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் தண்ணீரில் ஊறிய ரொட்டி பெரிதாகி இருக்கும்." என்று பியான்கா நினைவு கூறுகிறார்.
1943-இல் முசோலினியின் ஆட்சி முடிந்த பிறகும், மோசமான வாழ்க்கைச் சூழல் தொடர்ந்தது.
அப்போது அந்நகர மருத்துவர் மரியோ டெல் சாண்டோ ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொண்டு வந்தார்.
குழந்தைகளைக் குறைந்தபட்சம் சில காலத்திற்கு, அவர்களின் துயரமான நிலைமையிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது என்பது தான் அச்செய்தி.
அந்த வாய்ப்பு தான் வடக்கு நோக்கிச் செல்லும் 'ஹேப்பினஸ் டிரெய்ன்'
ஹேப்பினஸ் டிரெய்ன் திட்டம்

பட மூலாதாரம், Getty Images
இந்த முயற்சியை ஊக்குவித்தவர்களில் ஒருவர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தெரசா நோஸ் (Teresa Noce).
"எல்லா இடங்களிலிருந்தும் கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன," என்று பின்னர் இத்தாலிய பத்திரிகையான இல் முலினோவுக்கு அளித்த பேட்டியில் நோஸ் கூறியிருந்தார்.
"பட்டினியால் வாடும் குழந்தைகள் ஏராளமாக இருந்தனர். வானிலை குளிர்ச்சியாகவும் ஈரப்பதமிக்கதாகவும் மாறிக்கொண்டிருந்தது. நிலக்கரி கிடைக்கவில்லை. இதயத்தை உடைக்கும் வகையில் எண்ணற்ற சம்பவங்கள் நடந்தன."
"போர்வை இல்லாமல் தவித்த பல குழந்தைகள், வெப்பத்தை உணர மரத்தூள் நிரப்பிய பெட்டிகளில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது." என அவர் குறிப்பிடுகிறார்.
அது போன்ற சூழலில் தான் மிலனில் ஹேப்பினஸ் ரயில் என்ற யோசனை பிறந்தது.
பின்னர், நோஸ் மற்றும் இத்தாலிய பெண்கள் சங்கத்தின் தலைமையில், ஆயிரக்கணக்கான குழந்தைகளை வரவேற்க, நாடு முழுவதும் தயாராக இருந்த மக்களின் ஆதரவுடன் அந்த யோசனை வெற்றியடைந்தது.
முதலில் ரெஜியோ எமிலியா நகரம் 2,000 குழந்தைகளைப் பராமரிக்க முன்வந்தது. பின்னர் பர்மா, பியாசென்சா, மொடெனா, போலோனியா மற்றும் ரவென்னா நகரங்களும் இம்முயற்சியில் இணைந்தன.
முதல் 'ஹேப்பினஸ் ட்ரெயின்' 1,800 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி மிலன் நகரத்திலிருந்து ரெஜியோ எமிலியா நோக்கி புறப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்தத் திட்டம் முழு இத்தாலியிலும் விரிவுபெற்றது.
குறிப்பாக பியான்கா வாழ்ந்த தெற்கு இத்தாலியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
பிரியாவிடை அளித்த தருணம்

பட மூலாதாரம், Getty Images
பல தாய்மார்களைப் போலவே, பியான்காவின் தாயாரும் ஹேப்பினஸ் ரயிலை தன் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கச் செய்யும் ஒரு வாய்ப்பாகக் கண்டார்.
1947-இல் ஒரு நாள், பியான்காவின் தாய் அவரையும் அவருடைய தங்கை அனா மரியாவையும் அந்தப் பயணத்திற்குத் தயார்படுத்தினார்.
"என் அம்மா எனக்காக ஒரு சிறிய ஆடை தைத்தார்," என்று பியான்கா நினைவுகூர்கிறார்.
அவர்களால் காலணி வாங்க முடியாததால், பியான்கா "அட்டைப் பலகையால் செய்யப்பட்ட செருப்புகளை" அணிந்திருந்தார்.
அன்று, ரயில் நிலையம் முழுவதும் குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் அழுதுகொண்டு விடைபெறும் காட்சியால் நிரம்பியிருந்ததை அவர் பகிர்ந்து கொண்டார்.
"ரயில் ஊழியர்கள் கூட அழுதார்கள், ஏனென்றால் குழந்தைகள் தங்கள் தாய்மார்களிடமிருந்து பிரிய விரும்பவில்லை. ஆனால், சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தாய்மார்கள் அவர்களை அனுப்பிவிட்டார்கள்," என்று பியான்கா கூறுகிறார்.
பியான்கா அந்த ரயில் பயணத்தை இன்னும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார்.
"முதல் முறையாக நான் மரங்களும், வீடுகளும், கிராமங்களும் வேகமாக பின்னால் செல்வதைக் கண்டேன். அந்த காட்சி என்னை முழுவதுமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது," என்கிறார் பியான்கா.
"ரயில்களே இல்லை என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு அதைப் பார்த்ததில்லை," என்று கூறி சிரிக்கிறார்.
இப்போது 80 வயதுக்கு மேல் ஆன பியான்கா, அப்போது ஜன்னல் வழியாக வந்த புகையால் தன் முகமும் தன் தங்கையின் முகமும் கருமையாகியதை நினைவுகூர்கிறார்.
அந்த ஜன்னல் வழியாக வெளியே பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.
ஆனால், எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. பியான்கா கண்விழித்தபோது, தன் அருகில் அனா மரியா இல்லை என்பதை கவனித்தார்.
"பெல்லுனோ என்ற இடத்தில் முப்பது குழந்தைகள் இறங்கினர், என் தங்கையும் அவர்களில் ஒருவர் என்பதை நான் உணரவில்லை"
"அனா மரியாவை நினைத்து நான் நிறைய அழுதேன். என் அம்மா அவரை கவனித்துக்கொள்ளுமாறு என்னை நம்பி ஒப்படைத்திருந்தார். ஆனால் நானும் அப்போது ஒரு சிறிய குழந்தை தான். "என்கிறார் பியான்கா.
அன்று அவர்கள் இருவரும் பிரிவைச் சந்தித்தனர். அதன்பிறகு தனது தங்கை அனா மரியாவைப் பற்றிய எந்தச் செய்தியையும் பியான்கா கேள்விப்படவில்லை.
"அதுவரை இல்லாத அளவு சாப்பிட்டேன்"

பட மூலாதாரம், Getty Images
பியான்காவுக்கு மட்டும் அல்ல, ரயிலில் இருந்த எல்லா குழந்தைகளுக்கும் அன்றைய இரவுப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது.
"கம்யூனிஸ்டுகள் தங்களின் கைகளைச் சாப்பிட்டு விடுவார்கள் என்ற பயத்தில், எல்லா குழந்தைகளும் பெற்றோர் இல்லாமல் ரயிலில் அந்த இரவைக் கழித்தனர்," என்று பியான்கா நினைவு கூறுகிறார்.
"ஏனென்றால், 'கம்யூனிஸ்டுகள் குழந்தைகளின் கைகளை சாப்பிடுவதால் நீங்கள் மெஸ்ட்ரேவுக்குச் செல்லக்கூடாது' என என் ஊரில் இருந்த பாதிரியார் எப்போதும் சொல்வார்" என பியான்கா குறிப்பிடுகிறார்.
700 கிலோமீட்டருக்கும் மேலான நீண்ட ரயில் பயணத்திற்குப் பிறகு, பியான்காவும் பல குழந்தைகளும் வெனிஸுக்கு அருகிலுள்ள மெஸ்ட்ரே நகரத்தை அடைந்தனர்.
அப்போது மழை பெய்துகொண்டிருந்தது.
மழை அவரது அட்டைப் பலகையில் செய்த செருப்புகளை சேதப்படுத்தியது. அவர்கள் அங்கு சென்றடைந்ததும், குழந்தைகளை தங்கள் வீட்டில் தங்கவைக்க சம்மதித்த குடும்பங்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.
அங்கு வந்த எல்லா குடும்பங்களும் பணக்காரர்கள் அல்ல. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவை.
ஆனால் அவர்களின் வாழ்க்கைத் தரம், தெற்கு இத்தாலியின் விவசாயக் குடும்பங்களைவிட நிச்சயமாக மேம்பட்டதாக இருந்தது என இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"ரோசா என்ற பெண்மணி என்னிடம் வந்து, 'என்ன அழகான பெண், உன் பெயர் என்ன?' என்று கேட்டார்," என்கிறார் பியான்கா.
"நான் பயப்படாமல் இருக்க அப்பெண் இனிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார்.
'நீ என்னுடன் வர விரும்புகிறாயா? வாத்துகள், ஒரு பூனை, ஒரு நாய் என எங்களிடம் சிறிய விலங்குகள் இருக்கின்றன' என்று அவர் சொன்னார். பிறகு அப்பெண் என் கையை பிடித்துக்கொண்டார்," என்று பியான்கா நினைவு கூர்ந்தார்.
அன்றிலிருந்து, பியான்கா ரோசா மற்றும் லூய்கியுடன் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவர்களை அவர் "அத்தை" என்றும் "மாமா" என்றும் அழைக்கத் தொடங்கினார்.
பியான்கா அந்த புதிய வீட்டுக்குச் சென்றபோது, ரோசா சொன்னது உண்மையென்று தெரிந்தது.
"அங்கு ஒரு நாய் இருந்தது, ஒரு பூனை இருந்தது, புதிதாகப் பிறந்த முயல்களும் இருந்தன. அவை எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தன. என் மனதை துயரத்திலிருந்தும், பயத்திலிருந்தும் திசைதிருப்பின," என்று பியான்கா நினைவுகூர்கிறார்.

ஒரு புதிய வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images
ரோசா மற்றும் லூய்கியுடன் பியான்கா நான்கு மாதங்கள் தங்கியிருந்தார்.
காலம் எப்படி உருண்டோடியது என்று தெரியவில்லை. இறுதியில், அவர் வீடு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது.
"நான் அழுதேன், அழுது புலம்பினேன். நான் என் அம்மாவிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லை, ஆனால் நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தங்களது குடும்பத்தினரிடம் திரும்ப வேண்டும் என்பது விதி. அதனால் நான் திரும்ப வேண்டியிருந்தது," என்று பியான்கா நினைவு கூர்கிறார்.
"நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நான் மட்டும் அல்ல, எல்லா குழந்தைகளும் அழுதனர். யாருமே சலேர்னோவுக்குத் திரும்ப விரும்பவில்லை," என்கிறார் பியான்கா.
பியான்காவைப் போலவே, ரோசாவும் லூய்கியும் அவர் மீது ஆழ்ந்த பாசம் கொண்டிருந்தார்கள். அவர்களும் அவரைப் பிரிய விரும்பவில்லை.
ஆனால் விதியின் படி, பியான்கா தன் தாயிடம் திரும்ப வேண்டியிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, பியான்காவை தாங்கள் தத்தெடுத்துக்கொள்வது தொடர்பாக பியான்காவின் தாயாரிடம் கேட்பதற்காக, லூய்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முடிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பியான்காவின் வீட்டிற்குச் சென்றார். அப்போது மீண்டும் அவர்கள் சந்தித்தனர்.
"லூய்கியைப் பார்த்தவுடன், நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டு, விடவேயில்லை," என்று பியான்கா கூறுகிறார்.
இறுதியில், லூய்கி பியான்காவின் தாயாரைச் சம்மதிக்கச் வைத்தார். பியான்கா மீண்டும் அவருடன் மெஸ்ட்ரேவுக்குத் திரும்பினார்.
"நாங்கள் மெஸ்ட்ரேவுக்கு திரும்பும் வரை அந்தக் கையை நான் விடவே இல்லை," என்கிறார் பியான்கா.
பிறகு பியான்காவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. சலேர்னோவில் இருந்த வறுமை, பசி, துயரம் ஆகியவை அங்கு இல்லை. அதன் பிறகு, 21 வயதில் அவருக்கு திருமணம் ஆகும் வரை பியான்கா தனது புதிய பெற்றோருடன் வாழ்ந்தார்.
'ஹேப்பினஸ் ரயில்'
பின்னர், பல புத்தகங்களும் ஆய்வுகளும் அந்த ஹேப்பினஸ் ரயில்களின் வரலாற்றை மீண்டும் எடுத்துரைத்தன.
இத்தாலிய எழுத்தாளர் வயோலா ஆர்டோனின் 'தி சில்ட்ரன்ஸ் டிரெயின்' (The Children's Train) என்ற நாவல், பியான்காவைப் போலவே மற்றொரு குடும்பத்தால் மாறிய ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது.
2024 ஆம் ஆண்டில், நெட்ஃபிளிக்ஸ் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, 'தி சில்ட்ரன்ஸ் டிரெயின்' என அதே பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












