அரசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்ஸ - புதிய சட்டத்தால் யாரெல்லாம் சிறப்புரிமைகளை இழக்கின்றனர்?

பட மூலாதாரம், MR MEDIA DIVISION
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை அரசாங்கத்திடம் கையளிக்கின்றனர்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது அதிகாரப்பூர்வ வீட்டிலிருந்து கடந்த 11-ஆம் தேதி வெளியேறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் (ரத்து செய்யும்) விதிமுறைகள், பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இது சட்டமான நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் சில ரத்து செய்யப்படுகின்றன.
நிறைவேற்றப்பட்ட புதிய விதிமுறைகள்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் (ரத்து செய்யும்) விதிமுறைகள் அடங்கிய சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன. இதன்படி, 150 பெரும்பான்மை வாக்குகளினால் இந்த விதிமுறைகள் அடங்கிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி,
- முன்னாள் ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி, விதவையான ஜனாதிபதியின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்ட வீடு அல்லது அதற்கான மாதாந்த கொடுப்பனவு இதனூடாக ரத்து செய்யப்படுகின்றது.
- முன்னாள் ஜனாதிபதி, விதவையான ஜனாதிபதியின் மனைவியின் செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு, அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் மேலதிக வசதிகள் ரத்து செய்யப்படுகின்றன.
- முன்னாள் ஜனாதிபதியின் விதவையான மனைவிக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவும் இதனூடாக ரத்து செய்யப்படுகின்றது.
புதிய சட்டத்தால் யாரெல்லாம் சிறப்புரிமைகளை இழக்கின்றனர்?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் பட்டியலில் ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பீ.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இதுவரை பதவி வகித்துள்ளனர். தற்போது அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
இதன்படி, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தமையினால், அவர்களுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படுவதில்லை.
அதற்கு அடுத்தப்படியாக ஜனாதிபதி பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ உயிரிழந்துள்ள போதிலும், அவரது மனைவியான ஹேமா பிரேமதாஸ உயிருடன் இருக்கின்றார்.
இந்த நிலையில், ஹேமா பிரேமதாஸவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள் இந்த சட்ட விதிகளின் ஊடாக ரத்து செய்யப்படுகின்றன.
இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த டி.பீ.விஜேதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிருடன் இல்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படுவதில்லை.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதிகளாக பதவி வகித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கே தற்போது இந்த புதிய சட்ட விதிமுறைகள் செல்லுபடியானதாக காணப்படுகின்றன.
இந்த புதிய சட்ட விதிகளுக்கு அமைய, அவர்களுக்கான சிறப்புரிமைகள் ரத்து செய்யப்படுகின்றன.
வீடுகளைக் கையளிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் ஜனாதிபதிகளாக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டை விட்டு வெளியேறி, தங்காலை பகுதியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்படி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு சொந்தமான வீட்டிற்கு அவர் விரைவில் செல்ல எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகளை பெற்றுக்கொள்ளாது, தமது சொந்த வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் இதற்கு முன்னர் இருந்த ஆட்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆட்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அதேபோன்று, ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, அமைச்சர்களுக்கு கடந்த அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வ வீடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை.
அதேபோன்று, நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சமூகமளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தின் வீடுகளை வழமை போன்று பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்திருந்தனர்.
அத்துடன், நாடாளுமன்ற கொடுப்பனவுகளையும் தாம் பெற்றுக்கொள்ளாது அவற்றை பொது நிதிக்கு மாற்றி மக்களுக்கான உதவிகளைச் செய்து வருவதாக பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, ஆண்டுதோறும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதியின் விதவையான மனைவிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள் கடந்த 11ம் தேதியுடன் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ராஜபக்ஸ விமர்சனம்

பட மூலாதாரம், MR Media Division
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கொழும்பிலுள்ள வீட்டிலிருந்து வெளியேறியமை குறித்தும் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
தனிப்பட்ட பழிவாங்கலை இலக்காக கொண்ட ஒழுங்கற்ற, தொழில் பண்பற்ற அரசியல் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு வீட்டிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஸ தனது பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ள பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
''விஜேராமவிலிருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸவே'' என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












