முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்த இந்திய பெண்ணுக்கு பாகிஸ்தானில் என்ன நேர்ந்தது?

    • எழுதியவர், எஹ்தேஷாம் ஷமி
    • பதவி, பிபிசிக்காக

சுற்றுலா விசாவில் பாகிஸ்தான் வந்து, அங்கு நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இந்தியப் பெண் சரப்ஜித் கவுரும் அவரது கணவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சர்தார் ரமேஷ் சிங் அரோரா உறுதிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ் சிங் அரோராவின் தகவல்படி, 48 வயதான சரப்ஜித் கவுர் வரும் வியாழக்கிழமை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்றும், அதே வேளையில் அவரது பாகிஸ்தானிய கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி சீக்கிய யாத்திரிகர்கள் குழுவுடன் பாகிஸ்தான் சென்ற சரப்ஜித் கவுரின் விசா காலம் நவம்பர் 13 உடன் முடிவடைந்தது.

எனினும், அவர் இந்தியா திரும்பவில்லை. இதற்கிடையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஷேக்ஹுபுராவைச் சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சரப்ஜித் பாகிஸ்தானிலேயே தங்கியுள்ளார்.

ஜனவரி 4-ஆம் தேதி, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோர் இருப்பிடம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, அந்நாட்டு உளவுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக ரமேஷ் சிங் அரோரா பிபிசி உருதுவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, சரப்ஜித் கவுர் அவரது பாகிஸ்தானிய கணவருடன் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர்கள் தற்போது நன்கானா சாஹிப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் இருவரும் நன்கானா சாஹிப்பில் உள்ள சதர் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ரமேஷ் சிங் அரோராவின் கூற்றுப்படி, காவல்துறையினரும் உளவுத்துறை அதிகாரிகளும் இணைந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஆகிய இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு 'டிக்டாக்' மூலம் அறிமுகமானது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பலமுறை விசா கோரி விண்ணப்பித்த போதிலும், அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

'கைது அல்ல, நாடு கடத்தல்'

பிபிசி செய்தியாளர் ஷுமிலா கானிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் சிங், சரப்ஜித் கவுர் முறைப்படி கைது செய்யப்படவில்லை என்றும், விசா நிபந்தனைகளை மீறியதற்காகவும், அதிக காலம் நாட்டில் தங்கியதற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், பாகிஸ்தான் சட்டத்தின்படி, விசா காலம் முடிந்த பிறகும் நாட்டில் தங்கியிருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

நாடு கடத்தும் செயல்முறையை நிறைவு செய்வதற்காக சரப்ஜித் கவுர், 'எவாக்யூ டிரஸ்ட் பிராபர்ட்டி போர்டிடம்' ஒப்படைக்கப்படுவார் என்று அமைச்சர் ரமேஷ் சிங் தெரிவித்தார்.

நசீர் ஹுசைன் குறித்து தற்போது குறைந்த அளவிலான தகவல்களே கிடைத்துள்ளதாக அவர் கூறினார். நசீரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஏதேனும் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க நசீரின் மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தற்போது எங்களது கவனம் சரப்ஜித் கவுரை நாடு கடத்தும் பணியை முடிப்பதில் உள்ளது" என்றார் ரமேஷ் சிங்

இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி மனு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண மனித உரிமைகளுக்கான முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் தாஸ் மகேந்திர பால் சிங், சரப்ஜித் கவுரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வழக்கறிஞர் அலி செங்கேசி சாந்து மூலம் தாக்கல் செய்யப்பட்டது.

திங்களன்று ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்ட மகேந்திர பால் சிங், "தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வது சரப்ஜித் கவுரின் தனிப்பட்ட முடிவு, ஆனால் அவர் மத விசாவைத் தவறாகப் பயன்படுத்தினார், இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முடிவுகளை எடுக்க சுதந்திரம் உள்ளது, ஆனால் மத விசா இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது," என்றார்.

சம்பவத்தின் பின்னணி

ரமேஷ் அரோராவின் தகவல்படி, கடந்த 2025 நவம்பர் 4-ஆம் தேதி, நன்கானா சாஹிப்பில் உள்ள குருத்வாரா ஜனம் அஸ்தானுக்கு நசீர் சென்றார். அங்கிருந்து அவர் சரப்ஜித் கவுரைத் தனது பூர்வீகப் பகுதியான ஷேக்ஹுபுராவில் உள்ள ஃபரூகாபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விசாரணையின் முடிவில், சரப்ஜித் கவுரை நாடு கடத்துவதற்காக எவாக்யூ டிரஸ்ட் பிராபர்ட்டி போர்டிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரமேஷ் சிங் அரோரா தெரிவித்தார்.

பாகிஸ்தான் சட்டத்தின்படி சரப்ஜித் கவுரை இந்த வாரியம் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பும். அதே வேளையில், அவரது கணவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

கடந்த நவம்பர் மாதம், சரப்ஜித் கவுரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், அவரைத் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

சரப்ஜித்தின் வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா கூறுகையில், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பஞ்சாப் போலீசார் சரப்ஜித் மற்றும் நசீரின் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் இருவரையும் தேடி வந்த போலீசார் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் காவல்துறை தலையிடக் கூடாது என்று இந்த மேல்முறையீட்டு மனுவில் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.

இருப்பினும், இந்தியப் பெண்ணையோ அல்லது அவரது பாகிஸ்தானிய கணவரையோ காவல்துறை துன்புறுத்தவில்லை என்று ஷேக்ஹுபுரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா யூனுஸ் பிபிசி உருதுவியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், காவல்துறைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது, எனவே பல விசாரணை அமைப்புகள் இதனை ஆய்வு செய்து வருகின்றன. எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் பாகிஸ்தான் சட்டத்தின்படியே அமையும்" என்று அவர் கூறினார்.

இஸ்லாம் மதத்தை ஏற்ற இந்தியப் பெண்

ஷேக்ஹுபுரா நீதித்துறை நடுவர் முன்னிலையில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, பாகிஸ்தான் வந்த பிறகு தனது சுய விருப்பத்தின் பேரில் தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், நசீர் ஹுசைன் என்ற பாகிஸ்தானிய குடிமகனைத் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தில், இந்தத் திருமணம் ஷேக்ஹுபுராவில் உள்ள சம்பந்தப்பட்ட யூனியன் கவுன்சிலில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருமணச் சான்றிதழின்படி, நசீர் ஹுசைனுக்கு 43 வயது என்றும், மணமகள் சரப்ஜித் கவுருக்கு நாற்பத்தெட்டரை வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நசீர் ஹுசைனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதும், இரண்டாவது திருமணத்திற்கு அவர் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்பதும் பதிவாகியுள்ளது.

இந்தியப் பெண்ணின் சார்பாக நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களை மிரட்டுவதாகவும், தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நசீர் ஹுசைனைத் திருமணம் செய்து கொண்டதாக' அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

"என்னை யாரும் கடத்தவில்லை, நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனது பெற்றோர் வீட்டிலிருந்து வெறும் மூன்று ஜோடி ஆடைகளுடன் மட்டுமே நான் வந்தேன், என்னுடன் வேறு எதையும் கொண்டு வரவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

' ஒன்பது ஆண்டுகளாக அறிந்திருந்தார்'

சரப்ஜித் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கபூர்தலா காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 2,000 சீக்கிய யாத்ரீகர்கள் கொண்ட குழுவில் ஒருவராக சரப்ஜித் பாகிஸ்தான் சென்றிருந்தார். 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அந்தக் குழுவினர் நவம்பர் 13-ஆம் தேதி இந்தியா திரும்பினர், ஆனால் சரப்ஜித் கவுர் அவர்களுடன் வரவில்லை.

பிபிசி பஞ்சாபி செய்தியின்படி, கபூர்தலா உதவி காவல் கண்காணிப்பாளர் தீரேந்திர வர்மா, தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியதாக நவம்பர் மாதம் தெரிவித்தார். சரப்ஜித் கவுர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது மற்றும் திருமணம் செய்து கொண்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று வர்மா தெரிவித்தார்.

இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, சரப்ஜித் விவாகரத்து பெற்றவர் என்பதும், முந்தைய திருமணத்தின் மூலம் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கபூர்தலா மாவட்டத்திலுள்ள தல்வண்டி சௌத்ரியன் கிராமத்தின் காவல் ஆய்வாளர் நிர்மல் சிங்கின் கூற்றுப்படி, இது குறித்து கிராம பஞ்சாயத்துத் தலைவரிடம் (சர்பஞ்ச்) இருந்து தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா பிபிசி-யுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் சரப்ஜித் பேசுவதைக் கேட்க முடிகிறது. தான் இந்தியாவில் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறி நசீர் ஹுசைனைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் நசீர் ஹுசைனைத் தனக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும் என்று சரப்ஜித் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா கூறுகையில், 'சரப்ஜித்தும் நசீரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்ததாகவும், ஆறு மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகவும்' தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் சட்ட ரீதியான உதவிக்காகத் தன்னிடம் வந்ததாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு