You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோபுர கலசங்களில் இரிடியம் உள்ளது என்பது உண்மையா? சிலர் கோடிக்கணக்கில் தர தயாராக இருப்பது ஏன்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
'ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசு ரகசியமாக இரிடியத்தை விற்பனை செய்வதால் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும்' எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக 6 பேரை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தும் போலி ஆவணங்களைத் தயாரித்தும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, ஜூன் 2-ஆம் தேதி சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
பிளாட்டினம், தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் இரிடியத்தை மையமாக வைத்து மோசடிகள் அரங்கேறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் சிக்கியது எப்படி? இரிடியத்தை முன்வைத்து மோசடி நடப்பது எப்படி?
இரிடியம் மோசடி நடந்தது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் ஏ.ஜே.கென்னடி, கடந்த ஆண்டு மே மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
நிதி மோசடிப் புகார்கள் தொடர்பான புகார்களைக் கையாளும் ரிசர்வ் வங்கியின் 'SACHET' இணையதளத்தில் தனி நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் மனுவை ஏ.ஜெ.கென்னடி அளித்திருந்தார்.
தனது மனுவில், 'இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தியும் போலியான ஆவணங்களைத் தயார் செய்தும் பொதுமக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் தாமிரம் விற்பனைக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும் இந்தப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சிலர் பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தைப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தினால் அதிக வட்டியுடன் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியுள்ளதாக மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பான போலி ஆவணங்களை நம்பி சிலர் ஏமாந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த மே மாதம் 28 அன்று தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
அவர்கள் மீது 419, 465, 468, 471, 420 IPC & 66 D of IT Act 2000 3 r/w 5of Emblems & Name (Prevention of improper use) Act 1950 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், மோசடி, ரிசர்வ் வங்கி முத்திரையை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவுகள் குறிக்கின்றன.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த அன்புமணி, முத்துசாமி, கேசவன், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காடி சார்லா கிஷோர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சிபிசிஐடி, சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.
'மும்பை, டெல்லியில் ரகசிய கூட்டம்'
இரிடியம் வர்த்தகத்தை மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டு வருவதாகக் கூறி ரிசர்வ் வங்கி சின்னத்துடன் கூடிய போலி சான்றிதழ்களைக் காட்டி பண மோசடியில் இக்குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி கூறியுள்ளது.
ஒருகட்டத்தில் முதலீட்டுத் தொகையை வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். 'அவர்களை நம்ப வைப்பதற்காக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அவர்களை வரவழைத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல சிலரை நடிக்க வைத்து நம்ப வைத்துள்ளனர்' என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
இரிடியம்-காப்பர் திட்டத்தில் முதலீடு எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாய் வரை இக்குழுவினர் ஏமாற்றியுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
தங்களை ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும் இரிடியம்-செம்பு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி கட்டாயப்படுத்தி முதலீடு செய்ய வைத்ததாக, சில ஊடகங்களிடம் சிபிசிஐடி பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் டி.எஸ்.அன்பு தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன?
மோசடியைக் கண்டறிந்தது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல கிளை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
"ரிசர்வ் வங்கியின் புகார் தளத்தில் (Sachet) தனி நபர் அளித்த தகவலின் அடிப்படையில் உதவிப் பொது மேலாளர் புகார் அளித்தார். அவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்" எனக் கூறினார், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்.
"நிதி மோசடி தொடர்பாக புகார்கள் வந்தால் அதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" எனக் கூறிய அவர், "இதுதொடர்பாக, மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
தொடரும் இரிடியம் மோசடிகள்
தமிழ்நாட்டில் இரிடியத்தை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் இரிடியம் விற்பனை தொடர்பாக 4 பேருக்குள் ஏற்பட்ட மோதல், மோசடியை வெளிக்கொண்டு வந்தது.
முதல் தகவல் அறிக்கையின் படி, "ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சீனி முகமது என்ற நபர், திருவண்ணாமலையை சேர்ந்த ரவி என்பவரை அணுகியுள்ளார். அவரிடம், தன்னிடம் இரிடியம் உள்ளதாகவும் அதை விற்பனை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என சீனி முகமது கூறியுள்ளார். இதை நம்பி ரவி உள்பட மூன்று பேர் சில லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். ஒருகட்டத்தில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சீனி முகமதுவிடம் தகராறு செய்துள்ளனர். இதையறிந்து நான்கு பேரையும் திருவண்ணாமலை போலீஸ் கைது செய்துள்ளது."
கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மீது இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதுரை தெற்கு வாசல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரனிடம், இரிடியம் கலசத் தொழிலில் ஈடுபட்டால் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனப் பெண் ஒருவர் கூறியதை நம்பி திருவள்ளூரை சேர்ந்த தி.மு.க பிரமுகரிடம் சுமார் 18 லட்ச ரூபாய் வரை இழந்துவிட்டதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இரிடியம் மூலம் சுமார் 20 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கூறி மோசடி செய்ததாக காவல்துறையில் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முகமது ரபி, கலைச்செல்வி ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இரிடியத்துக்கு இவ்வளவு மதிப்பு ஏன்?
கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடப்பதாகக் கூறுகிறார், அசாமில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.
"பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது. கனடா, மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இரிடியம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக, கடற்கரையோர பகுதிகள் மற்றும் வண்டல் (sediment) படிமங்களில் இவை கிடைக்கிறது.
பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட 2 அல்லது 3 மடங்கு இதன் விலை அதிகம். சர்வதேச சந்தையில் ஒரு கிராம் இரிடியத்தின் விலை என்பது நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் டாலர்களாக உள்ளது. அதனால் இதனை மோசடியாக வாங்கி விற்பதில் சிலர் முயற்சிக்கின்றனர்" எனக் கூறுகிறார் பார்த்திபன்.
'தங்கத்தைவிட அடர்த்தி அதிகம்'
"இரிடியத்தின் அணு எண் 191. இதை வேதியியல் ஆய்வகத்தில் வினை ஊக்கியாக (Catalyst) பயன்படுத்துகின்றனர். தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றைவிடவும் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாக இரிடியம் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"நீர், அமிலம் என இரிடியத்தை எங்கு தூக்கிப் போட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது" எனக் கூறும் பார்த்திபன், "அடர் அமிலத்தில் அதிக நேரம் வைத்திருந்தால் மட்டுமே அதற்கு பாதிப்பு ஏற்படும். எளிதில் தீப்பிடிக்காது என்பதால் விமானத்தில் மின்சாதன கருவிகளில் பயன்படுத்துகின்றனர்" என்கிறார்.
"இரிடியம் பூசப்பட்ட (coated) எல்.இ.டி விளக்குகள், லேப்டாப் போன்றவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இரிடியத்தை நியூட்ரான் கொண்டு மோதவிடும்போது அது இரிடியம் 192 ஆக மாறிவிடும். இதை ரேடியோ ஆக்டிவ் ஐசோடோப் (radio active isotope) என்கின்றனர். அப்போது அதிக கதிரியக்க தன்மை வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்" எனக் கூறுகிறார் பார்த்திபன்.
'மனித உயிருக்கே ஆபத்து'
"இவ்வாறு மாற்றப்படும் போது அதை இயல்பாக கையாள முடியாது. பாதுகாப்பான கருவிகள் அல்லது மரத்தால் ஆன பொருள் மூலம் மூடப்பட வேண்டும் (Personal protected equipment (PPE). சுமார் 90 அடி வரையில் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கையாளாவிட்டால் கதிரியக்கம் வெளிப்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" எனவும் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் இரிடியம் 192 பயன்படுத்துவதாகக் கூறும் அவர், "ப்ராஸ்டேட் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன" எனக் கூறுகிறார்.
கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதா?
"கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதாக மோசடிகள் நடந்தன. இதில் உண்மை உள்ளதா?" எனக் கேட்ட போது, "தங்கம், செம்பு உள்பட வேறு உலோகங்களுடன் வினைபுரியும்போது துணைப் பொருளாக (Bi Product) இரிடியம் கிடைக்கிறது. மிகப் பழைமையானதாக இருக்கும் உலோகத்தில், இவை இயல்பாகவே உருவாகும்" எனக் கூறுகிறார்.
உதாரணமாக, பழமையான கோவில் கலசத்தில் 2 கிராம் அளவு தங்கம் இருந்தால் அதில் சுமார் 500 மி.கி அளவு இரிடியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், "மிகக் குறைவாக கிடைத்தாலும் அதன் விலை என்பது மிக அதிகம். அரசு அனுமதி பெற்ற ஆய்வகங்களுக்கு 1 கிராம் சுமார் 83 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது" என்கிறார்.
தொடர்ந்து பேசும்போது, "இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அலாய் வீல்களைத் தயாரிக்கும்போதும் நகை தயாரிப்பிலும் இரிடியம் உருவாகின்றன. அவ்வாறு கிடைத்தால் சட்டவிரோதமாக யாருக்கும் விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதித்துள்ளது" எனக் கூறினார்.
"இரிடியம் 192 வகையை மிகப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறும் பார்த்திபன், 2015 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் உள்ள டாபாஸ்கோ (Tabasco) மாநிலத்தில் மருத்துவ ஆய்வகத்தில் இருந்து இரிடியத்தை சிலர் சட்டவிரோதமாக திருடிய சம்பவத்தை மேற்கோள் காட்டினார்.
"இரிடியத்தை மூடப்பட்ட கலனில் பாதுகாப்பாக கொண்டு செல்லாததால் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது" எனக் கூறுகிறார் பார்த்திபன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு