You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் வாழ்ந்த யூதர்கள் பற்றி தெரியுமா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த செய்திகள் கடந்த ஒரு மாத காலமாக உலகத்தை ஆக்கிரமித்துள்ளது. இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களான யூத இன மக்களுக்கும், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள சென்னை நகரத்திற்கும் தொடர்பு உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
1640களில் அன்றைய மதராஸ் நகரத்திற்கு புலம்பெயர்ந்த யூத இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள், 2020 வரை தற்போதைய சென்னை நகரத்தின் பவளக்காரத்தெருவில் வசித்துவந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கடைசி யூத குடும்பம் இந்திய குடியுரிமையை துறந்து, சென்னை நகரத்தில் இருந்து வெளியேறியது. தற்போது யூத மக்கள் சென்னை நகரத்தில் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருப்பது, லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு சில கல்லறைகள் மட்டுமே.
சென்னை நகரத்தின் கடைசி யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் டேவிட் லெவி(45). தனது முன்னோர்கள் வாழ்ந்த நகரத்தில் இருந்து வெளியேறிய கவலை இன்னும் அவரிடம் தென்படுகிறது. மத ரீதியாக யூத மதத்தை பின்பற்றினாலும், பிறந்து வளர்ந்தது சென்னை நகரம் என்பதால், சரளமாக தமிழில் உரையாடினார் டேவிட்.
''நான் பிறந்தது சென்னை, ராயபுரத்தில்தான் படித்தேன். சிறுவயது முதல் என் பெற்றோர் யூத மத வழிபாடுகள், எங்களின் வரலாறு பற்றி சொல்லியிருக்கிறார்கள். அதனால், இயல்பாகவே எங்களின் அடையாளத்தை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னிடம் உண்டு. நான் என் தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை நகரத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.
ஆனால் 400 ஆண்டுகள் எங்கள் முன்னோர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள், இந்த நகரத்தில் நாங்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தை பதிவு செய்யவேண்டும் என்பதை தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்திவருகிறேன்,''என ஆதங்கத்துடன் பேசினார் டேவிட்.
யூதர்களுக்கும், சென்னை நகரத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய வரலாற்று ஆவணங்கள், பொருட்கள் போன்றவற்றை படங்கள் எடுத்து, முகநூல் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டுவருகிறார் இவர்.
17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் பகுதிகளில் இருந்து கட்டாய வெளியேற்றம் செய்யப்பட்ட யூத மக்கள் உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். காலப்போக்கில், இங்கிலாந்து மற்றும் ஹாலந்து பகுதிகளில் வாழ்ந்த சில யூத குடும்பங்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் குடியேறினர். அவர்களில் சிலர், மதராஸ் நகரத்தில் நிரந்தரமாக வாழத் தொடங்கினர். ஆங்கிலேயர்களுடன் நட்புறவில் யூதர்கள் இருந்தனர்.
1687ல் உருவாக்கப்பட்ட மதராஸ் மாநகராட்சியின் 12 முக்கிய அதிகாரிகள் பட்டியலில், யூத குடும்பங்களைச் சேர்ந்த மூன்று நபர்கள் இடம்பெற்றிருந்தனர் என தகவல்களை அடுக்கினார் டேவிட். இந்த தகவல் தற்போதைய சென்னை மாநகராட்சியின் இணையதளத்திலும் காணக்கிடைக்கிறது.
சென்னை நகரத்தில் வசித்த பல்வேறு இனம், மொழி பேசும் மக்களை பற்றிய புத்தகங்களை எழுதிவரும் வரலாற்று எழுத்தாளர் வெங்கடேஷ், மதராஸ் நகரத்தில் யூதர்களின் குடியேற்றத்திற்கு பின்னர், பிரிட்டிஷ் இந்தியாவில் வைரம் மற்றும் பவளம் ஏற்றுமதி செய்யும் தொழிலில் புதிய மாற்றம் ஏற்பட்டது என்கிறார்.
''யூதர்கள் தங்களது சர்வதேச வலைப்பின்னலை வைத்து, இந்தியாவில் கோல்கொண்டா(இன்றைய ஹைதராபாத் நகரத்தின் புறநகர் பகுதி) பகுதியில் இருந்து இங்கிலாந்துக்கு வைரம் மற்றும் பவளத்தை ஏற்றுமதி செய்தனர். யூதர்கள் பவள ஏற்றுமதியில் கோலோச்சிய காரணத்தால், அவர்கள் வாழ்ந்த பகுதி, பவளக்காரத்தெரு என்ற பெயரை பெற்றது. தற்போதும் அந்த பெயர் நீடிக்கிறது. கோல்கொண்டாவில் இருந்த சுரங்கங்களையும் அவர்கள் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்,'' என விளக்குகிறார் வெங்கடேஷ்.
தமிழ் பெயர் வைத்துக்கொண்ட யூத பெண்
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும் தொடர்ந்து சென்னையில் வசித்த யூதர்கள், ஒரு கட்டத்தில் இங்குள்ள சமூக கலாச்சார நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு தங்களை இந்தியர்களாகவே கருதினர். அப்போதைய அரசியல் தலைவர்களோடு இணக்கமாக இருந்தனர் என்கிறார் டேவிட்.
டேவிட்டின் தாய்வழி கொள்ளு பாட்டி ரோசா டி காஸ்ட்ரோ மற்றும் கொள்ளு பாட்டனார் ஐசக் டி காஸ்ட்ரோ திராவிட இயக்க தலைவரான அண்ணாதுரையிடம் நெருக்கமாக பழகியுள்ளனர்.
இதனை குறிக்கும் வகையில், ரோசா மற்றும் ஐசக் ஆகியோரின் கல்லறை அமைந்துள்ள பகுதியில், அறிஞர் அண்ணா அவர்களின் மறைவின்போது வெளியிட்ட இரங்கல் செய்தி கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. யூத மத பெயர் அல்லாமல், தமிழில் ரோசா என்ற பெயரை அந்த பெண்மணிக்கு அவரது பெற்றோர் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசக் அண்ணா எப்போதும் உதவி செய்பவர் என்றும், ரோசா அண்ணி அவரது பெற்றோரால் தமிழ் பெயர் சூட்டப்பட்டவர் என்றும் அறிஞர் அண்ணா தெரிவித்த கருத்து கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படையின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி, ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இதில், ஐசக் டி காஸ்ட்ரோவின் நினைவாகதான் சென்னை பார்க் டவுன் பகுதியில் ஒரு தெருவுக்கு ஐசக் தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது.
போர் காலத்தில், ஐசக் மற்றும் ரோசா தம்பதியின் மகன் லெவி மட்டும் நாஜி படையிடம் இருந்து தப்பித்து, சென்னை வந்துசேர்ந்தார். அதன் பின்னர் அவர் வேறு எங்கும் நிரந்தரமாக தங்கவில்லை. சென்னை நகரத்தில் தனது குடும்பத்தை அமைத்துக்கொண்டார். லெவியின் பேரன்தான் சென்னையில் பிறந்து வளர்ந்த டேவிட் லெவி.
''யூதர்களான எங்களின் வழிபாட்டு தலம் ஒன்று ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்திருந்தது. 1600களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட அந்த தலம் பிற்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. 1968ல் பள்ளிக்கூடம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசாங்கம் அந்த இடத்தை எடுத்துக்கொண்டது. மற்றொரு தலம் மின்ட் தெருவில் இருந்தது. அதுவும் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனால், எங்களின் வழிபாட்டு தலம் இருந்ததற்கான சுவடு கூட தற்போது இல்லை. ஆனால் எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய பூசை பொருட்களை மட்டும் நான் பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்,''என்கிறார் டேவிட் லெவி.
மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், கைகழுவும் குவளை, வெள்ளி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புனித நூல்கள், அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குவளைகள், வழிபாடு நேரத்தில் அணியப்படும் துணிகள் என பல பொருட்கள் தற்போது டேவிட் லெவியிடம் உள்ளன.
சென்னையின் வரலாற்றில் யூதர்களின் இடம்
பிரிட்டிஷ் இந்தியாவில் 1921ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மதராஸில் அன்று 45 யூதர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவலை சொல்லும் டேவிட், தான் வெளியேறிய பின்னர், 2020 முதல் சென்னை நகரத்தில் தனது இனத்தின் வரலாறு அழிந்துவிட்டதாக கருதுகிறார்.
''யூதர்களான நாங்களும் இங்கு வாழ்ந்தோம் என்ற வரலாறு பதிவு செய்யப்படவேண்டும். நான் யூதஇனத்தை சேர்ந்த நபராக இருந்தாலும், என்னுடைய நினைவுகளால் நான் சென்னைவாசியாக உணர்கிறேன். சென்னையில் ஒரு வித நெருக்கத்தை நான் உணர்கிறேன். அதை என் அடுத்த தலைமுறையும் உணரவேண்டும் என விரும்புகிறேன்,''என பேசும்போது டேவிட்டின் குரல் தழுதழுத்தது.
கேரளாவைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் கர்மச்சந்திரன் இந்தியாவில் யூதர்களின் குடியேற்றம் குறித்த ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டவர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''இந்தியாவில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் குடியேறியிருக்கிறார்கள். குறிப்பாக யூதர்களின் குடியேற்றம் ஆபத்தான காலத்தில் அவர்கள் பாதுகாப்பு தேடி இந்தியா வந்த சமயத்தில் நடந்தது. தமிழ்நாட்டில் இருந்த யூதர்களின் ஆலயம் காலமாற்றத்தில் காணாமல் போய்விட்டது. கேரளாவில் எஞ்சியுள்ள மூன்று தலங்களை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மைக்கு அடையாளமாக இவர்களின் வரலாறு பாதுகாக்கப்படவேண்டும்,''என்றார்.
டேவிட் லெவியிடம் உள்ள பொருட்களை தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க வாய்ப்புள்ளதா என தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரனிடம் கேட்டோம்.
''டேவிட் லெவி குறிப்பிடும் பொருட்கள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கவனத்திற்கு வந்தது. அந்த பொருட்களின் காலம் மற்றும் அந்த பொருட்கள் மீதான உரிமை குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)