ரூபாய் மூலம் வர்த்தகம்: இந்தியா, மலேசியா உடன்பாடு - யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அனைத்துலக வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வந்த நிலையில், 'ரூபாயைக் கொண்டு வர்த்தகம்' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இந்த அறிவிப்பையொட்டி இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் பட்டியலும் வெளியாகி உள்ளது.
மொத்தம் 18 நாடுகள் இந்தியாவுடன் 'ரூபாய்' உதவியுடன் வர்த்தகம் மேற்கொள்ள முன்வந்துள்ளன. அவற்றுள் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் மலேசியாவும் ஒன்று.
இனி இவ்விரு நாடுகளும் வர்த்தகம் சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை இந்திய ரூபாயில் மேற்கொள்வது என உடன்பாடு கண்டுள்ளன.
இந்தப் புதிய அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் 18 நாடுகளுடன் இந்தியா கண்டுள்ள இந்தப் புதிய உடன்பாடானது அனைத்துலக வர்த்தகச் சந்தையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவும் மலேசியாவும் இதுநாள் வரை அமெரிக்க டாலர் உள்ளிட்ட சில வெளிநாட்டு கரன்சிகள் மூலம் வர்த்தகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென இந்திய ரூபாய் மூலம் இந்த நடைமுறைகளைத் தொடர்வது எப்படி சாத்தியமாகும்?
இந்தக் கேள்விக்கான விடைதான் 'இந்தியா இண்டர்நேஷ்னல் பேங்க் ஆப் மலேசியா' என்கிறது இந்திய வெளியுறவு அமைச்சகம். கோலாலம்பூரில் இயங்கி வரும் இந்த வங்கி, இந்தியாவில் உள்ள 'யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. எனவே இவ்விரு வங்கிகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்களுக்கான தொகையை இந்திய ரூபாய் மூலம் செலுத்த முடியும்.
பொதுவாக குறிப்பிட்ட ஒரு நாட்டுடனான வர்த்தகம் தொடர்பில் செலுத்த வேண்டிய தொகையை அந்நாட்டின் (உள்நாட்டு) நாணயம் (கரன்சி) மூலம் செலுத்த வேண்டியிருப்பின் Vostro என்ற சிறப்புக் கணக்கை தொடங்க வேண்டியது அவசியம். அதன்படி, 'இந்தியா இண்டர்நேஷ்னல் பேங்க் ஆப் மலேசியா' தற்போது 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் சிறப்பு Vostro கணக்கை தொடங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுடன் ரூபாய் மூலம் வர்த்தகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முன்வந்திருக்கும் 18 நாடுகளில் உள்ள வங்கிகள் இத்தகைய சிறப்பு கணக்கை இந்திய வங்கிகளில் தொடங்கி உள்ளன.
இதற்கான அனுமதியை கடந்த மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. 2022 ஜூலை மாதமே ரிசர்வ் வங்கி இத்தகையை நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, ஃபீஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மொரீஷியஸ், மியன்மார், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, செஷல்ஸ், போஸ்வானா, இலங்கை, தான்சானியா, உகாண்டா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய 18 நாடுகளில் உள்ள வங்கிகள் சிறப்பு வாஸ்ட்ரோ கணக்குகளை திறந்துள்ளன.
வர்த்தக வளர்ச்சியையும் அனைத்துலக வர்த்தக சமூகத்தின் நலன்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்திய ரூபாயில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
'ரூபாய் வழி வர்த்தகம்': நான்கு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்
இந்தியா, மலேசியா இடையேயான 'ரூபாய் வழி வர்த்தகம்' இருதரப்புக்குமே ஆதாயங்களையும் பரஸ்பர வர்த்தக வளர்ச்சியையும் அளிக்கும் என்கிறார் மலேசிய பொருளியல் வல்லுநரான மாசிலாமணி.
'ரூபாய் வழி வர்த்தகம்' தொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் மூலம் நான்கு விதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.
முதலாவது அம்சம் வர்த்தகத்துக்கான பணப் பரிமாற்றத்திற்கு என ஏற்படக்கூடிய செலவு . அதாவது அமெரிக்க டாலரைப் பயன்படுத்தும்போது எக்ஸ்சேஞ்ச் என்ற நடைமுறையைப் பின்பற்றும்போது கமிஷன் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இரண்டாவதாக உலகச் சந்தையில் நாணயங்களின் மதிப்பு நாள்தோறும் எதிர்கொள்ளும் ஏற்ற இறக்கங்கள்.
மூன்றாவதாக, அதிகரிக்கும் வர்த்தக அளவு.
நான்காவதாக வர்த்தக தொடர்புகளும் நடவடிக்கைகளும் அதிகரிப்பது. எனவே நமக்கான வர்த்தக தொடர்புகளை (Economic Choice) நாமே தேர்வு செய்யும் வாய்ப்பும் அமைகிறது.
இந்த நான்கு அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் இந்தியா, மலேசியா ஆகிய இருதரப்பிலும் உள்ள வர்த்தகர்கள், தொழில் முனைவோர் தொடங்கி சாமானியர்கள் வரை பலன் அடையலாம் என்கிறார் மாசிலாமணி.

பட மூலாதாரம், Masilamani
வர்த்தகம் வளர்ச்சி அடையும்
"பல காலமாகவே அமெரிக்க டாலருக்குதான் அனைத்துலகச் சந்தையில் மதிப்பு இருந்து வருகிறது. ஆனால் டாலரைப் பயன்படுத்தும்போது பண்ட மாற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும்.
நேரடியாக இந்திய ரூபாயில் வர்த்தக நடவடிக்கைளை மேற்கொள்ளும்போது பல்வேறு செலவினங்கள் இருக்காது. மலேசியாவுக்கான தொகையை அதன் நாணயமான ரிங்கிட் மூலம் செலுத்தாமல் டாலர் மூலம் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். முதலில் இந்திய ரூபாயை அமெரிக்க டாலராக மாற்ற வேண்டும். பிறகு டாலரை, மலேசிய ரிங்கிட்டாக மாற்ற வேண்டும். இதனால் இருமுறை டாலருக்குரிய நாணய மாற்றுத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
சில சமயங்களில் இந்த நடைமுறை இந்தியா அல்லது மலேசியா என ஏதாவது ஒரு தரப்புக்கு ஆதாயமுள்ளதாக அமையக்கூடும். பல சமயங்களில் அப்படி இருக்காது.
நாணய மதிப்பு என்பது எப்போதுமே ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். தற்போது அமெரிக்க நாணயமான டாலர், நிலைத்தன்மையற்ற நிலையில் உள்ளது. எனவே டாலரை முன்வைத்து வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு இத்தகைய நிலை பாதகமாக அமைகிறது.
தற்போது இந்திய ரூபாய் பலப்பட்டு வருகிறதோ இல்லையோ அதன் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து வருகிறது. ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இக்கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. அதேபோல் மலேசியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள நல்ல முடிவு.
வர்த்தக அளவு அதிகரிக்கும்போது வர்த்தகர்கள் பயனடைவது இயல்பு. பணப்பரிவர்த்தனை எளிதாகும்போது வர்த்தகம் வளர்ச்சி காணும்.
இந்திய ரூபாயைக் கொண்டு வர்த்தகம் மேற்கொள்ள இந்திய அரசு முன்வந்திருப்பதன் மூலம் இரு தரப்பு வர்த்தகர்களும் பலனடைவார்கள் என்றே கருதுகிறேன்.
மலேசிய பிரதமர் அண்மையில் சீனா சென்றுதிரும்பியுள்ளார். அவரது அரசுமுறை பயணத்தின் மூலம் மலேசியாவுக்கான பல வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்த முடிந்தது. அதேபோல் இந்தியாவுக்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என நம்புகிறேன். அதன் மூலம் பொருளாதார உறவுகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்," என்கிறார் மாசிலாமணி.

பட மூலாதாரம், Ramasamy
இந்தியாவும் மலேசியாவும் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது
நீண்ட காலமாக அனைத்துலகச் சந்தையில் நீடித்து வரும் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் இந்தியாவும் மலேசியாவும் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுடன் இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்பதில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் முனைப்பாக உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"ரஷ்யா, யுக்ரேன் இடையேயான மோதல் அனைத்துலக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவும் மலேசியாவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இரு தரப்பு வர்த்தகங்கள் அதிகரிக்கும், வர்த்தகர்களுக்கு ஆதாயம் உண்டாகும். இதை உணர்ந்துதான் மலேசிய அரசு இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டு இருக்கும் என நம்புகிறேன்.
ஒருசில வர்த்தகங்கள் இந்தப் புதிய உடன்பாடு காரணமாக பாதிக்கப்படலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது எனில், அது குறித்தும் பிரதமர் மட்டுமல்ல மலேசிய அரசாங்கமும் ஆராய்ந்திருக்கும். பல்வேறு நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மலேசியப் பிரதமர் செயல்பட்டு வருவதால் இந்தியா உடனான இந்தப் புதிய வர்த்தக ஏற்பாடு, மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது," என்கிறார் பேராசிரியர் ராமசாமி.
இந்தியா, மலேசியா இடையே பில்லியன் கணக்கில் நடைபெறும் வர்த்தகங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தப் புதிய நடைமுறையானது வர்த்தகத்துக்கு உட்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் இதர வர்த்தக சேவைகளுக்கான சிறந்த விலையை இந்திய, மலேசிய வர்த்தகர்களுக்கு அளிக்கும் என்கிறது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா.
நேரடியாக இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய முடியும் என்பதால், இரு தரப்பிலும் உள்ள வர்த்தகர்களுக்கும் இந்தப் புதிய ஏற்பாடு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நாணய மாற்றத்துக்கான (எக்ஸ்சேஞ்) செலவுகளை சேமிக்க முடியும் என்றும் அந்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியா, மலேசியா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு கடந்த 2021-22 ஆம் ஆண்டு 19.4 பில்லியன் டாலராக இருந்தது. இந்திய அரசின் புதிய அறிவிப்பையடுத்து நாணய பரிமாற்றம் தொடர்பான சிக்கல்கள் களையப்படும் என்பதால், மொத்த வர்த்தக அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் வட்டாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவுடன் அதிக வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் மலேசியாவை முந்தி நிற்கின்றன. 2021-22ஆம் ஆண்டில் சிங்கப்பூர், இந்தியா இடையேயான மொத்த வர்த்தக அளவு $30.1 பில்லியாக உள்ளது. இந்தோனீசியாவும் இந்தியாவும் $26.1 பில்லியன் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன.
நடப்பாண்டின் இறுதிக்குள் தனது ஏற்றுமதி அளவை இரண்டு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கத்துடன் இந்தியா செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்க டாலர் அல்லது யூரோ கரன்சியை எதிர்பார்க்காமல் மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது இந்தியா.
உலகளவில் பார்க்கும்போது மலேசியாவுக்கு இந்தியா 13ஆவது ஆகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், மலேசியாவுக்கு இந்தியா 10ஆவது ஆகப் பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் உள்ளன.
கனிம எரிபொருள்கள், அலுமினியம், இறைச்சி உணவு, எஃகு, குறிப்பிட்ட வகை ரசாயனங்கள், கொதிகலன்கள், மின் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதியாகின்றன.
பாமாயில், கரிம ரசாயனங்கள் உள்ளிட்டவை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகின்றன.

பட மூலாதாரம், Devendran
டாலரை ஒடுக்கும் நடவடிக்கையா?
ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்குமான போர் காரணமாக இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய தாக்கத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் 'ரூபாய் வழி வர்த்தகம்' என்கிறார் கோலலம்பூரை சேர்ந்த செய்தியாளர் கு.தேவேந்திரன்.
இதன் எதிரொலியாக, அமெரிக்க டாலர் அல்லாத வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.
"இதை டாலரை ஒடுக்கும் நடவடிக்கையாக அல்லாமல் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கான செயலாகவும் பார்க்கலாம்," என்கிறார் கு.தேவேந்திரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












