முகமது ஷமி: உலகக் கோப்பையில் மாயாஜாலம் காட்டும் இவர் திறமையை பட்டை தீட்டியது எப்படி?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டெல்லியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 9ல் இருந்து பிரிந்து ஒரு குறுகிய சாலை வளைந்து வளைந்து முன்னோக்கி செல்கிறது.

இருபுறமும் கரும்பு தோட்டங்கள் காணப்படுகின்றன. நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உயரமான வெள்ளை சுவர்களால் சூழப்பட்ட ஒரு பண்ணை வீடு உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் வீடு இது. அவருக்கு கிடைத்துள்ள புகழ் மற்றும் வெற்றியின் கதையை அது சொல்கிறது.

அம்ரோஹாவில் உள்ள சஹஸ்பூர் அலிநகர் என்ற ஒரு அமைதியான கிராமத்தில் பிறந்து, கரடுமுரடான மைதானங்களில் டென்னிஸ் பந்துகளுடன் கிரிக்கெட் விளையாடி வளர்ந்த முகமது ஷமி, 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் 6 போட்டிகளில் முறையே 5, 4, 5, 2, 0 மற்றும் 7 என மொத்தம் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் முகமது ஷமி.

முகமது ஷமி
படக்குறிப்பு, முகமது ஷமியின் கிராமத்தில் பந்துவீசும் ஒரு இளைஞர்

எந்தவொரு பந்துவீச்சாளரும் கனவு காணும் சாதனை இது. உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளான 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை எட்ட ஷமி, இன்னும் நான்கு விக்கட்டுகளை மட்டுமே சாய்க்கவேண்டும்.

சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தில் இப்போது செய்தியாளர்களின் கூட்டம் காணப்படுகிறது. அவர்களிடம் சொல்வதற்கு முகமது ஷமி தொடர்பான கதைகள் கிராம மக்களிடம் நிறைய உள்ளன.

முகமது ஷமியை கிராம மக்கள் ‘சிம்மி பாய்’ என்று அழைக்கின்றனர். சிம்மி சிறுவனாக இருந்தபோது ​​அவரது தந்தை தௌசிஃப் அலி கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவார்.

​​"இந்த கிராமத்திற்கு கிரிக்கெட்டை கொண்டு வந்தவர் தௌசிஃப் தான். அந்த நாட்களில் நாங்கள் ரேடியோவில் வர்ணனை கேட்போம். அதிலிருந்து கிரிக்கெட் மோகம் பிறந்தது. தௌசிஃப் கிரிக்கெட் கிட் கொண்டு வந்தார். கிராமத்தில் ஒரு பிட்ச் அமைத்தார்,” என்று சஹஸ்பூரைச் சேர்ந்த முகமது ஜும்மா குறிப்பிட்டார்.

முகமது ஷமி
படக்குறிப்பு, முகமது ஷமியின் தந்தை தௌசிஃப் அகமது, சஹாஸ்பூர் அலிநகர் கிராமத்தில் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் எனத் தெரிவித்தார் ஜூம்மா.

ஷமி திறமையை பட்டை தீட்டியது எப்படி?

"சிம்மி சிறுவனாக இருந்தபோது கூடுதல் பீல்டராக அவரை விளையாட்டில் சேர்த்துக்கொள்வார்கள். அவர் மிக வேகமாக ஓடுவார். பின்னர் அவர் பந்து வீசத் தொடங்கினார். விளையாட யாரும் இல்லை என்றாலும்கூட அவர் தனியாக பந்து வீசிப்பழகுவார்,” என்று ஜும்மா நினைவு கூர்ந்தார்.

சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தில் முகமது ஷமியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பழைய மயானம் உள்ளது. இப்போது அங்கே உயரமான புதர்கள் காணப்படுகின்றன. ஆனால் ஷமி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட காலத்தில் அங்கு ஒரு ஆடுகளம் இருந்தது.

இந்த கரடுமுரடான மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாய்வான ஆடுகளத்தில் ஷமியின் பந்துகள் சீறிக்கொண்டு செல்லும்.

"கிராமத்திற்கு அதன் சொந்த கிரிக்கெட் அணி இருந்தது. ஷமியின் மூத்த சகோதரர் ஹசீபும் ஆல்ரவுண்டர். அந்தக் காலத்து குழந்தைகள் போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேர ஆர்வமாக இருந்தனர். உடல்தகுதியை ஏற்படுத்திக்கொள்ள கிரிக்கெட் உதவிகரமாக இருந்தது. எனவே கிராமத்தில் வலுவான ஒரு அணி உருவானது,” என்று ஜும்மா கூறினார்.

முகமது ஷமி தனது வேகத்தால் முத்திரை பதித்தார். அப்பகுதியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இவரது ஆட்டத்தை காண மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம்.

"இந்த வீரர்கள் பின்னர் நகர அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட ஆரம்பித்தனர். மொராதாபாத்தில் உள்ள சோனக்பூர் ஸ்டேடியத்தில் விளையாடும் போது ​​பயிற்சியாளர் பதுருதீன் ஷமியை கவனித்தார். அவர் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்ய ஷமியை அழைத்தார்,” என்று ஜும்மா கூறுகிறார்.

இது முகமது ஷமியின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்போது அவரிடம் பயிற்சி செய்ய ஒரு மைதானம், ஒரு பயிற்சியாளர் மற்றும் முன்னேறுவதற்கான கனவும் இருந்தன.

பயிற்சியாளர் பத்ருதீனும் ஷமியின் வேகத்தால் கவரப்பட்டார். அவர்தான் உயர் பயிற்சிக்காக கொல்கத்தா செல்ல ஷமியை தூண்டினார்.

ஷமியின் ஆட்டத்தை பார்த்து பத்ருதீன் மலைத்துப்போயுள்ளார்.பிபிசியிடம் பேசிய பத்ருதீன், "ஷமி நன்றாக முன்னேறுவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் இவ்வளவு அற்புதமாக செயல்படுவார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இன்று ஷமி உலகின் சிறந்த பந்துவீச்சாளர்," என்று தெரிவித்தார்.

ஷமியின் வெற்றிக்கான காரணத்தை விளக்கும் பத்ருதீன், "அவர் தனது லைனில் சீம் வைத்து பந்து வீசுகிறார். தற்போது உலகிலேயே அவரது சீம் பந்துவீச்சுதான் சிறந்ததாக உள்ளது" என்று கூறுகிறார்.

"அவரது பந்துவீசும் முறை எளிமையானது. இது அவரது மிகப்பெரிய பலம். அவர் அதில் கவனம் செலுத்துகிறார். அவர் பந்தை ஒரே இடத்தில் வீசுகிறார். அங்கிருந்து அவர் ஸ்விங் செய்கிறார். அவரது பந்து சீம் மற்றும் ஸ்விங் இரண்டையும் செய்கிறது. அதனால்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அவருக்கு முன்னால் குழப்பமடைகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

முகமது ஷமி
படக்குறிப்பு, முகமது ஷமி தற்போது தனது வெற்றியை மகிழ்ச்சியாக அனுபவித்து வருவதாக ஷமியின் சகோதரர் ஹசீப் கூறுகிறார்.

ஷமியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு அவரது கடின உழைப்புதான் காரணம் என்று பத்ருதீன் தெரிவித்தார். ​​"அவர் பயிற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தவே இல்லை. எப்போதும் கடினமாக உழைத்துக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகளாக அவர் செய்த கடின உழைப்பின் விளைவு உலகக் கோப்பையில் தெரிகிறது," என்கிறார் அவர்.

சஹஸ்பூர் அலிநகர் கிராமத்திற்கு வெளியே கட்டப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் மைதானம், கிராமத்து குழந்தைகளின் விளையாட்டு மைதானமாகவும் உள்ளது. பச்சைப் புல்லும், சமதளமான ஆடுகளமும் உள்ள இந்த மைதானத்தில் கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்கள் மதியம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

முகமது ஷமி ஒரு முழு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்துள்ளார். இதில் அவரது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களும் அடங்குவர்.

முனீர் ஒரு வேகப்பந்து வீச்சாளர். "சிம்மி பாயைப் பார்த்து நானும் விளையாடுகிறேன். அவர் செய்துள்ள சாதனையை பார்க்கும்போது என்னாலும் ஒரு நாள் அந்த இடத்தை அடையமுடியும் என்று உணர்கிறேன்," என்கிறார் முனீர்.

கிராமத்தில் ஒரே மைதானம்தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய கட்டிடம் கட்டுவதற்காக அங்கு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

முகமது ஷமி

பட மூலாதாரம், ANI

இங்கு இதுவரை விளையாட்டுக்கான எந்த வசதியும் இல்லை. ”வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து விளையாடுவோம். சிம்மி பாய் போல் பந்து வீசினால் எங்களுக்கும் எங்காவது ஒரு இடம் கிடைக்கும்,” என்கிறார் முனீர்.

உலகக் கோப்பையில் முகமது ஷமியின் சிறப்பான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது அம்ரோஹா மாவட்ட நிர்வாகம் இங்கு மினி ஸ்டேடியம் கட்டப் போகிறது.

“முகமது ஷமியின் கிராமத்தில் மினி ஸ்டேடியம் கட்ட அரசுக்கு யோசனை அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும். நிலத்தை கண்டறிந்துவிட்டோம். மாவட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று வந்துள்ளனர்,” என்று அம்ரோஹா மாவட்ட அதிகாரி ராஜேஷ் குமார் தியாகி கூறினார்.

முகமது ஷமி காரணமாக கிராமத்தில் மைதானம் கட்டப்பட்டு மற்ற வசதிகள் கிடைக்க உள்ளன என்பதில் முனீர் போன்ற வீரர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அதே நேரத்தில் அரசியல் கட்சிகளும் இந்த கிராமத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தனது நாடாளுமன்ற நிதி மூலம் முகமது ஷமியின் கிராமத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த விரும்புவதாக ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி
படக்குறிப்பு, தொழுகை நடத்தும் முகமது ஷமியின் தாய் அஞ்சும் ஆரா

மறுபுறம் முகமது ஷமியின் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. டெல்லியில் இருந்து டஜன் கணக்கான செய்தியாளர்கள் இங்கு வந்து ஷமியின் குடும்ப உறுப்பினர்களை நேர்காணல் செய்து வருகின்றனர்.

"ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போது அவர் என்றாவது ​​ஒருநாள் ஆறு அல்லது ஏழு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தேன். தற்போது ஷமி இந்த சாதனையை படைத்துள்ளார். இதனால் இந்தப்பகுதி முழுவதும் மகிழ்ச்சியில் உள்ளது,” என்று ஷமியின் மூத்த சகோதரர் ஹசீப் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஹசீப்பும் கிரிக்கெட் வீரராக இருந்தவர். "எங்கள் தந்தை கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து எங்கள் இருவருக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டது. ஷமியிடம் ஸ்பீட் இருந்தது. குடும்பம் அவரது பயிற்சியில் கவனம் செலுத்தியது. இரண்டு சகோதரர்களில் ஒருவரை மட்டுமே பயிற்சிக்கு அனுப்ப முடியும் என்ற நிலை இருந்தது. ஷமி சென்றார். அதன் விளைவை இன்று உலகமே பார்க்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஹசீப், வான்கடே மைதானத்துக்கு போட்டியைக் காணச் செல்லவில்லை. ஏனெனில் இறுதிப் போட்டியைப் பார்க்கத் அவர் திட்டமிட்டிருந்தார்.

”இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனவே நான் அகமதாபாத் செல்ல விரும்பினேன். ஆனால் வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியைப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை என்னால் நேரில் பார்க்க முடியவில்லை,” என்றார் அவர்.

முகமது ஷமி
படக்குறிப்பு, கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று கனவு காணும் முனீர் போன்ற இளைஞர்களுக்கு முகமது ஷமி உத்வேகம் அளித்துள்ளார்.

இறுதிப்பந்தயத்தை பார்ப்பதற்காக ஹசீப் தற்போது குடும்பத்துடன் அகமதாபாத் சென்றுள்ளார். "இன்று ஒவ்வொரு இந்தியனும் ஷமியை பார்த்து எந்த அளவிற்கு பெருமைப்படுகிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் முகமது ஷமி விளையாட்டில் கவனம் செலுத்தினார் மற்றும் எந்த சூழ்நிலையிலும் தனது பயிற்சியை விட்டுவிடவில்லை.

"தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பயிற்சி செய்வார். அந்த நேரத்தில் அவர் யாரிடமும் பேசமாட்டார். என்ன நடந்தாலும் அவர் தனது பயிற்சியை கைவிடமாட்டார். இந்த தொடர்ச்சியான, இடைவிடாத கடின உழைப்புதான் அவரது வெற்றிக்கான உண்மையான காரணம்," என்று ஹசீப் குறிப்பிட்டார்.

முகமது ஷமி மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர். மிகவும் குறைவாகவே பேசுவார். ”அவர் பேச மாட்டார். புன்னகை மட்டுமே செய்வார். இங்கு வரும்போதும் எப்போதாவதுதான் வெளியே செல்வார்,” என்கிறார் ஹசீப்.

ஷமியின் தாய் அஞ்சும் ஆராவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை. மகனின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள அவர் இறுதிப் போட்டிக்கு முன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)