கேரள பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை - இரண்டே ஆண்டுகளில் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
கேரளாவில் பாஜக நிர்வாகியான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து கேரள மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2021 இல் எஸ்டிபிஐ செயலாளராக இருந்த கே.எஸ்.ஷான் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்ரீனிவாசனின் கொலை கருதப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-1 நீதிபதி ஸ்ரீதேவி வி.ஜி., முதல் 8 பேருக்கு கொலை, சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்தல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்பது முதல் 12 பேர் வரை கொலை மற்றும் குற்றவியல் அத்துமீறலுக்காக தண்டிக்கப்பட்டனர். மேலும் மூன்று பேர் கிரிமினல் சதி மற்றும் கொலை குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டனர்.
ஷான் கொலை செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள், அதாவது, 2021 டிசம்பர் 19 அன்று காலை ஆலப்புழா நகராட்சியின் வெள்ளக்கிணற்றில் ஸ்ரீனிவாசன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
“இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் தாயின் கண்முன்னே அவர் கொலை செய்யப்பட்டார்'' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தீப் வச்சஸ்பதி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபருதின், மன்ஷத், ஜஸீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகிர் ஹுசைன், ஷ்ரேனாஸ் அஷ்ரப், ஷாஜி ஆகியோர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்.
"இந்த தீர்ப்புக்காக நாங்கள் காத்திருந்தோம். இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நமது சட்ட அமைப்பு மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்தும்,'' என்றார்.
“கேரளாவில் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானது அல்ல. இந்த வழக்கு அரிதான வழக்குகளில் மிகவும் அரிதானது என்று நாங்கள் வாதிட்டோம்.” என்று சிறப்பு அரசு வக்கீல் பிரதாப் ஜி படிக்கல் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
பழிக்குப் பழி கொலைகள்
2021-ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று, ஷான் தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கார் மீது மோதியதாகவும் அதன் பின் அவர் வெட்டி கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில், அதாவது மறுநாள் காலை சீனிவாசன் வெட்டிக் கொல்லப்பட்டார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த ஆண்டு பிப்ரவரியில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர் நந்து கிருஷ்ணனின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஷானின் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களுக்கு இடையே நடந்த மோதலே இந்த கொலைக்கு மூல காரணமாக என்று கூறப்படுகிறது. கேரள சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது.
“கொல்லப்பட வேண்டிய சங் பரிவார் இயக்கத்தினரின் பட்டியலை அவர்கள் தயார் செய்திருந்தனர். அந்த பட்டியலின்படி, ஆலப்புழா மாவட்டம் வயலாரைச் சேர்ந்த நந்துவும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த விஷாலும் கொல்லப்பட்டனர்" என்று சந்தீப் கூறினார்.
தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு (எல்.டி.எஃப்) தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்து வரும் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினரிடையே பல மோதல்கள் நடந்தன.
ஷான் மற்றும் சீனிவாசன் கொலைகளுக்கு முன்பு வரை, கேரளாவில் பழிக்கு பழி கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாதாரண தொழிலாளர்களாக இருந்தனர். ஆனால் மத்திய கேரள மாவட்டத்தில் மாநில அளவிலான அலுவலக பொறுப்பாளர்கள் இரு தரப்பினராலும் குறிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அரசியல் கொலைகள் நடக்கும் இடமாக ஆலாபுழா அதுவரையிலும் அறியப்பட்டதே இல்லை. இந்த கொலைகள் மாநில அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
"சீனிவாசன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் அரசியல் எதிரியை அகற்றுவதில் பொதுவான நோக்கம் கொண்டவர்கள்" என்று படிக்கல் கூறினார்.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று குற்றவாளிகளின் வழக்கறிஞர் பிபி ஹரீஸ் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கே.எஸ்.ஷான் கொலை தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கவில்லை. "பிப்ரவரி 2 ஆம் தேதி குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துவதற்கான வாதங்களை அவர்கள் முன்வைப்பார்கள்" என்று ஷான் வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பிபி ஹரீஸ் கூறினார்.
நந்துகிருஷ்ணன் வழக்கின் விசாரணையும் இன்னும் தொடங்கப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












