You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விதுர்ஷா: சவால்களை கடந்து கல்வியில் சாதிக்கும் மாற்றுத் திறனாளி மாணவி
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலாச்சோலை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விதுர்ஷா.
விதுர்ஷாவுக்கு வயது 19. ஆனால் அவரைப் பார்த்தல் அப்படித் தெரியாது. ஏனெனில் இவரது உயரம் இரண்டு அடிக்கும் குறைவு. சில நாட்களுக்கு முன்னர் வரை விதுர்ஷாவின் தோற்றத்தை கேலியாகப் பார்த்த பலரும், இப்போது அவரை ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் பார்க்கின்றனர்.
இலங்கையின் பிரபலமான முகமாக மாறியிருக்கிறார் விதுர்ஷா. அதற்குக் காரணம் கல்வியில் அவர் பெற்ற உயரம் மற்றும் கல்வியின் மூலமாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற அவரது லட்சியமும்தான்.
விதுர்ஷாவிற்கு மறுக்கப்பட்ட கல்வி
"எனக்கு இப்போது வயது 19. நான் இரண்டு ஆண்டுகள் பின்தங்கித்தான் படிக்கிறேன். இரண்டு ஆண்டுகள் நடக்க இயலாமல் இருந்ததால் பின்தங்கிப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என்கிறார் விதுர்ஷா.
தங்கை உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும் தனக்கும் செல்ல ஆசை வந்தது என்றும், ஆனால் முதலில் அந்தப் பள்ளியில் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் கூறுகிறார் விதுர்ஷா.
"அந்த பள்ளியின் ஆசிரியர்கள் சிலர் நான் அங்கு சேர்வதை விரும்பவில்லை. நான் ஆரம்பக் காலத்தில் படித்த பள்ளியில் சித்திரவேல் சார்தான் அதிபராக இருந்தார். அவர்தான் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பிள்ளையைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.
அவரால்தான் என்னால் தொடர்ந்து படிக்க முடிந்தது. அவருக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று கூறுகிறார் விதுர்ஷா.
உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் ஏற்படும் குறைபாடுகள்
விதுர்ஷாவின் அப்பா சாந்தலிங்கம் அம்மா புஷ்பலதா ஆகியோருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் விதுர்ஷா மூத்தவர்.
விதுர்ஷா மாற்றுத்திறனாளியாகவே பிறந்ததாக பிறந்ததாக அவரின் அம்மா கூறுகின்றார். விதுர்ஷாவின் தம்பி ஒருவரும் இவ்வாறு குறைபாடுகளுடன் பிறந்த நிலையில், கடந்த ஆண்டு அவரின் ஒன்பதாவது வயதில் காலமானார்.
உறவு முறைக்குள் திருமணம் செய்ததால் இவ்வாறு குழந்தைகள் பிறந்ததாக வைத்தியர்கள் கூறியதாக விதுர்ஷாவின் அம்மா சொல்கிறார். தனது சொந்த மாமாவின் மகனைத்தான் விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா திருமணம் செய்துள்ளார்.
"விதுர்ஷா, இரண்டு ஆண்டுகள் முடியாமல் இருந்தார். எனவேதான் அவரை பள்ளிக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தங்கையுடன் இணைந்து பள்ளிக்குச் செல்ல ஆசைப்பட்டபோது, சரி பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று தற்காலிகமாகத்தான் அனுப்பி வைத்தோம்.
பின்னர் வீட்டுப் பாடங்களைச் சிறப்பாக செய்வது, நேரத்திற்கு பள்ளிக்குக் கிளம்புவது என ஆர்வமாகச் செயல்படத் தொடங்கினார். பின்னர்தான் எங்களுக்கு அவர் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு, பிள்ளை பள்ளிக்குத் தொடர்ந்து செல்லட்டும் என முடிவு செய்தோம்," என்று கூறுகிறார் விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா.
இலங்கை முழுவதும் பிரபலமான விதுர்ஷா
விதுர்ஷா உடற்குறைபாடு உடையவராக உள்ளபோதிலும், படிப்பில் சிறந்து விளங்குகிறார். அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேசியரீதியில் நடத்தப்படும் கல்விப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 12ஆம் வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, விதுர்ஷா தற்போது இலங்கை முழுவதும் அறியப்படும் முகமாக மாறியிருக்கிறார்.
விதுர்ஷாவுக்கு நடந்து செல்வது கடினம். அதனால் அவரின் தங்கை யதுஜா சைக்கிளில் விதுர்ஷாவை பள்ளிக்கும், மாலை வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்கிறார்.
கேலி பேசியவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள்
"ஆரம்பத்தில் அக்காவை பள்ளிக்கு சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, சிலர் ஒருவித நக்கல் சிரிப்புடன் எங்களைப் பார்ப்பார்கள், சிலர் கேலி செய்வார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு மனம் வேதனைப்பட்டாலும், படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கா அதையெல்லாம் பொறுத்துக் கொண்டாள்," என்கிறார் தங்கை யதுஜா.
மேலும் தொடர்ந்து பேசிய யதுஜா, "விடாமுயற்சியுடன் படித்து பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதே போல 12ஆம் வகுப்பு தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாள் என நம்புகிறேன்," என்று கூறினார்.
இம்முறை 11ஆம் வகுப்பு தேர்வை யதுஜாவும் விதுர்ஷாவும் ஒன்றாக எழுதினர். விதுர்ஷா பிறந்ததில் இருந்து தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகிறார்.
மருத்துவ செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால், கடந்த பத்து மாதங்களாக மருத்துவமனைக்குச் செல்லவில்லை எனக் கூறும் விதுர்ஷா தன்னைப் போன்றவர்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்காமல் வெளியே வரவேண்டும் என வலியுறுத்துகிறார்.
"என்னைப் போன்ற பிள்ளைகள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களை வீட்டில் முடக்கி வைக்காமல், அவர்களையும் சக மனிதர்களாக மதித்து வெளி உலகிற்குக் கொண்டு வாருங்கள்.
அவர்களுக்கும் திறமை இருக்கும். அந்தத் திறமையை வெளிப்படுத்தி அவர்களால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும்," எனக் கூறுகிறார் விதுர்ஷா.
அவர் 12ஆம் வகுப்பில் கலைப் பிரிவைத் தேர்வு செய்து, அதகக் கற்கும் பொருட்டு இப்போதே பிரத்யேக வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)