You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
காஸா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் சர்வதேச ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று நிதி திரட்டும் நிகழ்வில் அவரது பேச்சு, இஸ்ரேல் தலைமை மீதான அவரது வலுவான விமர்சனத்தை வெளிப்படுத்தியது.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஜோ பைடன் வழங்கியுள்ளார்.
அமெரிக்க ஆதரவை இஸ்ரேல் நம்பலாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், அவர் அதன் அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கையை விடுத்தார்.
"இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவிடம் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அது அமெரிக்காவை விடவும் தாண்டிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான பகுதிகளை சார்ந்துள்ளது," என்று வாஷிங்டனில் தனது 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் நன்கொடையாளர்களிடம் அவர் கூறினார்.
"ஆனால் காஸா மீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளால் இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளது," என்று அவர் எச்சரித்தார்.
எவ்வாறாயினும், ஹமாஸை எதிர்கொள்வதன் அவசியம் குறித்து எந்த கேள்வியும் இல்லை என்றும், அவ்வாறு செய்வதற்கு இஸ்ரேலுக்கு "எல்லா உரிமைகளும்" இருப்பதாகவும் பைடன் கூறினார்.
போர் நிறுத்தத்துக்கு ஆஸி, நியூசிலாந்து, கனடா அழைப்பு
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் காஸாவில் "நிலையான போர் நிறுத்தத்திற்கு" ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
"இந்த போர் இடைநிறுத்தம் மீண்டும் தொடங்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் மற்றும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கிய அவசர சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்" என்று மூவரும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.
"இது ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது. அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும், பாலத்தீன குடிமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். காசாவின் எதிர்கால ஆட்சியில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இல்லை." என்று அவர்கள் கூறியுள்ளனர்.
போர் நிறுத்தம் - ஐ.நா. பொதுச் சபை தீர்மானம்
காசாவில் தீவிரடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து உதவிப் பணியாளர்களின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு, ஐ.நா பொதுச் சபை செவ்வாய்க்கிழமை தாமதமாக தற்போதைய சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்பட 153 உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன.
போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பத்து நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இங்கிலாந்து உட்பட 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)