ஆஸ்திரேலியாவை இந்தியாவின் சுழல் மும்மூர்த்திகள் சுருட்டியது எப்படி? கோலி - ராகுல் ஜோடி சாதித்தது எவ்வாறு?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் இந்திய அணி கட்டுப்படுத்தியுள்ளது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கோலி - ராகுல் ஜோடியின் அபார ஆட்டத்தால் வெற்றி இலக்கை சுலபமாக எட்டியது.

பலமான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை இந்திய அணி மிகக் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எப்படி? சென்னை ஆடுகளம் எப்படி இருந்தது? இந்திய அணியின் பேட்டிங்கிற்கு ஆடுகளம் ஒத்துழைத்ததா?

ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் ஐந்தாவது லீக் போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இந்த லீக் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. மிட்செல் மார்ஷை ஜஸ்பிரித் பும்ரா டக்அவுட்டாகி வெளியேற்ற, அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், மற்றொரு தொடக்க வீரர் வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். இதனால், ரன் ரேட் அந்த அணி எதிர்பார்த்தபடி அமையவில்லை. மிகவும் மந்தமாகவே இருந்தது. ரன்ரேட் நெருக்கடியால் அடித்தாட முற்பட்டு, டேவிட் வார்னர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

சுழல் மும்மூர்த்திகள் அசத்தல்

இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறினார்கள். சென்னை ஆடுகளம் மெதுவான ஆடுகளம் என்பதால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் எதிர்பார்த்த ஷாட்களை ஆடமுடியவில்லை. “ஸ்லோ பிட்ச்”சில் அஸ்வின், குல்தீப் பந்துவீச்சு மிகத் துல்லியமாக இருந்ததால் ஷாட்களை அடிக்க ஸ்மித், லாபுஷேன் தடுமாறினார்கள்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்று வலுவாக இருந்தது. ஏற்கெனவே ஆனால், 30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் இழந்தது. துல்லியமான பந்துவீச்சுக்கு மத்தியில், ரன் சேர்க்க வேண்டிய நிர்பந்தம், விக்கெட்டை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அழுத்தத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள்.

அஸ்வினின் பந்துவீச்சு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் வீசிய “ரிவர்ஸ் கேரம்பால்” ஆஸ்திரேலிய பேட்டர்களை பெட்டிப்பாம்பாய் அடக்கி வைத்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் தனது மோதிர விரலை மடக்கி, நடுவில் பந்தை வைத்து வீசும்போது, ஏறக்குறைய இன்ஸ்விங் போல் களத்தில் இறங்கியது, இந்த பந்தை சமாளிக்க, ஆஸ்திரேலிய பேட்டர் லாபுஷேன் திணறிவிட்டார். ஆனால் அஸ்வினின் இந்த கேரம்பால் மாயஜாலத்துக்கு கேமரூன் க்ரீன் இரையாகிவிட்டார்.

புதிய அவதாரம் எடுத்து வந்துள்ள குல்தீப் யாதவ், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் அதிரடிக்கு பெயரெடுத்த மேக்ஸ்வெல்லுக்கு படம் காட்டி, 15 ரன்னில் க்ளீன் போல்டாக்கி குல்தீப் வெளியேற்றினார். 2019ம் ஆண்டுக்கு முந்தைய குல்தீப் யாதவின் பந்துவீச்சு இல்லாமல், முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

குல்தீப் யாதவ் பந்துவீசும்போது, காற்றிலேயே பந்தை “டாஸ் செய்து” வேகத்தோடு வந்து பிட்ச் ஆகும்போது பந்து எந்தத் திசையில் செல்கிறது என்பதை பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. அதேபோல டேவிட் வார்னரை ரன் எடுக்கவிடாமல் வெறுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்தார் குல்தீப் யாதவ்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

ஜடேஜாவின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ். 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஜடேஜாவுக்கு, சேப்பாக்கம் மைதானம் ஐ.பி.எல்.லில் சொந்த மைதானம் என்பதால், ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்டர்களை திணறவிட்டார்.

ஆஸ்திரேலிய அணி 20வது ஓவரில் பவுண்டரி அடித்தநிலையில் அதன்பின் 73 பந்துகளுக்குப் பின் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து பஞ்சத்தை தீர்த்துவைத்தார். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப், அஸ்வின் மூவரும் நடுப்பகுதி ஓவர்களை கையில் எடுத்து ஆஸ்திரேலிய ரன் குவிப்பை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், ஆஸ்திரேலிய பேட்டர்களால் எந்த ஷாட்களையும் நினைத்துபோல் ஆடமுடியாமல், விக்கெட்டை இழந்தனர்.

ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்து பழைய பும்ராவாக திரும்பி வந்துள்ளார். துல்லியமான யார்கர், அவுட்ஸ்விங், கட்டுக்குள் இருக்கும் வேகம், என பும்ரா அற்புதமாகப் பந்துவீசி, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முடிவில் 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 199 ரன்களில் சுருண்டதற்கு முக்கியக் காரணம் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அஸ்வின், மற்றும் ஜடேஜா ஆகியோர்தான். இந்த மூவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

173 டாட் பந்துகள்

இந்த ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரலேய பேட்டர்கல் 173 டாட் பந்துகளை விட்டனர். அதாவது 28 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்காமல் பந்துகளை வீணடித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியதிலேயே 3வது மிக மோசமான இன்னிங்ஸ் இதுவாகும்.

டாட்பந்துகள் வழங்கிய வகையில், பும்ரா 41 பந்துகள், ஜடேஜா 38 பந்துகள், அஸ்வின் 32 பந்துகள், குல்தீப் 31 பந்துகள், சிராஜ் 26 பந்துகளை டாட்பந்துகளாக வீசினர்.

இந்த ஆட்டம் குறித்து சுருக்கமாகக் சொல்வதாக இருந்தால், ஆஸ்திரேலியா 11வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள், 25வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள், அடுத்து…199 ரன்களுக்கு ஆல்அவுட்.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(41), ஸ்மித்(46), ஸ்டார்க்(28) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மற்ற பேட்டர்கள் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு 3 வீரர்கள் டக் அவுட்

எதிர்பார்க்கப்பட்டபடியே, ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் தொடக்கத்திலேயே மிரட்டியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் ரன் ஏதும் எடுக்காமலேயே டக் அவுட் ஆகி வெளியேறினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாசும் டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நட்சத்திர வீரர் விராட் கோலியும், துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்தனர்.

கோலி - ராகுல் ஜோடி அசத்தல் ஆட்டம்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

கோலி - கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் தொடக்கத்தில் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் பொருட்டு நிதானமாக ஆடினர். அணியின் வெற்றிக்குத் தேவையான ஸ்கோர் குறைவு என்பதால் ரன் ரேட் அவர்களுக்கு அழுத்தத்தைத் தரவில்லை. இதனால், களத்தில் செட்டிலாக தேவையான நேரத்தை அவர்களால் எடுத்துக் கொள்ள முடிந்தது. இந்திய அணி 16-வது ஓவரில்தான் 50 ரன்களைத் தொட்டது. கோலி - ராகுல் ஜோடி 83 ரன்களுக்கு 50 ரன்களை சேர்த்தது.

களத்தில் தங்களை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டு விட்ட பிறகு இருவருமே ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தினர். இதனால், அடுத்த 61 பந்துகளில் இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்துவிட்டது. இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி கம்பீரமாக நடை போட்டது.

42-வது ஓவரிலேயே வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற விராட் கோலி சதம் அடித்து அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் 85 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் 116 பந்துகளில் 6 பவுண்டரிகள் உதவியுடன் இந்த ரன்களை எடுத்திருந்தார். அவர் ஒருசிக்சரை கூட விளாசவில்லை.

மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்தவுடனே சிக்சர் அடித்து அசத்தினார். கடைசியில் சிக்சர் அடித்து அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றார் லோகேஷ் ராகுல். அவர் 115 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உதவியுடன் 97 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

42-வது ஓவரிலேயே இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி முதல் போட்டியிலேயே அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)