தமிழ்நாட்டில் இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அடுத்த 2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு
தொடர் கனமழையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
மேலும் திருநெல்வேலி டவுன், களக்காடு, திசையன்விளை பகுதியில் உடன்குடி சாலை, நேருஜி கலையரங்கம் மற்றும் செட்டிகுளம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கூடங்குளம் அனு விஜய் நகரியம் வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



