பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு - முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன? - காணொளி
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது.
பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது.
இது குண்டுவெடிப்பா அல்லது சிலிண்டர் வெடிப்பா என போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்தது IED குண்டுவெடிப்பு எனக் கூறப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவகத்திற்கு வந்த ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்து வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஒயிட் பீல்டு பகுதி தீயணைப்பு துறையினர் கூறுகையில், தங்களுக்கு சிலிண்டர் வெடித்ததாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



