பல்லிகளின் வரலாறு மாறுகிறதா? - சமீபத்திய ஆய்வில் கிடைத்த வியக்க வைக்கும் முடிவு

நாம் முன்பு நினைத்ததைவிட 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்லிகள் இந்தப் பூமியில் இருப்பதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியக அலமாரியில் பல தசாப்தங்களாக இருந்த ஊர்வன புதைபடிவ எச்சங்களை பிரிஸ்டல் பல்கலைக்கழகம் சிடி ஸ்கேன் செய்தது.

அந்த அறியப்படாத ஊர்வன நவீன கால பல்லிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக அதன் முடிவுகள் கூறுகின்றன.

பிற்கால மத்திய ஜுராசிக் காலத்தில் பல்லிகள் தோன்றியதாகக் கருதப்பட்ட நிலையில், 237-201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ட்ரயாசிக் காலத்தின் பிற்பகுதியில் அவை வாழ்ந்தது புதிய கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது.

கூர்மையான பற்கள்

பல்லிகள் மற்றும் பாம்புகளின் தோற்றம் பற்றிய அனைத்து மதிப்பீடுகள் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றிய அனுமானங்களை மாற்றக் கூடியதாக இந்தப் புதைபடிவம் உள்ளது.

இந்த மாதிரி 1950களில் சேகரிக்கப்பட்ட புதைபடிவ சேமிப்பில் இருந்தது.

இந்தக் கண்டுபிடிப்பிற்கு கிரிப்டோவரனாய்ட்ஸ் மைக்ரோலானியஸ் என்று ஆராய்ச்சிக் குழுவினர் பெயரிட்டுள்ளனர். கூரான முனைகள் கொண்ட தனித்தனி பற்களுடன் இருக்கும் அதன் தாடைகளைக் குறிக்கும் விதமாக இந்தப் பெயரை அவர்கள் இட்டுள்ளனர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையைச் சேர்ந்த வைட்சைட், இந்த மாதிரியை ட்ரயாசிக் பிற்பகுதி மற்றும் தொடக்க ஜுராசிக் காலங்களில் அழிந்துபோன ஓர் இனமான கிளெவசொரஸ் புதைபடிவங்கள் நிறைந்த அலமாரியில் முதன்முதலில் கண்டார்.

"இது, 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்குவேமேட்ஸில் (செதில்கள் நிறைந்த உயிரினம்) இருந்து பிரிந்த ரைன்கோசெபாலியா குழுவைச் சேர்ந்த தற்போது உயிருடன் இருக்கும் ஒரே உயிரினமான துவாட்டாராவுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பொதுவான ஊர்வன புதைபடிவமாக இருந்தது” என்கிறார் வைட்சைட்.

"நாங்கள் மாதிரியை தொடர்ந்து ஆராய்ந்தபோது, ​​இது துவாட்டாராவை விட நவீன பல்லிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை கண்டறிந்தோம்" என்றும் அவர் கூறுகிறார்.

இதை முப்பரிமாணத்தில் மறுகட்டமைப்பு செய்யவும், பாறைக்குள் மறைந்திருக்கும் சிறிய எலும்புகளைப் பார்க்கவும் உதவும் வகையில் புதைபடிவத்தின் எக்ஸ்ரேக்களை பல்கலைக்கழக குழு உருவாக்கியது.

மூளை, கழுத்து எலும்பு மற்றும் தோள்பகுதியில் ரைன்கோசெபாலியா குழுவிலிருந்து அவை வேறுபடுவதால் கிரிப்டோவரனாய்ட்ஸ் உறுதியாக ஸ்குவேமேட் என்று அவர்கள் கூறினர்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த புதைபடிவம், கடந்த சில தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்டதில் மிக முக்கியமான ஒன்றாக மாறும் என்கிறார் வைட்சைட்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: