You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை கட்டியுள்ள ரஃபால் வாட்ச்சின் விலை என்ன?
இந்திய ரூபாய் மதிப்பில் சில லட்சங்கள் வரை மதிப்புள்ள விலை உயர்ந்த ரஃபால் கைக்கடிகாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அணிந்திருப்பது குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றும், அதற்கு அவர் அளித்த பதிலும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
"நான் மிகப்பெரிய தேசியவாதி. எனக்கு ரஃபால் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால், ரஃபால் விமானத்துக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய இந்த வாட்ச்சை அணிந்துள்ளேன்," என்ற அண்ணாமலையின் பதில் மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விலையுயர்ந்த கைக்கடிகாரம் வந்தது எப்படி என்று வாட்ச் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தமது 13 ஆண்டு கால வருமான வரி விவரங்களை வெளியிடத் தயார், திமுகவினர் அவ்வாறு அவர்கள் வருமான விவரங்களை வெளியிடத் தயாரா என்று அண்ணாமலை சவால் விட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, ''நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? அதற்கான ரசீதை அவர் வெளியிடுவாரா,'' என்று பதில் சவால் விட்டிருந்தார்.
ரஃபால் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது "500 சிறப்பு வாட்ச்களில் என்னுடையது 149வது வாட்ச்; என் உடலில் உயிர் உள்ளவரை இந்த வாட்சை அணிந்திருப்பேன்," என்றார் அண்ணாமலை.
ரஃபால் விமானத்தின் பாகங்களை வைத்து இந்தக் கடிகாரத்தை செய்தார்கள்; அந்த விமானத்தில் என்ன பாகங்கள் உள்ளனவோ, அவை அனைத்தும் இந்தக் கடிகாரத்தில் உள்ளன,'' என்று அண்ணாமலை கூறியிருந்தார். எனினும் அது பற்றிய தகவல்கள் எதுவும் அதைத் தயாரித்த பெல் & ரோஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை. ''ரஃபால் வாட்ச்சை நம்மைத் தவிர யார் வாங்குவார்கள்; இந்தியன்தான் வாங்க முடியும்; நாம்தான் வாங்க முடியும்,'' என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். ஆனால், அந்தக் கடிகாரம் உலகம் முழுவதும் விற்பனைக்கு உள்ளதை பெல் & ரோஸ் நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது.
''நம்முடைய நாட்டிற்காக இந்த வாட்ச்சை கட்டியுள்ளேன். ரஃபால் விமானம் நமது நாட்டிற்குக் கிடைத்த பொக்கிஷம். ரஃபால் விமானம் வந்தபிறகு போர்களின் வழிமுறைகள் மாறியுள்ளன. இது என்னுடைய 'பர்சனல்' விஷயம். எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன்," என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
BR 03 RAFALE வாட்ச்சின் சிறப்பு, விலை
அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் மாடல் BR 03 RAFALE. இதை ஆடம்பர வாட்ச் தயாரிப்பு நிறுவனமான பெல் & ரோஸ் தயாரித்திருந்தது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல் & ரோஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் சுவிட்சர்லாந்தில் உள்ளது. 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல்வேறு சிறப்பு எடிசன் கைக்கடிகாரங்களைத் தயாரித்துள்ளது.
விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களின் பயன்பாட்டிற்காக BR-X1 HYPERSTELLAR எனப்படும் சிறப்பு எடிஷன் கைக்கடிகாரங்களை 250 என்ற எண்ணிக்கையில் வெளியிட்டது. அரிய உலோகமான டைட்டானியம், அலுமினியம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட இதன் விலை இந்திய மதிப்பில் 16 லட்சம் ரூபாய்க்கும் மேல்.
இதுபோன்று வெளியிடப்பட்ட சிறப்பு மாடல்களில் ஒன்றுதான் ரஃபால் சிறப்பு எடிஷனான பிஆர் 03 ரஃபால். டஸ்ஸோ (Dassault) நிறுவனத்தின் ரஃபால் போர் விமானத்தை கௌரவப்படுத்தும் விதமாக இந்த சிறப்பு கைக்கடிகாரத்தை பெல் & ரோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதில் ரஃபால் விமானத்தின் வடிவம் மற்றும் மொத்தமுள்ள 500 கடிகாரங்களில் குறிப்பிட்ட கைக்கடிகாரம் எத்தனையாவது என்ற எண்ணிக்கையும் இடம் பெற்றிருக்கும்.
கடந்த 2015ஆம் ஆண்டு இவை தயாரிக்கப்பட்டன. கருப்பு நிற செராமிக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கைக்கடிகாரத்தின் கண்ணாடியில் நீலக்கல் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.
100 மீட்டர் ஆழத்தில் தண்ணீருக்குள் இருந்தாலும் இதற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. மொத்தமாகவே 500 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இதன் விலை ஐரோப்பிய சந்தையில் 5,200 யூரோ என்று பெல் & ரோஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 4.5 லட்சம் ரூபாய்க்கும் மேல்.
இதன் விலை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் இதன் விலை 6,200 டாலர். இந்திய மதிப்பில் இது சுமார் 5.13 லட்சம் ரூபாய். இந்தியாவில் இதன் விலை என்னவென்று பெல் & ரோஸ் இணையத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை. 'PRICE ON REQUEST' என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வாங்குபவர்கள் நிறுவனத்தை அணுகி விலையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரான்சிடம் ரஃபால் போர் விமானங்களை வாங்கிய இந்தியா
ரஃபால் விமானங்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸோ விமான நிறுவனம் தயாரித்து வருகிறது. கத்தார், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் ரஃபால் விமானங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபால் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி, முதல் தொகுதியாக 5 ரஃபால் விமானங்கள் 2020ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. கடைசி மற்றும் 36வது ரஃபால் போர் விமானம் கடந்த வாரம் (2022ஆம் ஆண்டு, டிசம்பர் 15ம் தேதி) இந்தியா வந்தடைந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்