You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஃபேல் குறித்த புத்தகம்: பறிமுதல் செய்த புத்தகங்களை திருப்பித் தர உத்தரவு
ரஃபேல் ஊழல் தொடர்பாக சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிடப்பட்டிருந்த புத்தகம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அப்படி பறிமுதல் செய்யும்படி கூறப்படவில்லை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை கோரியிருப்பதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய புத்தக நிறுவனமான பாரதி புத்தகாலயம், நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் ரஃபேல் விமானங்களை வாங்குவதில் நடந்த முறைகேடு குறித்து ஒரு நூலை வெளியிடுவதாக இருந்தது. இதனை எஸ். விஜயன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த புத்தகத்தின் வெளியீடு சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் நடப்பதாக இருந்தது. இந்து குழுமத்தின் தலைவர் என். ராம் வெளியிட்டுள்ளார்.
ஆனால், அங்கு புத்தக வெளியீட்டு விழா நடக்க காவல்துறை அனுமதியளிக்கவில்லையெனக் கூறி, பாரதி புத்தகாலயத்திலேயே இந்த விழா நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் பாரதி புத்தகாலயத்திற்கு காவல் துறையினருடன் வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசனும் இ 3 காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷும் இந்த புத்தக வெளியீடு விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தக்கூடாது என்று கூறி கடிதம் அளித்துவிட்டு, புத்தகத்தை பறிமுதல் செய்வதாகக் கூறினர்.
"புத்தகத்தில் 146 பிரதிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அதனால் வெளியீட்டு விழாவை ரத்து செய்திருக்கிறோம்" என பிபிசியிடம் பேசிய பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹுவிடம் கேட்டபோது, "இந்தியத் தேர்தல் ஆணையமோ தலைமைத் தேர்தல் அதிகாரியோ அம்மாதிரி எந்த உத்தரவையும் அளிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறினார்.
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிசாமியிடம் கேட்டபோது, "இது தொடர்பாக அறிக்கை கேட்டிருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்தப் புத்தகங்களைத் திரும்பத் தர தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புத்தக வெளியீட்டு விழாவை மாலையில் நடத்த அந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்