You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடல் பருமன் தினம்: தொப்பை உருவாக என்ன காரணம்? எப்படிக் குறைப்பது?
(இன்று, மார்ச் 4, உலக உடல் பருமன் தினம் – World Obesity Day)
உலகெங்கிலும் மக்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. தற்போது, 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ இதழான ‘லான்செட்’டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட 100 கோடிக்கும் அதிகமான மக்களில், 88 கோடி பேர் பெரியவர்கள், 15 கோடியே 90 லட்சம் பேர் குழந்தைகள்.
உடல் பருமன் இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
உலக நாடுகளிடையே, பெண்களின் உடல் பருமன் அடிப்படையில் இந்தியா 19-ஆவது இடத்தில் உள்ளது, அதே சமயம் ஆண்களின் உடல் பருமன் அடிப்படையில் 21வது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, ஆண்களிடையே உடல் பருமன் வேகமாக அதிகரிப்பதில் 10வது இடத்திலும், பெண்களிடையே உடல் பருமனைப் பொறுத்தவரை 36வது இடத்திலும் உள்ளது.
அதுவே சீனா, பெண்களின் உடல் பருமன் அடிப்படையில் 11ஆவது இடத்திலும், ஆண்களில் 52வது இடத்திலும் உள்ளது.
உடல் பருமன் எப்படி இவ்வளவு பெரிய பிரச்னையாக உருவெடுத்தது?
உலக நாடுகள் பலவற்றில் உடல் பருமன் என்பது ஆரோக்கியமற்ற உணவினால் ஏற்படும் பிரச்னையாக மாறியுள்ளது, என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மூத்த ஆராய்ச்சியாளர் மஜித் எசாட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆரோக்கியமற்ற உணவு வகைகளை ஊக்குவிக்கும் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் உத்தியின் மூலம் இப்பிரச்னை மேலும் மோசமடைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
பேராசிரியர் எசாட்டி பல ஆண்டுகளாக உடல் பருமன் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து வருகிறார். உடல் பருமன் அதிகரித்து வரும் வேகம் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் கூறுகிறார். ஒரு அறிக்கையின்படி, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் 1990 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடையே நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார்.
வயது வந்த பெண்களில் இந்த விகிதம் இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது. வயது வந்த ஆண்களில் இந்த வேகம் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், எடை குறைந்த பெரியவர்களின் விகிதம் 50% குறைந்துள்ளது. இருப்பினும், ஏழை நாடுகளில் இந்தப் பிரச்சனை இன்னும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கோவிட், போர் ஆகியவை காரணமா?
காலநிலை மாற்றத்தின் விளைவுகள், கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் யுக்ரேனில் நடந்துவரும் போர் ஆகியவை உலகளவில் உடல் எடை பிரச்னைகளை அதிகரித்துள்ளன.
"இந்தப் பிரச்னைகள் வறுமை நிலையை அதிகரிக்கின்றன அதனால் மக்களால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள முடிவதில்லை,” என்கிறார் எசாட்டி.
இந்தச் சூழ்நிலைகளால் சில நாடுகளில் குடும்பங்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், என்கிறார் அவர்.
உலக சுகாதார மையத்துடன் இணைந்து 1,500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 22 கோடி மக்களின் உயரம் மற்றும் எடையை அளந்தனர்.
இதற்காக பாடி மாஸ் இன்டெக்ஸ் அதாவது பி.எம்.ஐ-யை ஒப்பிட்டனர். இது உடல் கொழுப்பை அளவிடுவதற்கான முழுமையான அளவு அல்ல என்று அவர்கள் கருதினாலும், உடல் பருமனை அளவிட பி.எம்.ஐ மிகவும் பிரபலமான அளவீடாக இருந்துவருகிறது.
இந்தியர்களுக்கு தொப்பை வருவது ஏன்?
ஆனால், இந்தியாவிலும், தமிழகத்திலும் இன்று காணப்படும் உடல் பருமன் பிரச்னையைக் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நிபுணரான மருத்துவர் அஷ்வின் கருப்பன், இந்தியாவில் இன்று நாம் பார்க்கும் உடல் பருமன் பெரும்பாலும் மரபியல் ரீதியானது (genoidal obesity) என்கிறார்.
அதாவது பெற்றோருக்கு உடன் பருமன் இருந்தால், குழந்தைகளுக்கும் உடன் பருமன் வரும்.
“இந்தியாவில் இது ஆண்களுக்கு தொப்பையாகவும், பெண்களுக்கு தொடை மற்றும் பின்புறமும் பருமனாவதன்மூலமும் வெளிப்படுகிறது. மற்ற நாடுகளில், அவர்களது உயரம் மற்றும் எடைக்கு ஏற்றவாறு அவர்களது உடல் முழுதும் இது பரவியிருக்கிறது,” என்றார்.
இதனால், குறைவாகச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடுவதை பலரும் அனுபவித்து வருவதாகக் கூறுகிறார் மருத்துவர் அஷ்வின்.
இப்பிரச்னை குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அனைவருக்கும் இருக்கிறது என்கிறார் அவர்.“பள்ளிக் குழந்தைகளிலிருந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் வரை அனைவரையும் இப்போது உடல் பருமனுக்காகச் சோதிக்கிறோம்,” என்கிறார் அவர்.
இதற்கடுத்த படியாக, உடல் உழைப்பைக் கோராத வேலையும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், மாறிவிட்ட உணவுப் பழக்கமும் உடல் பருமனுக்கு முக்கியக் காரணங்கள் என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
“இதனால் உடல் பருமன் பிரச்னை மிகத்தீவிரமான் ஒன்றாக மாறிவிட்டது. 40-50 வயதுக்கு மேல் பெரும்பாலோனார் வாழ்க்கைமுறை மாற்றத்தால் வரும் நோய்களால் அவதிப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.
உடல் பருமன் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
உடல் பெரிதாக இருப்பதால் மட்டுமே உடல்பருமன் பிரச்னை இருக்கிறது என்று பொருளல்ல, என்கிறார் மருத்துவர் அஷ்வின். ஒல்லியாக இருப்பவர்களுக்குக் கூட உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் அது உடல் பருமன் பிரச்னைக்கு இட்டுச்செல்லக் கூடும் என்கிறார் அவர்.
இந்தியர்களிடம் இந்தப் பிரச்னை ‘ஒல்லியாக இருந்தும் உடல் பருமனான இந்தியர்கள்’ (thin-fat Indian), என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர்.
வழக்கமான அளவீடுகளில், உடல் பொருண்மைக் குறியீடு (Body Mass Index – BMI) 24-க்கு மேல் இருந்தால் அதிக எடை (overweight), 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் (obesity), 35-க்கு மேல் இருந்தால் அதிக உடல் பருமன் (severe obesity) என்று கணக்கிடப்படுகிறது.
ஆனால், இன்று ஒல்லியாக இருப்பவர்களும் உடல் பருமன் பிரச்னைகளைச் சந்தித்து வருவதால், இன்று உடல் பருமனை அளவிட உடல் பொருண்மைக் குறியீடு (Body Mass Index – BMI) மட்டுமல்ல, வேறு சில கணக்கீடுகளும் பின்பற்றப் படுகின்றன என்கிறார் அவர்.
குறிப்பாக, எட்மான்டன் உடல் பருமன் கணக்கீடு (Edomonton Obsity Staging System) எனும் ஒரு அளவீட்டு முறை பின்பற்றப் படுவதாகக் கூறுகிறார்.
இதில், உளவியல் ரீதியான, உடல் ரீதியான, வளர்ச்சிதை ரீதியான அம்சங்கள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. “உதாரணத்திற்கு, உளவியல் ரீதியாக மன அழுத்தம் இருக்கிறதா, உடல் ரீதியாக உங்களால் அனைத்து செயல்களையும் செய்யமுடிகிறதா, வளர்ச்சிதை ரீதியாக உங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளதா, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே ஒருவரது உடல் பருமன் கணக்கிடப்படுகிறது,” என்கிறார் அவர்.
உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன என்று கேட்டதற்கு, உடல் எடையைக் குறைப்பது மட்டுமே இதற்கான இலக்கல்ல என்கிறார் மருத்துவர் அஷ்வின். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவை உடல் எடையை உடனடியாகக் குறைக்க உதவாவிட்டாலும், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும் என்கிறார்.
உடல் எடையைக் குறைக்க முக்கியமான வழியாக, குறைந்த கலோரியுள்ள உணவுகளை உட்கொள்வது பின்பற்றப் படுகிறது என்கிறார் அவர். “ஒரு உணவியல் நிபுணரைக் கலந்தாலோசித்து அதன்படி உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றாலாம். ஆனால் இன்று அதனோடு சேர்த்து உறக்கம், உடற்பயிற்சி, கணிணி, கைப்பேசி ஆகியவற்றில் செலவிடும் நேரமான ஸ்கிரீன்டைம் (screen time) ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன,” என்கிறார்.
அதிக உடல்பருமன் பிரச்னைக்கு இன்று ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர். ‘செமாக்ளூடைட்’ (semaglutide) எனப்படும் இந்த மருந்துக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது என்கிறார் அவர். இந்தியாவில் இது தற்போது வாய்வழியே உட்கொள்ளும் மருந்தாகக் கிடைக்கிறது என்கிறார்.
அதேபோல மிக அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (bariatric surgery) மூலம் உடல் பருமனைக் குறைக்கமுடியும் என்கிறார் அவர். முதலில் இது அடிப்படை நிலையில் இருந்தாலும், இன்று இந்த அறுவை சிகிச்சை மிகவும் மேம்பட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர்.
“மேலும், இன்றைக்கு என்டோபேரியாட்ரிக் (endobariatric) சிகிச்சைகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வாய்வழியே ஒரு குழாய் செலுத்தி வயிற்றில் ஒரு பலூன் வைக்கப்படும். அது வயிற்றின் ஒரு பகுதியை இது நிரப்பிக்கொள்வதால், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ள முடியாது. இதன்மூலம் உடல் எடை கட்டுக்குள் வந்ததும் பலூன் அகற்றப்படும்,” என்றார். என்டோபேரியாட்ரிக் முறை மூலம் வாய்வழியே பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)