கணவர் மீதான குற்ற வழக்குகளால் பெண் காவலர் தற்கொலை - இன்றைய டாப்5 செய்திகள்

குற்ற வழக்குகளில் தொடர்புடைய கணவரை திருத்தும் முயற்சி தோல்வியடைந்ததால் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியில் "சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் செல்வி (வயது 39) நேற்று முன்தினம் தற்கொலையால் மரணமடைந்தார்.

பணிச்சுமையால் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டாரா ? என்று முதலில் கேள்வி எழுந்திருந்தது. ஆனால் காரணம் குறித்து உருக்கமான தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது. "செல்வியின் சொந்த ஊர் சிவங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும். இவர் தனது உறவினரான நல்லுச்சாமியை 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். 2008-ம் ஆண்டு அவருக்கு போலீஸ் பணி கிடைத்தது. சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றி வந்தார்.

ஆனால் நல்லுச்சாமியின் தவறான சகவாசம் அவரை ரவுடியாக மாற்றியது. 3 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் அவர் சிக்கினார். இதனால் சிவகங்கை மாவட்ட போலீசில் 'ஏ1' ரவுடி பட்டியலில் நல்லுச்சாமியின் பெயர் இடம் பெற்றது.

கடந்த 2022-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அதிகாரி, செல்வியை அழைத்து கண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செல்வி, சென்னைக்கு பணியிட மாறுதல் பெற்று கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையே வழக்கு ஒன்றில் சிவகங்கை மாவட்ட போலீசார் தன்னை தேடும் தகவலை அறிந்த நல்லுச்சாமி தனது மனைவி செல்வி வசிக்கும் புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்புக்கு வந்து பதுங்கி இருந்தார்.

ஆனால் சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் இருந்து செல்வியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பில், மனோ என்பவரின் மரணத்தில் நல்லுச்சாமிக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்". இதனால் தான் அவர் தற்கொலையால் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்" என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

"மகனின் ஓய்வூதியத்தில் தாயாருக்கும் உரிமை"

இறந்த மகனின் ஓய்வூதிய பலனில் தாயாருக்கும் உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

அந்த செய்தியில், "தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் உதவியாளராக பணிபுரிந்த முருகேசன் கடந்த 2022-ல் கரோனா பரவல் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து தனது கணவருக்குரிய ஓய்வூதியப் பலன்களை கேட்டு அவரது மனைவி தமிழ்ச்செல்வி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது கருவூலத்துறை சார்பில் மனுதாரருக்கு ஏற்கெனவே குடும்ப நல நிதி, விடுமுறை ஊதியம், பிஎப், பொது பிஎப் என்ற கணக்கீட்டுபடி ரூ.17.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.15.25 லட்சம் பாக்கியுள்ளது. மனுதாரர் கணவரின் தாயார் கலையரசி, இறந்து போன தன் மகனுக்குரிய பணிக்கொடை பணத்தில் தனக்கு ஒரு பகுதி வழங்கக் கோரி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பாக்கிப்பணம் வழங்கப்படாமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

கலையரசி தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், இறந்த மகனின் பணப்பலன்களில் தாயாருக்கும் பங்கு உண்டு. அந்த அடிப்படையில் மனுதாரரின் கணவருக்குரிய பணப்பலன்களில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி, ''மனுதாரரின் கணவர் 3வது எதிர்மனுதாரரின் உண்மையான மகன். மகன் வேலைக்கு செல்ல தாயார் அன்பு, பாசம் உள்பட அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளார். இதனால் மனுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் பாக்கியில் தாயாருக்கும் உரிமை உண்டு. இதனால் மனுதாரருக்கு ரூ.8,15,277 பணத்தையும், தாயார் கலையரசிக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி தலைமைப் பொறியாளர் கைது - சாலைப் பணிகளுக்காக லஞ்சம்

சாலை ஒப்பந்தத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி தலைமை என்ஜினீயர் கைது செய்யப்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியில்," புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருபவர் தீனதயாளன் (வயது 57). புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு சீகல்ஸ் ஓட்டலில் தீனதயாளன் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அங்கு அரசு ஒப்பந்ததாரர்கள் சிலரும் இருந்தனர்.

இந்த நிலையில் அங்கு திடீரென சென்னையில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து, தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம், புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனையிட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் 15 பேர் கொண்ட 3 குழுவினர் ஈடுபட்டனர்.

இதில் ரூ.7 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் காரைக்காலில் சாலை அமைக்கும் ஒப்பந்தத்திற்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒரு சதவீதம் கமிஷனாக ரூ.6 லட்சம் பேசப்பட்டு, அவற்றில் ரூ.2 லட்சம் லஞ்சமாக உடனடியாக பரிமாற்றம் செய்த போது 3 பேரும் சிக்கினர்.

இதையடுத்து தலைமை என்ஜினீயர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகு ஆகியோரை நேற்று மதியம் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் இருந்த ஓட்டல் அறையில் இருந்து கட்டுக்கட்டாக லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் புதுச்சேரி தலைமை பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்காக சென்றனர். அப்போது அறை மூடிக்கிடந்ததால் தலைமை என்ஜினீயர் தீனதயாளனின் அறைக்கு மட்டும் 'சீல்' வைத்துவிட்டு சென்றனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளமுருகு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன். இவரது வீடு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டில் நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சி.பி.ஐ .அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. சோதனையின் போது ஆவணங்கள் ஏதும் கைப்பற்றபட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை." என்று கூறப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் 100% நிறைவு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர் மோடி விரைவில் திறந்துவைப்பார் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில் தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என ரயில்வே துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் திறந்து வைக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், விரைவில் திறப்பு விழா நடைபெறும். பழைய பாலம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். புதிய பாலத்துக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயர் வைப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்று கூறியதாக அந்த செய்தி கூறுகிறது.

இலங்கையின் சுகாதார அபிவிருத்திக்கு உதவ ஐ.நா திட்ட அமுலாக்க அலுவலகம் உறுதி

இலங்கையின் சுகாதார சேவையில் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் சார்லஸ் கல்லனன் உறுதியளித்துள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை காதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உடனான சுகாதார அமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதாரத்துறை மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப அந்தத் திட்டங்களை விரைவுபடுத்துதல், எதிர்காலத் திட்டங்களைத் தயாரிப்பது போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டிய பணிப்பாளர் சார்லஸ் கல்லனன், இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ள, சுகாதார அமைச்சுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் தொடர்ந்து வழங்குவதாக அமைச்சரிடம் உறுதியளித்தார்.

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், எளிதில் அணுகக்கூடிய இடங்களில் 1,000 ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவும் முன்மொழியப்பட்ட திட்டத்துக்கும் பணிப்பாளர் சார்லஸ் கல்லனன் தனது பாராட்டை தெரிவித்ததாக வீரகேசரி செய்தி கூறுகிறது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு