நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி 306 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வி - 10 தகவல்கள்

நியூசிலாந்து இந்தியா

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'டி20' மூன்று ஓடிஐ (ஒருநாள்) போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா, இன்று முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இன்றைய ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்காக 10 புள்ளிகளுடன் சுருக்கித் தருகிறோம் 1. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. டி20-ல் சிறப்பாக ஜொலித்த இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகினர். 2. சிறிய மைதானம் என்பதால் இந்த போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்றே இந்திய அணி பேட்ஸ்மேன்களும் தங்கள் பேட்டிங் திறனை அபாரமாக வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 124 ரன்கள் சேர்த்தது. 3. இந்திய அணியில் டாப் ஆர்டரில் களமிறங்கிய 3 வீரர்கள் அரைசதம் பதிவு செய்தனர். கேப்டன் ஷிகர் தவான் 72, சுப்மன் கில் 50, ஷ்ரேயாஸ் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். டி20 போட்டிகளில் திணறிய ரிஷப் பண்ட், ஒருநாளிலும் தொடர்ந்து ரன் குவிக்க தடுமாறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 4 ரன்களில் விடைபெற்றார்.

4. சஞ்சு சாம்சனுக்கு அணியில் சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறக்கப்பட்டார். 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சனுக்கு முறையாக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என இந்திய வீரர் அஷ்வின் குரல் கொடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. 5.இன்றைய ஆட்டத்தில் வாசிங்டன் சுந்தர் அதிரடியாக ரன் குவித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன்37 ரன்கள் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்தது.

இந்தியா நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

7. 307 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, டாம் லதாம் 145* கேன் வில்லியம்சன் 94* ஆகியோரின் அபார ஆட்டத்தால் வெற்றியை எளிதாக ருசித்தது. இந்தியாவின் அறிமுக வீரர் உம்ரான் மாலிக் 10 ஓவர்கள் வீசி 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார். 8. ஷர்துல் தாக்கூர் வீசிய 40-வது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு விளாசிய டாம் லதாம், தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை அடித்து சதத்தை பதிவு செய்தார். ஈடன் பார்க் மைதானத்தில் அதிவேக சதம் அடித்த வீரர் எனும் இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை டாம் லதாம் 76 பந்துகளில் சமன் செய்தார்.

நியூஸிலாந்து இந்தியா

பட மூலாதாரம், Getty Images

9. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ஸ்கோரை வெற்றிகரமாக நியூசிலாந்து சேசிங் செய்தது இது 2வது முறை. நியூசிலாந்து மண்ணில் டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி, அதே மண்ணில் விளையாடிய கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. 10. 2016 முதல் தற்போது வரை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் 5 வெவ்வேறு கேப்டன்களுடன் விளையாடியுள்ளார் கேன் வில்லியம்சன். இந்தியாவுக்கு எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டபோது நியூசிலாந்தின் கேப்டனாக கேன் வில்லியம்சன் மட்டுமே செயல்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: