கங்குவா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

பட மூலாதாரம், Studio Green/FB
- எழுதியவர், ஸ்ரீங்கவரப்பு
- பதவி, பிபிசிக்காக
இன்று(நவம்பர் 14) உலகம் முழுவதும் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியானது.
தெலுங்கு படங்களின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய 'சிறுத்தை' சிவா, வரலாறுடன் கலந்த சண்டைக் காட்சிகள் நிறைந்தப் படமாக கங்குவாவை இயங்கியுள்ளார்.
சுமார் இரண்டரை வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாகும் இந்த படத்தில், சூர்யா, திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு நூற்றாண்டுகளின் கதை
இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் இப்படத்தின் கதை பயணிக்கிறது. ஒரு கதை 2020-ஆம் ஆண்டிலும், மற்றொரு கதை சுமார் ஆயிரம் வருடங்கள் முன்பு, அதாவது 1070-களில் நடைபெறுகிறது.
1070-இல் மக்கள் நடமாட்டம் இல்லாத பஞ்சகோணம் என்னும் ஒரு பகுதி இருந்தது. அங்கு ஐந்து மலை கிராமங்கள் இருந்தன. அவை சாகரகோணம், ஹிமகோணம், அரண்யகோணம், கபாலகோணம், பிரணவாதிகோணம் என்பனவாகும்.
இதில் பிரணவாதி கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மிகவும் துணிச்சலானவர்கள். போர் புரிவது அவர்களின் தர்மம்.
இந்த கிராமத்தின் தலைவர்தான் கங்குவா (சூர்யா). உதிரன் (பாபி தியோல்) கபாலகோண கிராமத்தின் தலைவர் ஆவார்.
இந்த இரண்டு தீவுகளுக்கு இடையே மோதல் ஏற்படக் காரணம் என்ன? தனது கிராமத்தைக் காக்கும்போது தாய்க்கு செய்த சத்தியத்தை கங்குவா எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதே ஒரு கதை.
2024-இல் கங்குவாவைப் போல இருக்கும் ஃப்ரான்ஸிஸ் (சூர்யா) யார்? ஜீடா என்ற பெயர் கொண்ட சிறுவன் யார்? இந்த சிறுவன், ஃப்ரான்ஸிஸ் மற்றும் கங்குவா இடையேயான தொடர்பு என்ன? இதுவே இரண்டாம் கதை.
ஃப்ரான்ஸிஸ்-கங்குவா-ஜீடா ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்பை ஆயிரம் வருடங்கள் கடந்து நிறுவும் கதையே "கங்குவா".

பட மூலாதாரம், Studio Green/FB
சூர்யாவின் துடிப்பான நடிப்பு
ஃப்ரான்ஸிஸ் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா மிகவும் துடிப்பாக நடித்துள்ளார்.
கங்குவா பாத்திரத்தில், புதுமையான தோற்றத்திலும், புதிய உடல் மொழியிலும், நடிப்பிலும் பல மாற்றங்களை கொண்டுவந்து சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக, மாறுபட்டு அமைக்கப்பட்டிருந்த பாபி தியோலின் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு கதைக்கு போதுமானதாக இல்லை.
திஷா பதானியின் கதாபாத்திரம் கவனம் பெரும் வகையில் கதைக்கு அவ்வளவு முக்கியதுவம் வாய்ந்ததாக இல்லை.
ஜீடாவாக நடித்திருந்த சிறுவன் கதாபாத்திரம் படத்தில் நன்றாக பொருந்தியிருந்தது. நடிகர் கார்த்தியும் சிறப்பு தோற்றத்தில் ஜொலித்துள்ளார்.
நல்ல கதைக்களம்தான், ஆனால்...
இப்படத்தின் கதையின்படி கங்குவா மிக வலிமையானவர். இது ஒரு புதுவிதமான கதையும்கூட. ஐந்து ஊர்களின் மக்கள்களுக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கின்றன.
ஐந்தில் இரண்டு ஊர்களுக்கு மட்டுமே கதையில் முக்கியதுவம் பெற்றுள்ளன. பெரும்பாலான கதை பழங்குடி மக்களின் வாழ்வியல் சுற்றியே உள்ளது.
ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஆயுதங்கள், உடைகள், மக்களின் வாழ்வியல் மற்றும் போர் உக்திகள் ஆகியவை பிரம்மாண்டமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கதை எதிர்பார்த்த அளவு பலமாக கட்டமைக்கப்படவில்லை.
கதையை விட சூர்யாவின் சண்டைக் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் கதையோடு சரியாக பொருந்தவில்லை.
கங்குவா கதாபாத்திரம் வரும் காலத்தில் பேசப்பட்ட வசனங்கள் சாமானிய ரசிகர்களுக்கு புரியவில்லை. இந்த பகுதி படத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தற்காலத்தில் நடப்பது போன்ற கதையே சில இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியில் இந்தப் படம் எந்த இடத்திலும் சமரசம் செய்யவில்லை. ஆனால், கதையில் பல இடங்கள் தோய்வு ஏற்படுகிறது.
மேலும், சில இடங்களில் தேவையற்ற வன்முறை காட்சிகள் படத்தை ரசிக்கும்படி வைக்கவில்லை. படத்தில் ரசிகர்களை, கங்குவா கதாபாத்திரத்துடன் வலுவாக இணைக்கக்கூடிய எந்த ஒரு உணர்ச்சி மிக்க காட்சியும் இல்லை.

பட மூலாதாரம், Studio Green/FB
ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் தகர்ந்தன
சிறந்த கதைகளத்துடன் இப்படம் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஃப்ரான்ஸிஸ் பாத்திரத்தில் பணத்திற்காக குற்றவாளிகளை கண்டுபிடிப்பவராக (bounty hunter) வரும் சூர்யாவின் தோற்றம், 'கல்கி' படத்தில் வரும் பிரபாஸின் பாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.
கல்கி படத்தின் அறிமுகக் காட்சியைப் போலவே ஃப்ரான்ஸிஸின் அறிமுகம் கங்குவா படத்தில் அமைந்துள்ளது.
இதனால் இந்த கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸை பார்வையாளர்கள் இழக்கின்றனர்.
படத்தில் வரும் சில நகைச்சுவைக் காட்சிகளும் ஏற்கனவே வந்த படத்தில் இடம்பெற்றது போலவே இருந்தன.
3D காட்சிகள்
3டி-யில் படமாக்கப்பட்ட பழங்கால, வரலாறு, கற்பனை மற்றும் சண்டைக் காட்சிகள் போன்றவை ரசிகர்கள் கதைக்களத்தோடு பிணைக்க உதவியது. முதற்பாதியில் எந்த ஒரு உற்சாகமூட்டும் காட்சிகள் இல்லாமல் வழக்கமான கதைக்களத்திலே படம் நகர்கிறது.
ஆனால் 3டி அனுபவம் வழக்கமான கதைக்களத்தையும் செழுமையாக காட்டுகிறது. இந்த 3டி காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம்.
ஃப்ரான்ஸிஸ் கதாபாத்திரத்தை மெருகூட்ட படத்தில் இணைக்கபட்ட நகைசுவைக் காட்சிகள் சில இடங்களில் கைகொடுக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மீம்ஸை பிரதிபலிக்கும் வகையில் இருந்த நகைசுவை காட்சிகள் படத்தின் கதையோடு ஒட்டவில்லை. படத்தில் ஒரு பாடலைத் தவிர்த்து இதர பாடல்கள் கவரும் வகையில் இல்லை.
படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்றவை சிறப்பாக இருந்தன. தொழிற்நுட்ப வளம் இந்த படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
பிரமாண்ட புரமோஷன்கள், டிரெய்லரில் சுவாரசியமான கதை என பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இந்த படம் வெளிவந்தாலும் கதையில் கமர்ஷியல் கூறுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த படமாக ‘கங்குவா’ இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












