You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நூரா மற்றும் ஆதிலா: கேரள லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோஷூட்
பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட ஆதிலா நஸ்ரின், ஃபாத்திமா நூரா ஆகிய இரு பெண்களையும் கேரளாவின் நீதிமன்றம் சேர்த்து வைத்தபோது இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர்.
தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி,எதிர்ப்புகளை எதிர்கொண்ட இருவரும் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
கடந்த மாதம் இருவரும் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர். இந்த முறை ஒரு திருமண முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்ட போட்டோஷூட்டில் இருவரும் ஜோடியாக மணமக்களாக போஸ் கொடுத்தனர்.
வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, பழுப்பு மற்றும் நீல நிற லெஹெங்காக்கள் அணிந்திருந்த (நீண்ட பாவாடைகள்) அவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் கடலோரத்தில் ஓர் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பரஸ்பரம் மோதிரங்கள் மற்றும் ரோஜா மாலைகளை பரிமாறிக்கொண்டனர்.
முகநூல் பக்கதில் இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்த நூரா, "சாதனைக்கான தடை நீங்கியது: இனி ஒன்றாக எப்போதும்" என்று தலைப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
"இந்த யோசனை சுவாரஸ்மானதாக இருந்ததால் இந்த போட்டோஷூட்டை நாங்கள் முயற்சி செய்தோம்," என பிபிசியிடம் தொலைபேசி வழியே நஸ்ரின் கூறினார்.
இதுபோன்ற போட்டோஷூட்களில் பங்கேற்ற பல வினோத ஜோடிகளில் இந்த பெண்களும் அடங்குவர்.
"நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை," என நஸ்ரின் கூறினார். "ஆனால் ஒரு கட்டத்தில், நாங்கள் இப்படி இருக்க விரும்புகிறோம்," என்றும் தெரிவித்தார்.
தன்னார்வலர்கள், எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் போன்றோரின் ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான சட்டப் போராட்டத்துக்குப் பிறகு தன்பாலினத்தவர் இடையேயான ஓரினச்சேர்க்கையை குற்றமற்றது என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது.
பல ஆண்டுகளாக இந்த சமூகத்தினர் பற்றி விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்த சமூகத்தினர் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல், இன்னும் களங்கம் மற்றும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர்.
நூரா, நஸ்ரின் இருவருக்கும் இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கின்றது. நூராவின் குடும்பத்தினரிடம் இருந்து, அவர்களை பிரிப்பதற்கான அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக இந்த ஜோடி கூறியது.
இந்தியாவில், தன்பாலினத்தவர்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு இன்னும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இது குறித்த சட்டத்தை இயற்றும் கோரிக்கையுடன் கூடிய மனுக்கள் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் இன்னும் பரிசீலனையில் இருக்கின்றன.
இதற்கிடையே, பல ஓரினச்சேர்க்கை தம்பதிகள் அர்ப்பணிப்பு விழாக்களில் (இரண்டு பேர் ஒருவருக்கொருவர் தங்கள் உறுதிப்பாட்டை பகிரங்கமாக உறுதியளிக்கும் ஒரு சடங்கு)பங்கேற்கின்றனர். நூரா, நஸ்ரின் இருவரும் இணைந்து வாழ்வதற்கு கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளனர். ஆனால், இந்தியாவில் திருமணமான தம்பதியருக்கான உரிமைகள் அல்லது முன்னுரிமைகள் அவர்களுக்கு இல்லை.
மனைவி, கணவர் அல்லது தந்தையின் பெயர் ஆகியவற்றை ஏதேனும் ஒரு படிவத்தில் நிரப்பும்படி அவர்களை கோருவது குறித்து விவரித்த நஸ்ரின், "எனது பணியிடத்தில் அல்லது வேறு எங்கேனும் கேட்கும்போது நான் இன்னும் எனது தந்தையின் பெயரை உபயோகிக்கின்றேன். நாங்கள் இருவரும் ஒரு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தோம். எங்களுடைய தந்தையின் பெயரைக் கொடுத்தோம். இது வெறுப்பாக இருந்தது," என்றார்.
பெண்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் நல்லுறவில் இல்லாததால் அவர்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கிறது.
குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததால், அவர்கள் வளர்ந்த சமூகத்தில் உள்ள பெண்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்கிறார்கள் மற்றும் வனஜா கலெக்டிவ் போன்ற எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் (LGBTQ+) குழுக்கள் அவர்கள் ஒன்று சேர உதவியது.
நூரா, நஸ்ரின் இருவரும் உயர் நிலை பள்ளியில் படிக்கும்போது சந்தித்து பழகினர். பள்ளியை விட்டு வெளியேறியதும் கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களில் தங்கள் குடும்பத்தினருடன் மூன்று ஆண்டுகள் வசித்தனர். கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டனர். தங்களால் இயன்றபோது அவ்வப்போது மொபைல் அழைப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில் அரட்டைகளில் ஈடுபட்டனர்.
உதவிகள் வேண்டி ஆதரவு குழுவினரை தொடர்பு கொண்டபோது, முதலில் உங்கள் படிப்பை முடியுங்கள். அதன் பின்னர் ஒரு வேலைக்கு செல்லுங்கள் என்று அவர்கள் அறிவுரைகளை வழங்கினர். தங்களைத் தொடர்பு கொள்ளும் தங்களைப் போன்ற தன்பாலினத்தவர்களுக்கு இதே அறிவுரையை இருவரும் கூறுகின்றனர்.
பழமைவாத குடும்பங்களில் இருந்து வெளியேறி ஒன்றிணைவது எளிதாக இருக்காது என்று எங்களுக்கு தெரியும் என்கிறார் நஸ்ரின்.
"என்னுடைய சமூகத்தில் பெரும்பாலான மக்கள் நல்ல கல்வி பின்புலத்தை பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு வேலை கிடைக்க உதவி செய்ய முயற்சிகள் மேற்கொண்டபோது போதுமான கல்வி அறிவு இல்லாதது ஒரு தடையாக இருந்தது," என்றார் நஸ்ரின்.
அதனால்தான் அவர்கள் தங்கள் நிலையில் இருக்கும் எவருக்கும் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.
"உங்கள் சொந்தவாழ்க்கையை வாழ்வதற்கு, ஒரு வேலையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது," என நூரா கூறுகிறார். "நீங்கள் வேறொருவரின் தயவில் இல்லை என்பதே நிதி பாதுகாப்பு ஆகும்" என்றும் கூறினார்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தங்களது கடந்த காலத்தில் எதையும் இழக்கவில்லை என இரண்டு பெண்களும் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கையின் சில பகுதிகளிலிருந்து அவர்கள் உணரும் சுதந்திரம் தெளிவாகிறது.
கைகளை அல்லது தலையின் பின்பகுதியை பிடித்துக்கொண்டு இருப்பது போன்ற படங்கள் முன்பு வரம்புக்கு உட்பட்டதாக இருந்தது.
இப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் முட்டாள்தனமாக விளையாடுவது, நண்பர்களுடன் பழகுவது மற்றும் ஒன்றாக நாயை வளர்ப்பது என அவர்களின் புகைப்படங்கள் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை கட்டமைக்கிறது.
"இப்போது நான் மாறுவதற்கு எதுவும் இல்லை," என நூரா கூறுகிறார். "நாங்கள் நச்சுத்தன்மையை விட்டு விலகி விட்டோம் என்பதை போலவே இது இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.
மக்களிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்த ஆதரவால் தாங்கள் தொடர்ந்து நெகிழ்ந்து போவதாக இருவரும் கூறுகின்றனர். அவர்கள் பல நேர்காணல்கள் கொடுத்திருக்கின்றனர். பிரபலமான பெண்கள் இதழில் இடம்பெற்றனர். மாநிலத்தின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியிருக்கின்றனர். இந்த ஊடகங்களில் எல்லாம் அவர்களின் கதை வலுவான மற்றும் உத்வேகம் அளிக்கும் ஒன்றாக இருப்பதாக புகழப்பட்டது.
"இப்போது நாங்கள் முகக்கவசம், கண்ணாடிகள் அணிந்தபோதிலும் மக்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்கின்றனர்," என நஸ்ரின் கூறுகிறார். பொதுமக்களிடம் கவனம் பெறுவது என்பது இதுவரை ஆறுதலாகவும், ஊக்கமளிப்பதாகவும் தெரிவிக்கிறார்.
அவர்களது குடும்பத்தினர், அவர்களது உறவு ஒரு குறுகியகாலத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்று இன்னும் நம்புகிறார்கள். அவர்களின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதுபோன்ற பின்னூட்டங்கள்தான் அதிகரித்துள்ளன.
அவர்களின் நலம் விரும்பிகள் ஆதரவு கரம் நீட்டுவதுடன், அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். இதற்கு மத்தியில், அவர்கள் மோசமான முன்னுதாரணம் என்றும், அவர்கள் இருவரும் தனித்தனியே ஆண்களை திரும்ணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர்.
நூரா, நஸ்ரின் இருவரும் இன்ஸ்டாகிராமில் குறிப்பாக மோசமானதாகத் தோன்றும் கருத்துகளுக்கு எப்போதாவது பதிலளிக்கின்றனர். ஆனால் அவர்களின் பதில் நகைச்சுவையோடு கூடியதாக இருக்கிறது.
அண்மையில், இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், 40 வயதுக்கு மேற்பட்ட லெஸ்பியனை ஒருபோதும் பார்த்ததில்லை, ஏனெனில் அவர்களின் பாலுணர்வு குறுகிய காலகட்டத்துக்கே இருக்கும் என்று பின்னூட்டத்தில் எழுதியபோது, அதற்கு பதில் அளித்த இந்த இருவரும், "நாங்கள் 40 வயது ஆகும் வரை காத்திருங்கள்," என்று குறிப்பிட்டிருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்