You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 33வது தற்கொலை' - வடமாநில பெண் மரணம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வட மாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை கூறுகிறது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் மண்டல். இவரது மனைவி பந்தனா மஜ்கி என்கிற ஸ்ரீதன மாஞ்சி. இவர்களுக்குத் திருமணம் முடித்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் குழந்தை இல்லை.
இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கள் ஊரிலிருந்து பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்தனர். இவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள கரிவாலவந்தநல்லூர் அருகே வேலையாபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். பெருமாள்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக அஜய் குமார் மண்டல் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றுவிட்டு அஜய் குமார் மண்டல் மாலை வீடு திரும்பியபோது அவரது மனைவி ஸ்ரீதன மாஞ்சியின் உடல் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டார்.
மன அழுத்தம், தற்கொலை எண்ணம் உடையோர் உளவியல் ஆலோசனைக்கு 24 மணி நேர அரசு உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ளவும்.
இது குறித்து அஜய் குமார் மண்டல் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அவர் கூலி வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி ஸ்ரீதன மாஞ்சி தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூபாய் 70 ஆயிரத்தை இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது என்கிறது காவல்துறை.
மேலும் ஸ்ரீதன மாஞ்சி செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து அவசர சட்டம் கொண்டு வருவதற்கு கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியன்று தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதியன்று அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அந்த அவசரம் சட்டம் சட்ட விதிகளின்படி நவம்பர் 27ஆம் தேதியுடன் காலாவதியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நிரந்தர சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாத காரணத்தால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இருந்து வந்த சட்டபூர்வ தடை, சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காகக் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்குக் காரணம்.
ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் அது மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். இதைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் மிகவும் அவசியம்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்துள்ளது. அதை ஏற்று இந்தத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தற்போது நிகழ்ந்துள்ள வட மாநில பெண்ணின் மரணம் குறித்துப் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டிற்குப் பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த ஒடிசா பெண் பந்தனா மஜ்கி ஆன்லைன் சூதாட்டத்தில் 70,000 ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீப்பளித்ததற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33வது தற்கொலை இது. கடந்த இரண்டு மாதங்களில் இது நான்காவது தற்கொலை.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்குப் பிறகும் சில உயிரிழப்புகளுக்குப் பிறகும் தான் சாத்தியமாகிறது.
15 மாதங்களில் விலை மதிப்பற்ற 33 உயிர்களைப் பறி கொடுத்தும்கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை.
ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது. மறுபுறம் பேரவையில் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப் போகிறது. இதனால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுநர் உணர வேண்டும்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்