'டிராகன் மேன்' யார்? பழங்கால மர்ம மனிதன் பற்றிய ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Chuang Zhao
சீனாவில் 2018-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழமையான மண்டை ஓட்டில் இருந்து பெறப்பட்ட மரபணு பொருட்களை ஆதி மனிதர்களின் மர்மமான குழு ஒன்றுடன் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.
'டிராகன் மேன்' எனப் பெயரிடப்பட்ட அந்த மண்டை ஓடு விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் இதற்கு முந்தைய எந்த பழங்கால மனிதர்களுடனும் அது ஒத்துப்போகவில்லை.
சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த மரபணு பொருட்களை பழங்கால மனிதர்கள் குழுவான டெனிசோவன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது.
டிராகன் மேன் யார்? டெனிசோவன் என்பது யார்? இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
டிராகன் மேன் யார்?

பட மூலாதாரம், PA Media
"டிராகன் மேன்" அல்லது ஹோமா லோங்கி என்பது மனிதர்களின் ஆதிகால உறவினருக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். புதைபடிமமாக கண்டுபிடிக்கப்பட்ட இவரின் மண்டை ஓடு 2018-ஆம் ஆண்டு வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த மண்டை ஓடு 1933-இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த மண்டை ஓடு கிட்டத்தட்ட 1,46,000 ஆண்டுகள் பழமையானது என்றும் 50 வயது மதிக்கத்தக்க ஆணுடையது என்றும் நம்பப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது. நியாண்டர்தாலை விட டிராகன் மேன் நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர் என அவர்கள் நம்பினர்.
டெனிசோவன் யார்?

பட மூலாதாரம், Maayan Harel
டெனிசோவன்கள் பழங்கால மனிதர்களில் ஒரு வகை ஆகும். அதேவேளையில் மற்றுமொரு பழங்கால மனிதர்கள் குழுவான நியாண்டர்தால்களிடம் இருந்து வேறுபட்டவர்களாகவும் உள்ளனர்.
நவீன மனிதர்களின் உறவினர்களாக இருந்து அழிந்து போன இரண்டு குழுக்களும் ஒரு காலகட்டத்தில் ஹோமோ சேபியன்ஸ் (நம்மைப் போன்ற மனிதர்கள்) உடன் இணைந்து வாழ்ந்தனர்.
டெனிசோவன்கள் 2,85,000 ஆண்டிலிருந்து - 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
2010-ஆம் ஆண்டு சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவின் மூலம் முதல் முறையாக இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அப்போதிலிருந்து இதர டெனிசோவன்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களின் தோற்றம் என்பது ஒரு மர்மமாகவே இருந்து வந்தது.

பட மூலாதாரம், Institute of Vertebrate Paleontology and Paleoanthropology of the Chinese Academy of Sciences
பெய்ஜிங்கில் உள்ள சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஒரு அங்கமான பேலியன்டாலஜி மற்றும் பேலியோஆந்த்ரபாலஜி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஒரு குழு, டிராகன் மேன் புதைபடிமங்களை டெனிசோவன்களுடன் தொடர்புடையவரா என்று ஆய்வு செய்தது.
இந்தக் குழு மண்டை ஓட்டில், பல் மற்றும் பெட்ரூவஸ் எலும்பிலிருந்து டிஎன்ஏவை எடுப்பதில் தோல்வியடைந்தது. பெட்ரூவஸ் எலும்பு என்பது மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் அமைந்த, புதைபடிமங்களில் டிஎன்ஏ அதிகம் இருக்கும் இடமாகும்.
ஆனால் அங்கெல்லாம் கிடைக்காமல் பல்லின் மீது உள்ள கனமான தகடு போன்ற அமைப்பான டார்டர் தான் அவர்களுக்கு பயன்படும் முடிவுகளை வழங்கியது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் டெனிசோவன்களை நம்மால் உருவகப்படுத்த முடியும்.
அவர்களுக்கு மண்டை ஓட்டின் முன்பக்கம் வலுவாக இருந்திருக்கும், நியாண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களை விடவும் பெரிய பற்கள் இருந்திருக்கும். ஆனால் மூளை ஒரே அளவிலானதாகவே இருந்திருக்கும்.
"இந்த மக்கள் குழுவைச் சுற்றிய சில மர்மங்களை நாம் கலைத்திருக்கிறோம் என நிஜமாகவே நம்புகிறேன்," என புதிய ஆய்வின் முதன்மை ஆசிரியரான சியோவ்மே ஃபூ தெரிவித்துள்ளார்.
"15 ஆண்டுகள் கழித்து நமக்கு முதல் டெனிசோவன் மண்டை ஓடு தெரியவந்துள்ளது," என்றார்.
இந்த ஆய்வு மற்ற அருங்காட்சியக சேகரிப்புகளில் இருக்கும் டெனிசோவன் எலும்புகளைக் கண்டுபிடிக்க உதவும் என நம்பப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












