காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை என பொய் புகார் - என்ன நடந்தது?

கூட்டு பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பொய் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் நேற்று நள்ளிரவு, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து தன்னை 4 பேர் காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக புகாரை பெற்று விசாரணையை தொடங்கினர்.

சக தோழியை சந்திப்பதற்காக, நேற்று இரவு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு தான் வந்ததாகவும், ரயில் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த நான்கு இளைஞர்கள் தன்னிடம் பேச்சு கொடுத்தாகவும் பேசிக்கொண்டிருக்கும்போதே, காரில் தன்னை கடத்தியதாகவும் காவல்துறையில் இளம் பெண் கூறியிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் வைத்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களிடமிருந்து தப்பி சாலவாக்கம் காவல் நிலையம் வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளனர்.

பின் புகார் அளித்த இளம் பெண்ணை செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தினர்.

என்ன நடந்தது?

எனினும் தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரில் உண்மை இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், "அப்பெண் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை மூன்று மாத காலமாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக அந்நபர் அழைத்ததன் பேரில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதன்பின் தன்னை திருமணம் செய்ய அந்நபரிடம் கேட்டபோது அந்த இளைஞர் மறுத்ததால் அவரை சிக்க வைக்க இவ்வாறு அப்பெண் புகார் அளித்துள்ளார்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ். பி டாக்டர் எம் சுதாகர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, “சென்னையில் இருந்து ஒரு பெண் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்த நான்கு இளைஞர்கள் கருப்பு நிற காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். உடனடியாக காவல் துறையினர் அப்பெண்ணை அணுகி விசாரணை செய்தனர். அப்பெண் கூறிய தகவல்கள் உண்மைக்கு முரண்பாடாகவே இருந்தன.

செங்கல்பட்டில் நான்கு பேரை பார்ப்பதற்காக வந்ததாக அப்பெண் கூறியுள்ளார். அந்த நான்கு பேரையும் காவல் துறையினர் தொடர்பு கொண்ட போது, எல்லாரும் வெவ்வேறு இடங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒருவர், திசையன்விளை, மற்றொருவர் திருச்சி, இன்னும் ஒருவர் சென்னையில் இருப்பதாக கூறியுள்ளனர். எனவே, அவர்களை பார்க்க வந்ததாக பெண் கூறியது, உண்மைக்கு புறம்பான தகவல் என தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அப்பெண்ணிடம் விசாரணையை நடத்தியபோது சில தகவல்களை கூறினார். அது அவரின் தனிப்பட்ட கருத்து என்பதால் பொதுவெளியில் கூற முடியாது. அதேவேளையில், அப்பெண் ஒருவரை சிக்க வைக்க கூட்டு பாலியல் வன்புணர்வு என நாடகமாடி பொய்யான புகாரளித்தது தெரிய வந்துள்ளது.” என தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணை பார்க்க அழைத்த இளைஞரை சாலவாக்கம் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பொய்யான புகாரளித்த பெண் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: