You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோயைத் தவிர்க்கும் எலிகள் - மரபணுவில் மறைந்திருக்கும் நீண்ட ஆயுள் ரகசியம்
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, பிபிசி
அவை விசித்திரமான, வழுக்கையான, பற்களையுடைய சாசேஜ் போல காட்சியளிக்கும் நிலத்தடியில் வாழும் எலிகள். அவை, நீண்ட ஆயுளுக்கான மரபணு ரகசியம் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளன.
விசித்திரமான முடியிலித் துன்னெலி (Naked mole rat) குறித்த ஒரு புதிய ஆய்வு, இந்த விலங்குகள் தங்கள் மரபணுக்களை குணப்படுத்தும் செயல்முறையை (DNA repair mechanism) உருவாக்கியுள்ளன என்பதைக் காட்டுகிறது. இதுவே இவற்றின் நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கக்கூடும்.
பொந்துகளில் வாழும் இந்த எலிகள் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உயிர் வாழும் திறன் கொண்டவை. இதுவே உலகின் நீண்ட ஆயுள் கொண்ட கொறித்துண்ணி என்ற பெருமையையும் இதற்கு அளிக்கிறது.
'சயின்ஸ்' (Science) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகள், இந்த எலிகள் வயது தொடர்பான பல நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏன் கொண்டுள்ளன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும்.
இந்த விலங்குகள் புற்றுநோய், மூளை மற்றும் தண்டுவடம் சிதைவு, மூட்டுவலி போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவை. எனவே, அவற்றின் உடல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளப் பல விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
ஷாங்காயில் உள்ள டோன்ஜி பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு தலைமையிலான இந்த ஆய்வில், டிஎன்ஏ குணப்படுத்துதலில் கவனம் செலுத்தப்பட்டது. இது நம் உடலின் செல்களில் நடைபெறும் ஒரு இயற்கையான செயல்முறையாகும்.
நம் மரபணு கட்டமைப்புகளான டிஎன்ஏ இழைகள் சேதமடையும் போது, மற்றொரு சேதமடையாத டிஎன்ஏ இழை ஒரு வார்ப்புருவாகப் (template) பயன்படுத்தப்பட்டு, அந்தச் சேதத்தைச் சரிசெய்யும் செயல்முறை தூண்டப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியில், சேதத்தை உணரும் மற்றும் சரிசெய்யும் செயல்பாட்டில் ஒரு குறிப்பிட்ட புரதத்தின் (protein) மீது கவனம் செலுத்தப்பட்டது.
ஒரு செல் சேதத்தை உணரும்போது, அது உருவாக்கும் பொருட்களில் ஒன்று சி-ஜிஏஎஸ் (c-GAS) எனப்படும் புரதமாகும். இது பல செயல்களை செய்கிறது. ஆனால், விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டியது என்னவென்றால், மனிதர்களில் இந்த புரதம், டிஎன்ஏ இழைகள் ஒன்றாக இணைக்கப்படும் செயல்முறையில் தலையிட்டு, தடை செய்கிறது.
இந்தத் தலையீடு புற்றுநோயை ஊக்குவித்து நம் ஆயுட்காலத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
ஆனால், துன்னெலிகளில் இதே புரதம் அதற்கு நேர்மாறாகச் செயல்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது டிஎன்ஏ இழைகளைச் சரிசெய்ய உடலுக்கு உதவுகிறது. மேலும், ஒவ்வொரு செல்லிலும் உள்ள மரபணு குறியீட்டைச் (genetic code) பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டிஎன்ஏ சீரமைத்தல் மற்றும் வயது மூப்பு குறித்து ஆய்வு செய்யும் பேராசிரியர் கேப்ரியல் பால்மஸ் இது ஒரு உற்சாகமளிக்கும் கண்டுபிடிப்பு என்றும், இந்த விலங்குகள் ஏன் இவ்வளவு நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் இது "பனிப்பாறையின் நுனி" போல் சிறிய ஒரு பகுதி மட்டுமே என்றும் கூறினார்.
"நீங்கள் சி-ஜிஏஎஸ்-ஐ ஒரு உயிரியல் லெகோ துண்டாகக் (biological Lego piece) கருதலாம் - மனிதர்களிலும் துன்னெலிகளிலும் ஒரே அடிப்படை வடிவத்தைக் கொண்டது. ஆனால், முடியில்லாத எலிகளின் வடிவமைப்பில் சில இணைப்பிகள் புரட்டப்பட்டு, அது முற்றிலும் வேறுபட்ட அமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டிருக்க உதவுகிறது."
மில்லியன் கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில், துன்னெலிகள் அதே பாதையை மறுசீரமைத்து "தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகத்" தெரிகிறது என்று பேராசிரியர் பால்மஸ் விளக்கினார்.
"இந்தக் கண்டுபிடிப்பு அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது: அதே புரதத்தின் செயல்பாட்டை பரிணாம வளர்ச்சி தலைகீழாக மாற்றியது எப்படி? என்ன மாறியது? இது ஒரு தனிப்பட்ட நிகழ்வா அல்லது ஒரு பரந்த பரிணாமப் போக்கின் பகுதியா?"
மிக முக்கியமாக, மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயதாகும்போது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த எலிகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதை விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
"நம்மால் துன்னெலியின் உயிரியலை மறு ஆக்கம் செய்ய முடிந்தால், முதியோர்களுக்கு தேவையான சில சிகிச்சைகளைக் கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று பேராசிரியர் பால்மஸ் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு