தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதல்வர்கள், முக்கியத் தலைவர்களின் கூட்டத்தில், மேலும் 25 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே நீடிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதே விவகாரம் தொடர்பாக இதற்கு முன்பாக நடந்த தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதிகளை அதிகரிப்பதாக இருந்தால், தற்போது தமிழ்நாட்டிற்கு உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவம் மாறாத வகையில் அதனைச் செய்ய வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இது சற்றே மாறுபட்டிருக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை மார்ச் ஐந்தாம் தேதி நடத்தியது.
அந்தக் கூட்டத்தில், இந்தப் பிரச்னையினால் தமிழ்நாடு போலவே பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் உள்ள முக்கியத் தலைவர்களின் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.

பட மூலாதாரம், HANDOUT
இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், முக்கியக் கட்சித் தலைவர்களின் ஒரு கூட்டத்தை மார்ச் 22ஆம் தேதி நடத்த முதற்கட்டமாக முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி நடந்த இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஒடிசா மாநில முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்த பிறகு, ஒட்டுமொத்தமாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'மக்கள் தொகையைக் குறைத்த மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. அதற்கேற்ற வகையில் மத்திய அரசு உரிய அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றங்களில் இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றுவது' என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
மிக முக்கியமான, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், HANDOUT
அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்திலிருந்து மாறுபாடா?
மார்ச் ஐந்தாம் தேதி சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், '1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்' என்று ஒரு தீர்மானம் கூறியது.
இருந்தபோதும், தாங்கள் தொகுதி வரையறைக்கு எதிராக இல்லை என்றும் ஒரு தீர்மானம் குறிப்பிட்டது. "தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது" என்றது அந்தத் தீர்மானம்.
மேலும்,தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்றும் தீர்மானத்தில் கோரப்பட்டது.
ஆனால், தற்போது தொகுதி மறுசீரமைப்பையே அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், TNDIPR
சதவீத அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும் சமநிலை பாதிக்கப்படும் என சில மாநிலங்கள் கருதுவதாலேயே, மேலும் 25 ஆண்டுகளுக்கு மறு சீரமைப்பை தள்ளிவைக்கத் தீர்மானத்தில் கூறப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி.
"அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும்கூட, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாக்குறுதி அளித்ததைப் போலவே, தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம்.
இப்போது இதையே முழு தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம். இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கும்போது, பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், சதவீத அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், மக்கள் தொகையை குறைத்த மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கருதினார்கள்.
800க்கும் மேல் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது ஒரு சில மாநிலங்களுக்கு அதீதமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும், அது தற்போதைய சமநிலையைப் பாதிக்கும் என அவர்கள் கருதினார்கள். ஆகவேதான், தற்போதுள்ள 543 என்ற எண்ணிக்கையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறோம்" என தெரிவித்தார் கனிமொழி.

பட மூலாதாரம், TWITTER
அரசியல் ரீதியாக இப்போதைக்கு இதுதான் யதார்த்தமான கோரிக்கையாக இருக்கும் என்கிறார் South Vs North: India's Great Divide நூலை எழுதிய ஆர்.எஸ். நீலகண்டன்.
"சிறிய அளவில் எண்ணிக்கை குறைவதற்காக போராடுவதற்கோ, சிறிய அளவில் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக போராடுவதற்கோ மக்களை திரட்டுவது கடினம். ஆகவே, இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்துத்தான் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியும். அரசியல்ரீதியாக இதுதான் சரியானதாக இருக்கும். ஆகவே, இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்" என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.
ஆனால், தொகுதி மறுவரையறையை நீண்ட காலம் தள்ளிப்போடக்கூடாது என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.
"மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தென்னிந்தியா சிறப்பாக செயல்பட்டிருக்கிறது; தொகுதி மறுசீரமைப்பால் அவை பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான் 2001ல் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் மக்கள் தொகை வெகுவாக வளர்ந்துவிட்டது. ஆகவே, கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன சதவீதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே சதவீதத்தில் தொகுதிகளை அதிகரித்தால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் பாதிக்கப்படாது. மாறாக, தொகுதிகளின் எண்ணிக்கையை இன்னும் 25 வருடங்களுக்கு தள்ளிப்போடுவது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால், எத்தனை லட்சம் மக்களுக்கு சேவை செய்ய முடியும்? பல தொகுதிகளில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு ஒரு உறுப்பினர் இருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்?" என்கிறார் நாராயணன் திருப்பதி.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ராஷ்ட்ரிய சமீதியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் மற்றொரு யோசனையை முன்வைத்தார்.
அதாவது, ''மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும்தான் தீர்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கலாம். இது மாநிலங்களுக்கு உள்ளேயே நடப்பதால், மற்ற மாநிலங்களுடனான அதிகாரச் சமநிலை பாதிக்கப்படாது'' என்ற யோசனையை முன்வைக்கிறார் அவர்.
"இது மோசமான யோசனையல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான பணி, நாடாளுமன்றத்தில்தான் இருக்கிறது. அவர்கள் மக்களோடு பணியாற்றுவது குறைவு. ஆகவே எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை மோசமான யோசனையாக கருத முடியாது. அதே நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் இதேபோன்ற மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்" என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு













