'டி.எஸ்.பி கைது' - காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு சர்ச்சையானது ஏன்?

டிஎஸ்பி சங்கர் கணேஷ்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, டிஎஸ்பி சங்கர் கணேஷ்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

என்ன பிரச்னை?

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி கடையை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வந்துள்ளார்.

அப்போது பேக்கரியில் வாங்கிச் சென்ற பொருள் தொடர்பாக சிவக்குமாரிடம், முருகன் தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்தநிலையில், சிவக்குமாரின் மருமகனும் காவலருமான லோகேஸ்வரன் ரவி உள்பட நான்கு பேர், தன் கணவரைத் தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார்.

அதேபோல், முருகன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். இரண்டு மனுவையும் ஏற்றதாக சி.எஸ்.ஆர் (Community Service Register) மட்டும் போலீஸார் வழங்கியுள்ளனர்.

பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்ததால் சி.எஸ்.ஆர் மனு முடித்து வைக்கப்பட்டதாக, செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக செப்டெம்பர் 4 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார்.

'முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார்.

டி.எஸ்.பி கைதானபோது என்ன நடந்தது?

டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது

பட மூலாதாரம், UGC

கடந்த 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார்.

அப்போது, காவலர் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்ட நீதிபதி, டி.எஸ்.பி சங்கர் கணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டி.எஸ்.பியை கைது செய்வதற்கு காவலர்கள் முன்வராததால், தனது காரிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி ப.உ.செம்மல் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நீதிபதி காரிலேயே கிளைச் சிறைக்கு சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவல் வாகனத்தில் அவர் ஏறிய சில நொடிகளில் வாகனம் விரைந்து சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

சுமார் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிளைச் சிறையில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் ஆஜரானார்.

டி.எஸ்.பி கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், "முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பியை கைது செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்வைப் பெறுவோம்" எனக் கூறினார்.

'நீதிபதியுடன் தனிப்பட்ட தகராறு'

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கும் அவரது தனிப் பாதுகாப்பு (PSO) அதிகாரியாக பணிபுரிந்த காவலர் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் பேக்கரி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி சங்கர் கணேஷை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு ப.உ.செம்மல் உத்தரவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணையில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) கே.எம்.டி முகிலன் வாதிடும்போது, "தனக்கு எதிரான சில அநாமதேய புகார்களை காவலர் லோகேஸ்வரன் அனுப்பி வருவதாக மாவட்ட நீதிபதி சந்தேகப்பட்டுள்ளார். காவலரின் மாமனாருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீதிபதி அறிந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.

''இந்த வழக்கில் வாலாஜாபாத் காவல்நிலைய ஆய்வாளரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவழைத்த ப.உ.செம்மல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு வாய்மொழியாக கூறியுள்ளார்''

அதன்பேரில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி முகிலன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

'நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்ட டி.எஸ்.பி'

செப்டெம்பர் 4 அன்று, பாதிக்கப்பட்ட நபரை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை விட்டு விலகி இருக்குமாறு மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார்.

"எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உண்மைகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் தெரிவித்தார்.

செப்டெம்பர் 8 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய அரசு கூடுதல் வழக்கறிஞர், "அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என டி.எஸ்.பியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ப.உ.செம்மல், காலை முதல் மாலை வரை நீதிமன்ற வளாகத்தில் அவரை அமரவைத்தார்" எனக் கூறினார்.

இந்த வழக்கில் எந்த விசாரணையையும் நடத்தாமல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி (கடமையை புறக்கணித்ததற்கான தண்டனை) கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்தார்.

மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணையை நடத்தி வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு (விஜிலென்ஸ்) உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "தற்போது அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'வாய்ப்பளிக்காமல் நடவடிக்கை' - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்

மாவட்ட நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பிபிசி தமிழ் பேசியது.

" எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை" எனக் கூறினார்.

"எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. கடமையைச் செய்வதில் இருந்து விலகியிருந்தால் துறைரீதியான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார், ஹரி பரந்தாமன்.

ஹரிபரந்தாமன்

பட மூலாதாரம், Hariparandaman

படக்குறிப்பு, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என்கிறார், ஹரிபரந்தாமன்

'நீதிபதியின் உத்தரவு, உச்சகட்டமானது'

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வெளியேற உத்தரவு (Externment order) பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய அரி பரந்தாமன், "சாதி ஆணவப் படுகொலைகளின்போது, குற்றம் சுமத்தப்படும் நபர்களை வெளியேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுகூட, இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை" என்கிறார்.

"காவல்துறை தரப்பில், 'தொடர்புடைய நபர் ஊரில் இருந்தால் கலவரம் நடக்கும்' என அறிக்கை கொடுக்கும்போது தான் வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பேக்கரி தகராறு என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு இப்படியொரு உத்தரவு என்பது உச்சகட்டமானது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இதன் விளைவுகளை மாவட்ட நீதிபதி எதிர்கொள்ள வேண்டியது வரலாம்" எனக் கூறும் அரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் முழு விவரங்களும் தெரியவரும்" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு