திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமையா? பிபிசி கள ஆய்வு
மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் பகுதியில் காளிந்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவுதான் சந்தேஷ்கலி. இந்த பகுதிக்கு படகில் மட்டுமே செல்ல முடியும். அண்மையில் இந்த தீவைச் சேர்ந்த பெண்கள் கையில் கட்டை, துடைப்பம் போன்றவற்றை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸைச் சேர்ந்த செல்வாக்கான சில தலைவர்கள் தங்களை துன்புறுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.
ஹஸ்ரா வடக்கு 24-பர்கானாஸ் மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களான ஷாஜகான் ஷேக், ஷிபு மற்றும் அவர்களின் கூட்டாளியான உத்தம் சர்தார் ஆகியோரை பற்றிதான் மக்கள் பேசுகின்றனர். அவர்களின் கோபம் ஷாஜகான் மீதுதான் அதிகமாக உள்ளது.
ஒன்றரை மாதமாக அவர் தலைமறைவாக உள்ளதால், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த அவரது கருத்தை கேட்க முடியவில்லை. ஹஸ்ரா மற்றும் உத்தம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC
பீத்தே புளி என்கிற உணவை தயாரிக்க வேண்டும், கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் அந்த பெண்கள் தங்கள் பெயருக்கு இழுக்கு ஏற்படும் என்பதால் இதுகுறித்து பேச பயமாக இருக்கிறது என்கின்றனர்.
சந்தேஷ்கலியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பயணப்பட்டபோதும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஒரு பெண்ணிடமும் எங்களால் பேச முடியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேஷ்கலியில் சலசலப்பு தொடங்கிய போது, அந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வலிமையாக இருப்பதாக சட்டப்பேரவையில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருந்தார்.
எனினும், அப்பகுதியில் தங்கள் அமைப்பு மிகவும் வலிமையானதாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்திருக்க முடியாது என்று பிபிசியிடம் ஆர்.எஸ்.ஆஸ்., அமைப்பு கூறியது.

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC
மறுபுறம், சந்தேஷ்கலி மக்கள், தாங்கள் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என்றும் மமதா பானர்ஜியின் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பதாகவும் கூறினர்.
ஆனால், தற்போது சந்தேஷ்கலி முழுவதும் காவி கொடிகள் பறக்கின்றன. அவற்றை பார்க்கும்போது சமீபத்தில்தான் அவை நிறுவப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. சில வீடுகளில் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் எழுதப்பட்டுள்ளது.
எனினும், பாஜக, ஆர்.எஸ்.எஸின் பெயர்கள் கொடிகளிலோ, சுவர்களிலோ இல்லை.
போராட்டம் தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரண்டு பெண்கள் தாங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளனர்.
கிராம மக்களின் புகார்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமார் சந்தேஷ்கலிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சில நாட்களுக்கு முன் அவர் உறுதியளித்தார்.

பட மூலாதாரம், SHIB SHANKAR CHATTERJEE / BBC
ஷாஜகான் ஷேக் மற்றும் ஷிபு ஹஸ்ரா இருவரும் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள். ஆனால் அந்த பகுதிக்கு ஷாஜகான் மட்டுமே தலைவர். அவரது பெயர் கடந்த ஜனவரி மாதம் முதன்முறையாக ஊடகங்களில் வெளியானது. ரேஷன் முறைகேடு தொடர்பாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜகான் அவருடன் நெருக்கமாக இருந்ததால், ஜனவரி 5 ஆம் தேதி ஷாஜகான் ஷேக்கின் வீட்டிற்கு அமலாக்கத்துறை குழு விசாரணைக்குச் சென்றது. அப்போது ஷாஜகானின் வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர். அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள், பாதுகாப்புக்காகச் சென்ற வீரர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த பத்திரிகையாளர்களை அடித்து விரட்டினர். இதற்கு பின்னர் ஷேக், ஷாஜகான் தலைமறைவாகி விட்டார்.
ஒரு காலத்தில் மீன் பிடிப்பவராகவும் வேன் ஓட்டுநராகவும் இருந்த ஷேக் ஷாஜகான் தற்போது அபரிமிதமான செல்வத்திற்கு சொந்தக்காரராகி இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸில் இருக்கும் சக தலைவர்களுடன் சேர்த்து இவர் மக்களின் சொத்துக்களில் பெரும்பகுதியை அபகரித்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், ANI
போராட்டத்தின் முன் வரிசையில் பெண்கள் இருந்தபோதிலும், கிராமத்து ஆண்கள் இப்போது பேசுவதற்கு பயப்படுகிறார்கள். பெண்களும் முகத்தை மூடிக்கொண்டு கேமரா முன் பேச வருகின்றனர். பெயரை சொல்லக்கூட யாரும் தயாராக இல்லை. ஊடகங்களிடம் பேசும் பலருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்போது கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக காவல்துறை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? என்கிற கேள்வியும் எடுப்பப்படுகிறது.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியால் பகிரப்படும் ட்வீட்கள் மற்றும் பதிவுகள் நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பரப்பப்படுகின்றன. சந்தேஷ்கலி விவகாரம் தேசிய அளவில் விவாதமாக மாறியுள்ளது. நடந்த சம்பவம் அனைத்திற்கு திரிணால் காங்கிரஸ் அரசு மட்டுமே காரணம் என பாஜக குற்றம் சாட்டுகிறது.
நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க அரசு ஊழியர்கள் கிராமம் கிராமமாக அலைந்து வருகின்றனர். காவல்துறை தலைமை இயக்குநரே கிராமத்தில் ஓர் இரவைக் கழித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் மீறி திரிணாமுல் காங்கிரஸ் இந்த அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது சந்தேஷ்கலி விவகாரத்தால் பா.ஜ.க பயனடையுமா என்பது தேர்தலுக்குப் பிறகே தெரியவரும்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



