கும்பமேளா இன்றுடன் நிறைவு - இரவு நேரத்தில் பிரயாக்ராஜ் நகரம் எப்படி இருக்கும்?
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளா இன்றுடன் நிறைவடைகிறது.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நிகழ்ந்துவரும் இந்தக் கும்பமேளாவில் இதுவரை 62 கோடி பேர் நீராடியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்கள் இரவும் பகலும் இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகிறார்கள். முக்கிய தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த எண்ணிக்கை கோடிகளைத் தொடுகிறது.
உச்சகட்டமாக வசந்த பஞ்சமி தினத்தன்று மொத்தம் 2.33 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
இந்தத் திரிவேணி சங்கமத்திற்கு வரும் பக்தர்களுக்கு இரவு - பகல் என்ற வித்தியாசமே கிடையாது. இங்கே புனித நீராடுவதற்காக எந்த நேரமும் மக்கள் குவிந்துகொண்டேயிருக்கிறார்கள். இரவு நேரங்களிலும் பக்தர்கள் நீராடுவதைத் தொடர்ந்தாலும், மாலைக்கு மேல் கும்பமேளா நடக்கும் பகுதிகளில் காட்சிகள் மாறுகின்றன.
கும்பமேளா நடக்கும் பகுதிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகள் பெரும் வெளிச்சமாகவே இருக்கின்றன. பகல் முழுக்க வியாபாரம் செய்த பல வியாபாரிகளில் சிலர் தங்கள் கடையை மூடுகிறார்கள். ஆனால், பலர் இரவிலும் தங்கள் வியாபாரத்தை தொடர்கிறார்கள்.
கும்பமேளா நடக்கும் பகுதிகளுக்குள் பகல் நேரங்களில் தனிமனிதர்கள், அமைப்புகள், மடங்கள் ஆகியவை இலவசமாக உணவுகளை அளிக்கிறார்கள்.
ஆனால், இரவு உணவு அவ்வளவு பரவலாகக் கிடைப்பதில்லை. இதனால், இங்கேயே தங்கியிருக்கும் சாதுக்கள் தங்கள் இரவு உணவை தாங்களே தயாரித்துக்கொள்கிறார்கள். இந்த இரவிலும் நிர்வாண சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெற ஆட்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.
சிலர், தங்களுடைய வாகனங்களை சாதுக்களை ஓட்டச்செய்து அதன் மூலம் ஆசீர்வாதம் பெற்றதாக நம்புகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியாரான ஜனார்த்தனும் இப்படி ஆசி வழங்குபவர்களில் ஒருவர்.
இரவு நேரத்தில் கும்பமேளாவில் நடப்பது என்ன?
கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



