கொலோசஸ்: ரகசியமாக ஹிட்லரை ஏமாற்ற உதவிய உலகின் முதல் டிஜிட்டல் கணினி

அறை ஒன்றுக்குள் பெரிய அடுக்குமாடி கட்டடங்களை நிரப்பி வைத்தது போலத் தெரியும் இந்தப் புகைப்படம் ஒரு கணினியுடையது. இது இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற உதவிய கணினி.

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளைத் தொடர்ந்து வெற்றிபெற உதவிய பல ரகசிய குறியீடுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்ட ‘கொலோசஸ்’ என்ற கணினியின் படங்களை பிரிட்டிஷ் அரசாங்க தகவல் தொடர்புத் தலைமையகம் இந்த வாரம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தக் கணினி பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அது உருவாக்கப்பட்டு 80 ஆண்டுகள் பூர்த்தியடைகிறது.

வரலாற்றில் முதல் டிஜிட்டல் கணினி என்று பல நிபுணர்களால் கருதப்படும் சாதனங்களில் ஒன்றான இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகளாக இந்தப் புகைப்படங்கள் விளங்குகின்றன.

இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்தே அதன் இருப்பு சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. ஆனால், 2000களின் முற்பகுதியில்தான் பிரிட்டிஷ் அரசு கொலோசோ கணினியின் அனைத்து விவரங்களையும் வெளியிட்டது.

இந்தக் கணினி 1944ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் செயல்படத் தொடங்கியது. நாஜி ஏஜென்டுகளால் அனுப்பப்படும் ரகசிய குறியீடுகளால் மறைகுறியாக்கப்பட்ட தகவல்களைப் பகுப்பாய்ந்து புரிந்துகொள்ள இது உருவாக்கப்பட்டது.

நாஜிக்களின் தகவல் மறைக்கப்பட்ட குறியீடுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இத்தகைய சுமார் 10 கணினிகள் பங்கு வகித்ததாக போர் முடிவடைந்தபோது மதிப்பிடப்பட்டது.

இந்தக் கணினி கிட்டத்தட்ட இரண்டு மீட்டம் உயரம் கொண்டது. அதில் 2,500 வால்வுகள் பொருத்தப்பட்டிருந்தன. அதைச் செயல்படுத்தப் புதிய இயந்திரத்தின் உள்ளே இருக்கும் சர்க்யூட்டுகள் குறித்த நிபுணத்துவம் கொண்ட குழு தேவை.

இந்தப் பிரமாண்ட கணினியை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் மகளிர் கடற்படை சேவையைச் சேர்ந்தவர்கள்.

இந்த வாரம் வெளியிடப்பட்ட படங்களில் ஒன்று கொலோசோவில் பணியாற்றும் மகளிர் கடற்படை சேவையைச் சேர்ந்த பெண்களைக் காட்டுகிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தகவல் தொடர்பு தலைமையகம், கொலோசஸ் எவ்வாறு கட்டப்பட்டது என்பதற்கான திட்டங்களையும் அந்தக் கணினியால் இடைமறிக்கப்பட்ட “அபாயகரமான ஜெர்மன் கட்டளைகளை” குறிப்பிடும் கடிதம், கணினி இயங்குவதை உணர்த்தக்கூடிய ஆடியோ பதிவு ஆகியவற்றை வெளிப்படுத்தியது.

டிஜிட்டல் கணினியை கொண்டு ஜெர்மனியை ஏமாற்றிய பிரிட்டன்

கொலோசோவின் புள்ளிவிவரங்கள் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. அந்தக் கணினியில் பணியாற்றிய 550 பேர் கிட்டத்தட்ட குறியீடுகளில் ரகசியமாக அனுப்பப்பட்ட 6.3 கோடி ஜெர்மன் தகவல்களைக் கண்டறிந்தனர்.

ஜூன் 1944இல் பிரெஞ்சு நகரமான கலேஸில் டி-டே (முக்கிய ராணுவ தாக்குதல் நடக்கப்போகும் நாள்) நிகழப் போகிறது என்ற பொய் மூலம் டி-டே நடக்கப்போவது நார்மண்டி என்ற நகரத்தில் என்பதை ஹிட்லரிடம் இருந்து மறைக்க உதவியது இந்தக் கணினியின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று.

வெவ்வேறு வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, இந்தக் கணினி போரின் அளவைக் குறைத்து பல உயிர்களைக் காப்பாற்றியது.

ஆனால், அதன் தாக்கத்திற்கு அப்பால் கொலோசஸ் திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர்கள், குறியீட்டை உடைத்து தகவல்களை வெளிக்கொணர்பவர்கள் ரகசிய ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தனர். எனவே இப்படியொரு கணினி உண்மையில் இருக்கிறது என்பதே பல்லாண்டுக் காலமாக அறியப்படவில்லை.

இந்தத் திட்டம் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த திட்டம் புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

போருக்குப் பிறகு, இந்தப் பணியில் பங்கு வகித்த 10 கணினிகள் 8 அழிக்கப்பட்டன. உண்மையில், கணினியை வடிவமைத்த பொறியாளர் டாமி ஃப்ளவர்ஸ் கொலோசஸ் பற்றிய அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதை ரகசியமாக வைத்திருக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததால் 1960களில் கொலோசஸில் பணிபுரிந்த முன்னாள் தகவல்தொடர்பு தலைமையக பொறியாளர் பில் மார்ஷல், போர்க்காலத்தில் கணினி எப்படி பங்கு வகித்தது என்பது தனக்குத் தெரியாது என்று கூறினார்.

பிளெட்ச்லி பூங்காவை தளமாகக் கொண்ட தேசிய கணினி அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஹெர்பர்ட், இந்தப் புகைப்படங்களின் வெளியீடு கொலோசஸ் இரண்டாம் உலகப் போரில் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்தைக் கொண்டாடுவதற்கான மற்றொரு வாய்ப்பு என்றார்.

“தொழில்நுட்ப கண்ணோட்டத்தில், நவீன மின்னணு டிஜிட்டல் கணினிக்கு கொலோசஸ் ஒரு முக்கிய முன்னோடியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், “பிளெட்ச்லி பூங்காவில் இதைப் பயன்படுத்தியவர்களில் பலர் போருக்குப் பிந்தைய காலகட்டங்களில் பிரிட்டிஷ் கம்ப்யூட்டிங்கின் முக்கியமான முன்னோடிகளாகவும் தலைவர்களாகவும் ஆனார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் பணியின் மூலம் உலகை வழிநடத்தினார்கள்,” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)