சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டை மாணவர்: உடலைக் கொண்டு வருவதில் என்ன பிரச்னை?

சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டை மாணவர்

சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவவேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

ஷேக் அப்துல்லா என்ற அந்த மாணவர், மருத்துவப் படிப்பை முடித்து தமிழ்நாடு திரும்பிவிட்டாலும் மருத்துவப் பயிற்சிக்காகவும் படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெறுவதற்காகவும் மீண்டும் சீனா சென்ற நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். 

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த சையது அபுஹசன் சாதலியின் மகன் ஷேக் அப்துல்லா, இவருக்கு வயது 22. இவர் சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள சிசிஹார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (Qiqihar Medical University) எம்.பி.பி.எஸ். படித்துவந்தார். 

2017ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் ஷேக் சேர்ந்தார். சீனாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது இந்தியாவுக்குத் திரும்பினார். பின்பு புதுக்கோட்டையில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்பை தொடர்ந்தார்.

படிப்பு முடிவடைந்த நிலையில், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காகவும், சான்றிதழைப் பெறுவதற்காகவும் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி சீனாவுக்குச் சென்றார் ஷேக் அப்துல்லா.

மாவட்ட ஆட்சியரை அணுகிய தந்தை

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஷேக் அப்துல்லா அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். எட்டு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவர் தனது பல்கலைக்கழகத்திற்கு சென்ற நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் ஷேக் அப்துல்லா அனுமதிக்கப்பட்டார். 

உடல்நலம் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். இந்த தகவல் இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும், அவரை சீனாவிலிருந்து இந்தியா அழைத்துவர உதவ வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையை முன்வைத்து கடந்த 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவரின் பெற்றோர் மனு ஒன்றை அளித்தனர்.

சீனாவில் இறந்த மாணவர்

China Covid

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், சிகிச்சையில் இருந்த ஷேக் அப்துல்லாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஜனவரி 1ஆம் தேதி காலையில் அவர் உயிரிழந்தார்.

இந்தத் தகவல் ஷேக் அப்துல்லா படித்துவரும் பல்கலைக்கழகத்தின் மூலம், குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஷேக் அப்துல்லாவின், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டு இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது குறித்த விவரங்கள் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்கிறார்கள் குடும்பத்தினர்.

"முதலில் தங்கள் மகனுக்கு என்ன உடல் நலப் பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்துத் தெரிய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். முதலில் கல்லீரல், பிறகு சிறுநீரகம் என அடுத்தடுத்து உறுப்புகள் செயலிழந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி என்ன நோய் ஏற்பட்டது என எங்களுக்குத் தெரிய வேண்டும். மேலும், மேலும் உடலைப் பதப்படுத்தி இங்கே கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அந்த மருத்துவமனையோடு பேசிக்கொண்டிருக்கிறோம். நாளைதான் எல்லா விவரங்களும் தெரியவரும்" என்கிறார் ஷேக் அப்துல்லாவின் மாமாவான அஹமத்.

அவரது உடலை சீனாவிலிருந்து சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தோடும், பல்கலைக்கழகத்தோடும் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். இதற்கிடையில் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகமும் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, புதுக்கோட்டை: குடிநீரில் மலம் கலந்தோரை கண்டறிய முடியாதது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: