You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொல்கத்தா 3-வது முறையாக சாம்பியன்: சன்ரைசர்ஸ் பலவீனத்தில் துல்லியமாக அடித்த 'நாக் அவுட்' நாயகன்
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழா இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 71 போட்டிகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் இந்த சீசனின் சாம்பியன் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 57 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இதற்கு முன் 2012, 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்றிருந்தது, இப்போது 3வது முறையாக ஐபிஎல் மகுடத்தை கொல்கத்தா சூடியுள்ளது.
கம்பீருக்கு பெரும் பங்கு
கடந்த 2 முறை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றபோது கேப்டனாக கௌதம் கம்பீர் இருந்தார். இந்த முறை சாம்பியன் பட்டத்தைக் கையில் ஏந்தும் தருணத்தில் கொல்கத்தா அணியின் மென்டராக இருக்கிறார் கௌதம் கம்பீர்.
கடந்த ஐபிஎல் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 19வது ஓவர் வரை நீடித்தது. ஆனால், இந்த முறை 10 ஓவர்களிலேயே முடிந்துவிட்டது. அதுவும் ஐபிஎல் 2024 சீசனின் இறுதி ஆட்டம் முற்றிலும் ஒருதரப்பான ஆட்டமாக இருந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதற்கு முன் 2012ஆம் ஆண்டு சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இப்போது இதே சென்னையில் 2வது முறையாகவும் ஒட்டுமொத்தத்தில் 3வது முறையாகவும் கொல்கத்தா கோப்பையை வென்றுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் இதற்கு முன் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே 125 ரன்கள் சேர்த்ததுதான் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதைவிடக் குறைவாக 113 ரன்களை சேர்த்து மோசமான சாதனையைப் படைத்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.
சேப்பாக்கத்தில் வேகப்பந்துவீச்சு
ஐபிஎல் இறுதிப்போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் முதல் இன்னிங்ஸே ஒரு தரப்பாக அமைந்துவிட்டது. ஆட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், ராணா, அரோரா, ரஸல் ஆதிக்கம் செலுத்தினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் சிவப்பு விக்கெட் பேட்டிங்கிற்கு சாதகமானது என்று அறியப்பட்ட நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து நன்றாக ஸ்விங் ஆனது, சீமிங் ஆனது வியப்பாக இருந்தது.
மாஸ்டர் கிளாஸ் விக்கெட்
குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் ஏற்கெனவே முதல் தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையைத் திணறவிட்டிருந்தார். இந்த முறையும் ஃபைனலில் அவரின் மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சு தொடர்ந்தது.
அதிலும் அபிஷேக் ஷர்மாவை ஆட்டமிழக்கச் செய்த ஸ்டார்க்கின் பந்து இந்த சீசனிலேயே சிறந்த பந்துவீச்சாக மாறக்கூடும். அந்த அளவுக்கு அற்புதமான பந்துவீச்சாக இருந்தது. ஸ்டார்க் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கொல்கத்தாவின் 'பலம்' ரஸல்
கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாக ரஸல் இன்றைய ஆட்டத்தில் இருந்தார். 2.3 ஓவர்களை வீசிய ரஸல் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக ஹர்சித் ராணா, தனது பந்துவீச்சில் இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்குத் தன்னை அடையாளப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய ராணா ஒரு மெய்டன் ஓவருடன் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆட்டத்தை ஆக்கிமிரமித்த பந்துவீச்சாளர்கள்
கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஆக்கிரமித்து சன்ரைசர்ஸ் அணியை வாட்டி வதைத்தனர். கொல்கத்தா அணியிடம் இருந்து இதுபோன்ற டெஸ்ட் போட்டிக்கு இணையான தரமான, துல்லியமான பந்துவீச்சை சன்ரைசர்ஸ் பேட்டர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
புதிய பந்து தேய்வதற்குள் கொல்கத்தா வேகப்பந்துவீச்சாளர்கள் விரைவாகத் தங்கள் பணியை முடித்துவிட்டனர். அதேபோல புதிய பந்து தேய்வதற்குள் சன்ரைசர்ஸ் பேட்டர்களும் விக்கெட்டுகளை கோட்டைவிட்டனர். சுழற்பந்துவீச்சாளர்கள், வருண், நரைன் இருவருக்கும் பெரிதாக வேலை வைக்காமல் சன்ரைசர்ஸ் பேட்டர்கள் சரணடைந்தனர்.
ஸ்டார்க் அளித்த அதிர்ச்சி
டாஸ் வென்று முதலில் பேட் செய்ய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தீர்மானித்தது. அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். கடந்த முதல் தகுதிச்சுற்றில் ஸ்டார்க் பந்துவச்சில் கிளீன் போல்ட் ஆனதால், டிராவிஸ் ஹெட் ஸ்ட்ரைக்கிற்கு வராமல் அபிஷேக் ஸ்ட்ரைக்கில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
மிட்ஷெல் ஸ்டார்க் தேவைப்படும் நேரத்தில் டெஸ்ட் போட்டி பந்துவீச்சை வெளிப்படுத்தக் கூடியவர். முதல் தகுதிச்சுற்றில் அதுபோன்ற துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் அணியை சரணடைய வைத்தார்.
இந்த முறையும் முதல்பந்தில் இருந்து லென்த்தை மாற்றாமல் பந்தை வெளியே ஸ்விங் செய்தார். அபிஷேக்கும் முதல் 3 பந்துகளில் பீட்டன் ஆகி, 4வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். ஆனால், 5வது பந்தில் நினைத்தது நடந்தது.
தரமான டெஸ்ட் பந்துவீச்சு, இந்த சீசனில் மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சு என்று சொல்ல வேண்டும். சரியான லென்த்தில் பந்து பிட்ச் ஆகி லேசாக அவுட் ஸ்விங் ஆகி அபிஷேக்கை ஏமாற்றி ஸ்டெம்ப்பை பதம் பார்த்துச் சென்றது. முதல் ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி அபிஷேக் விக்கெட்டை இழந்தது. அடுத்து ராகுல் திரிபாதி களமிறங்கினார்.
அரோராவின் முதல் விக்கெட்
இரண்டாவது ஓவரை வைபவ் அரோரா வீசினார். அரோராவும் துல்லியமாகப் பந்துவீசி திரிபாதியையும், ஹெட்டையும் திணறவிட்டார்.
கடைசி பந்தை அரோரா துல்லியமான லென்த்தில் வீசி ஸ்விங் செய்ய டிராவிஸ் ஹெட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்சானது.
டிராவிஸ் ஹெட் டக்-அவுட்டில் வெளியேறினார். கடந்த 5 போட்டிகளில் 3வது முறையாக டக்-அவுட்டாகி ஹெட் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம் களமிறங்கினார்.
மூன்றாவது அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் பேட்டிங்கில் தோல்வி அடைந்தபோது, ஒட்டுமொத்த் சன்ரைசர்ஸ் அணியும் தோல்வி அடைகிறது என்ற ரகசியத்தை கொல்கத்தா அணி கண்டுபிடித்து அந்த அச்சாணிகளை பிடுங்கி சன்ரைசர்ஸ் வண்டியை கவிழ்த்தது.
ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் திரிபாதி 2 பவுண்டரிகளை அடித்து ஆறுதல் அளித்தார். ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் அடுத்த சம்பவம் நடந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தைச் சந்தித்த திரிபாதி ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்பில் சென்ற 2வது பந்தை திரிபாதி பிளிக் ஷாட் அடிக்கவே அது தவறான ஷாட்டாக அமைந்து ஸ்குயர் லெக் திசையில் ராமன்தீப் சிங்கிடம் கேட்சானது. திரிபாதி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கி, மார்க்ரத்துடன் சேர்ந்தார்.
ஆறாவது ஓவரை அரோரா வீசினார். இந்த ஓவரில் மார்க்ரம 2 பவுண்டரிகளும், நிதிஷ் குமார் ரெட்டி ஒரு சிக்ஸரும் விளாசினர். பவர்ப்ளே ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தது.
ஏழாவது ஓவரை ஹர்சித் ராணா வீசினார். ராணா வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் நிதிஷ் குமார். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கிளாசன் களமிறங்கி, மார்க்ரத்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தைக் கொண்டு சென்றனர். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.
விக்கெட் சரிவு
ரஸல் 11வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். ரஸல் வீசிய 2வது பந்தில் மார்க்ரம் பவுன்ஸர் பந்தைச் சரியாக ஆடாமல் தூக்கி அடிக்கவே ஸ்டார்க்கிடம் கேட்சாகி 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சன்ரைசர்ஸ் அணி 5வது விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஷாபாஸ் அகமது வந்தவுடன் ரஸல் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார்.
தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 12வது ஓவரை வீசினார். வருண் வீசிய முதல் ஓவரில் ஷாபாஸ் அகமது ஃபைன் லெக் திசையில் நரைனிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து இம்பாக்ட் ப்ளேயர் அப்துல் சமது களமிறங்கினார்.
ரஸல் வீசிய 13வது ஓவரில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ரஸல் வீசிய ஓவரில் 4வது பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து அப்துல் சமத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சன்ரைர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கி, கிளாசனுடன் சேர்ந்தார்.
கம்மின்ஸ் போராட்டம்
வருண் வீசிய 14வது ஓவரில் கம்மின்ஸ் பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்த முயன்றார். இருவரையும் பிரிக்க ராணா பந்துவீச அழைக்கப்பட்டார். ஏற்கெனவே ராணா முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்திய நிலையில் 2வது ஓவரை வீசினார். ராணா வீசிய 15வது ஓவரின் முதல் பந்து ஸ்லோவர் பாலாக அமையவே, அதை கிளாசன் வேகமாக அடிக்கவே பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பில் அடித்து போல்டானது. கிளாசன் 16 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய விக்கெட்டான கிளாசனை இழந்து 8 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களுடன் திணறியது.
அடுத்து உனத்கட் களமிறங்கி, கேப்டன் கம்மின்ஸுடன் சேர்ந்தார். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய நரைன் பந்துவீச அழைக்கப்பட்டார். நரைன் வீசிய 16வது ஓவரில் கம்மின்ஸ் அடித்த ஷாட்டை லாங் ஆன் திசையில் ஸ்டார்க் கேட்ச் பிடிக்க தவறவிட்டார்.
நரைன் 18வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய உனத்கட், கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரை ரஸல் வீசினார். 3வது பந்தில் கம்மின்ஸ் தூக்கி அடிக்க ஸ்டார்க்கிடம் கேட்சாகவே 24 ரன்னில் ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களில் இறுதிப்போட்டியில் ஆட்டமிழந்தது.
ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன் குறைந்தபட்ச ஸ்கோர் 125 ஆக இருந்தது, அதைவிட மோசமாக சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களில் சுருண்டது.
கொல்கத்தா பேட்டிங்
இருபது ஓவர்களில் 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. நரைன், குர்பாஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் குர்பாஸ் பவுண்டரியுடன் அதிரடியாகத் தொடங்கினார்.
இரண்டாவது ஓவரை கேப்டன் கம்மின்ஸ் வீசினார். முதல் பந்திலேயே நரைன் சிக்ஸர் விளாசி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அடுத்த பந்தை லெக் ஸ்டெம்பில் லென்த்தில் வீச நரைன் தூக்கி அடிக்க முற்பட்டு ஷாபாஸ் அகமதுவிடம் கேட்சானது.
இந்த சீசன் முழுவதும் எதிரணியைத் தனது அதிரடியால் மிரட்டிய நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்து சீசனில் 482 ரன்களுடன் 17 விக்கெட்டுகளுடன் வெளியேறினார். இந்த சீசன் முழுவதும் ஒவ்வொரு போட்டியிலும் நரைன் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வெங்கடேஷ் அய்யர் களமிறங்கினார். புவனேஷ்வர் வீசிய 3வது ஓவரில் வெங்கேடஷ் அய்யர் வெளுத்து வாங்கினார். முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த இரு பந்துகளில் சிக்ஸர் விளாசி விரைவாக இலக்கை நெருங்க முயன்று 20 ரன்கள் சேர்த்தார்.
நடராஜன் வீசிய 4வது ஓவரில் குர்பாஸ் பவுண்டரி அடித்து 9 ரன்கள் சேர்த்தார். கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் குர்பாஸ் பவுண்டரி அடிக்கவே கொல்கத்தா அணி 5 ஓவரிலேயே 50 ரன்களை எட்டியது.
நடராஜன் வீசிய 6வது ஓவரை வெங்கடேஷ் வெளுத்து வாங்கினார். முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த 2 பந்துகளில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி என விளாசிய வெங்கடேஷ் 4வது பந்தில் மீண்டும் பவுண்டரி விளாசி 20 ரன்கள் சேர்த்து வெற்றியை நெருங்க வைத்தார்.
பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்து வெற்றியை நெருங்கியது. 7வது ஓவரை வீச ஷாபாஸ் அழைக்கப்பட்டார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த குர்பாஸ், 4வது பந்தில் சிக்ஸர் விளாசி 12 ரன்கள் சேர்த்தார்.
கொல்கத்தா எளிதான வெற்றி
கொல்கத்தா பேட்டர்களின் பேட்டிற்கு கடிவாளம் போட சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் முயன்றும் முடியவில்லை. ஓவருக்கு பவுண்டரி அல்லது சிக்ஸராக குர்பாஸ், வெங்கடேஷ் விளாசி ரன்ரேட்டை உயர்த்தி வெற்றியை நெருங்கினர்.
உனத்கட் வீசிய 8வது ஓவரிலும் குர்பாஸ் ஒரு பவுண்டரி அடித்து 9 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி 9வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. ஷாபாஸ் வீசிய 9வது ஓவரில் 4வது பந்தில் சிக்ஸர் விளாசிய குர்பாஸ், 5வது பந்தில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். குர்பாஸ் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 2வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ், குர்பாஸ் 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து ஸ்ரேயாஸ் களமிறங்கி, வெங்கடேஷுடன் சேர்ந்தார். மார்க்ரம் வீசிய 10வது ஓவரில் வெங்கடேஷ் ஒரு ரன் சேர்த்து 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். கொல்கத்தா அணி வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷபாஸ் வீசிய 11வது ஓவரில் வெங்கடேஷ் அய்யர் ஒரு ரன் எடுக்க கொல்கத்தா அணி 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கொல்கத்தா அணி 57 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெங்கடேஷ் 52 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 5 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)