You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் செல்ல முயன்று விசா மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழந்த கேரள செவிலியர்கள்
- எழுதியவர், நிகில் இனாம்தார் மற்றும் ஜால்ட்சன் ஏசி
- பதவி, பிபிசி நியூஸ்
அருண் ஜார்ஜ், 15,000 பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 16 லட்சத்தி 78 ஆயிரம்) சேமிப்பதற்காகத் தனது வாழ்க்கையின் பாதி காலம் முழுவதும் கடுமையாக உழைத்துள்ளார்.
அவ்வாறு சேமித்த பணத்தை, பிரிட்டனில் தனது மனைவிக்கு பராமரிப்புப் பணியாளர் வேலை கிடைப்பதற்காக முழுமையாகப் பயன்படுத்தினார் ஜார்ஜ். ஆனால் ஒரு சில மாதங்களில் அவர் மொத்த பணத்தையும் இழந்துள்ளார்.
ஜார்ஜ் என்பது அவரது உண்மையான பெயர் அல்ல. வேலை இல்லாமல் நாடு திரும்பியது அவர்களுக்குப் பெரும் அவமானமாகக் கருதப்படுவதால், அவர்களின் சிறிய சமூகத்தில் அவரது மனைவி அடையாளம் காணப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில், அவர் அல்சிட்டா கேர் நிறுவன மேலாளர்களுக்கு பிரிட்டன் செல்வதற்கான தொகையைச் செலுத்தினார்.
தனது குடும்பத்திற்கான விசாவுக்கு நிதியுதவி வழங்கிய பிராட்ஃபோர்டில் உள்ள தனியார் பராமரிப்புக் கூடமான அல்சிட்டா கேர் நிறுவனத்திற்கு அவர் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களை பிபிசி பார்வையிட்டது.
கேரளாவில் உள்ள தனது நகரத்தில், ஒரு உள்ளூர் ஏஜென்டின் வழிகாட்டுதலின் பேரில், அந்த நிறுவனத்துக்கு ஜார்ஜ் பணம் செலுத்தியுள்ளார்.
மாற்றுத்திறன் கொண்ட தங்கள் குழந்தைக்குச் சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற வாக்குறுதியே, அந்தத் தம்பதியைத் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்தி, அத்தகைய ஒரு சவாலான முடிவை எடுக்கத் தூண்டியது.
ஆனால், அவர்கள் பிரிட்டனுக்கு சென்றபோது அங்கு வேலை கிடைக்கவில்லை.
"நாங்கள் அந்தப் பராமரிப்பு இல்லத்தைத் தொடர்புகொள்ளத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தோம். ஆனால் அவர்கள் எப்போதும் ஏதோவொரு காரணம் கூறித் தவிர்த்து வந்தனர். நான் மிகவும் கெஞ்சிய பிறகு, எங்களை ஊதியமில்லாத சில பயிற்சிகளில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்கள்.
அதன் பிறகு, என் மனைவிக்கு வெறும் மூன்று நாட்கள்தான் வேலை வழங்கினர். எங்களால் அங்கு தொடர்ந்து வாழ இயலவில்லை; சில மாதங்களில் இந்தியா திரும்பிவிட்டோம்," என்று ஜார்ஜ் கூறினார்.
அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக ஜார்ஜ் நம்புகிறார். இந்தக் கடுமையான அனுபவம், நிதிரீதியாக அவரைக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
- ரூ.23 லட்சம் சம்பளம் கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்க்கும் அமெரிக்க நகரம்
- "ரூ.9 லட்சம் கொடுத்து மகனின் மரணத்தை நானே விலை கொடுத்து வாங்கிவிட்டேனே" - ஒரு பாகிஸ்தானிய தந்தையின் கண்ணீர்
- தேநீர் அருந்த ரயிலில் இருந்து இறங்கியவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த துயரம் - அதிகாரிகள் மீட்டது எப்படி?
- 90 மணி நேர வேலை: இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் எவ்வளவு? தொழிலாளர்கள் கூறுவது என்ன?
'நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை'
கேரளாவில் இருந்து பிரிட்டனுக்கு வேலை தேடிச் சென்ற நூற்றுக்கணக்கானோர், ஆள் சேர்ப்பு முகவர்கள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டுள்ளனர். அவர்களுள் ஜார்ஜின் குடும்பமும் ஒன்று.
தற்போது நீதியோ, தங்களது பணமோ கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுள் பெரும்பாலானோர் கைவிட்டுவிட்டனர்.
பிராட்ஃபோர்டில் அமைந்துள்ள பராமரிப்பு நிறுவனமான அல்சிட்டா கேர், பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் வழங்கவில்லை.
வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்களுக்காக விசா நிதியுதவி வழங்க பராமரிப்பு இல்லங்களுக்கு அனுமதியளிக்கும் அல்சிட்டா கேர் நிறுவனத்தின் "ஸ்பான்சர்ஷிப் உரிமம்" கடந்த ஆண்டு பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், இவர்களைப் போலவே மேலும் மூன்று செவிலியர்களும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். கேரளாவில் இருந்து முற்றிலுமாக பிரிட்டனுக்கு இடம்பெயர முயன்ற அவர்கள், தங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை என்று எங்களிடம் தெரிவித்தனர். அவர்கள் இதற்காக அல்சிட்டா கேர் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகளை அனுப்பியதாகவும் கூறினர்.
அவர்களில் ஒருவர் இன்னும் பிரிட்டனில் தங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக தன்னார்வத் தொண்டு செய்யும் கடைகளில் இருந்து கிடைக்கும் "ரொட்டி மற்றும் பால்" மூலம் உயிர் வாழ்ந்து வருவதாகவும், தனது நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் கூறுகிறார்.
ஜார்ஜை போலவே, ஸ்ரீதேவியும் (அவருடைய உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது) அல்சிட்டா கேர் நிறுவனம் விசா நிதியுதவி வழங்குவதற்காக 15,000 பவுண்டு வசூலித்ததாகக் கூறுகிறார்.
மேலும், 2023ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு செல்வதற்காக, அவர் கூடுதலாக 3,000 பவுண்டு செலவழித்துள்ளார்.
பிரிட்டன் செல்வதற்காக குடும்பத்தினரிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் கடன் பெற்றிருந்ததால், அவர்களை எதிர்கொள்ள பயந்து ஸ்ரீதேவி இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் உள்ளார்.
"வாடகை செலுத்துவதற்கும், உணவுக்கும்கூட நான் சிரமப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.
மேலும் அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட உறுதியான எட்டு மணிநேர வேலைக்கு முற்றிலும் மாறான நிலைமையில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் சில நேரங்களில் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு நோயாளியின் வீட்டிலிருந்து மற்றொரு நோயாளியின் வீட்டிற்கு வாகனம் ஓட்டிச் செல்ல நேரிடுகிறது.
"இருப்பினும், நோயாளியுடன் நேரடியாகப் பணிபுரியும் சில மணிநேரத்திற்கே மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது, முழு வேலை நேரத்திற்கும் வழங்கப்படுவதில்லை" என்றார் அவர்.
இடைத்தரகர்களால் சுரண்டப்படும் கேரள செவிலியர்கள்
கோவிட் காலத்தில் பராமரிப்புப் பணியாளர்கள் பிரிட்டனின் பற்றாக்குறை தொழிலாளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர், ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனுக்கு குடிபெயர ஆவலுடன் முயலும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள், ஆள் சேர்ப்பாளர்கள் மற்றும் இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்படுகிறது.
இதன் மூலம், நிதியுதவிக்கான அனுமதி கிடைத்தவர்களை வெளிநாடுகளில் இருந்து வேலைக்குச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
பலருக்கும் பராமரிப்புப் பணியாளர் விசா ஒரு சிறந்த வாழ்க்கைக்கான 'கோல்டன் டிக்கெட்டாக' இருந்தது. ஏனெனில், அந்த விசாவின் மூலம் அவர்களால் தங்களது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்ல முடிந்தது.
லேபர் கட்சி உறுப்பினரும் கேம்பிரிட்ஜ் மேயருமான பைஜு திட்டாலா, கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்று பாதிக்கப்பட்ட 10 பேரை, தான் பிரதிநிதித்துவப்படுத்தியதாக பிபிசியிடம் கூறினார்.
ஆனால், இந்தச் சுரண்டல் திட்டங்கள், எல்லை தாண்டிச் செயல்படுவதால், பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறுவது கடினமாகி விட்டதாகவும், பெரும்பாலும் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள பராமரிப்பு இல்லங்கள் அல்லது இடைத்தரகர்களுக்குப் பணம் செலுத்தியிருப்பது 'அதிகாரப் பிரச்னைகளை' ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
இரண்டாவதாக, வழக்கறிஞர்களுக்கான செலவு மிக அதிகம். ஏற்கெனவே கடனில் முழ்கிய பெரும்பாலான பராமரிப்புப் பணியாளர்கள், நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராட முடியாத நிலையில் உள்ளனர்.
மறுபுறம், இந்தத் திட்டங்களால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 1,000-2,000 பேர் இன்னும் பிரிட்டனில் இருப்பதாக திட்டாலா மதிப்பிடுகிறது.
மேலும், கேரளாவின் பல நகரங்களில், நூற்றுக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறும் முன்பே தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
'வாழ்நாள் சேமிப்பை இழந்தோம்'
கொத்தமங்கலம் நகரத்தில், சமூகப் பராமரிப்புத் துறையில் பணியாற்றுவதற்காக பிரிட்டனுக்கு செல்லவும், அங்கு தங்கவும் அனுமதிக்கும் பராமரிப்பு விசாவை பெற முயலும்போது, மில்லியன் கணக்கான டாலர்களை மொத்தமாக இழந்த சுமார் 30 பேரிடம் பிபிசி பேசியது.
அவர்கள் அனைவரும், ஹென்றி பவுலோஸ் என்ற ஒரு முகவரையும், பிரிட்டன் மற்றும் இந்தியாவில் உள்ள அவரது 'கிரேஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தையும், போலியான வேலை வாய்ப்புகள் மற்றும் நிதியுதவிக்காக வழங்கப்படும் கடிதங்களின் மூலம் தங்கள் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றிப் பறித்ததாகக் குற்றம்சாட்டினர்.
அது மட்டுமின்றி, உண்மையாக நடைபெறாத விசா நேர்முக சந்திப்புகளுக்காக, பவுலோஸ் அவர்களில் சிலரை, அவர்களது ஊரில் இருந்து 2,500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டெல்லிக்கு அனுப்பியதாகவும் அவர்கள் கூறினர்.
பவுலோஸுக்கு பணம் அளிப்பதற்காக 13 சதவீத வட்டியில் வங்கிக் கடன் பெற்றதாகவும், அவர் வழங்கியது நிதியுதவிக்கான போலிச் சான்றிதழாக இருந்தது என்றும் ஆலப்புழா நகரில் வசிக்கும் ஷில்பா, பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பிபிசியிடம் பேசிய ஷில்பா, "எனது மூன்று மகள்களுக்கும் பிரிட்டன் நல்ல எதிர்காலத்தை வழங்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் அவர்களின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவே சிரமப்படுகிறேன்," என்கிறார்.
"நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். நாங்கள் பிரிட்டனுக்கு செல்லலாம் என்பதற்காக, என் மனைவி இஸ்ரேலில் வேலையை விட்டுவிட்டார்" என்று பாதிக்கப்பட்ட மற்றொருவரான பினு உடைந்த குரலில் கூறினார்.
அவர் இஸ்ரேலில் தனது மனைவியுடன் 1,500 பவுண்டு சம்பாதித்தார். ஆனால் இப்போது பணம் இல்லாததால் கேரளாவில் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பவுலோஸ் அல்லது கிரேஸ் இன்டர்நேஷனலை பிபிசி தொடர்புகொள்ளப் பலமுறை முயன்ற போதிலும் பதில் அளிக்கவில்லை.
கொத்தமங்கலம் காவல்துறை அதிகாரிகள், பவுலோஸ் பிரிட்டனில் தலைமறைவாக இருப்பதாகவும், ஆறு பேரிடம் இருந்து புகார் வந்ததைத் தொடர்ந்து அவரது உள்ளூர் அலுவலகங்களுக்கு சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பிரிட்டனில் ஆட்சியில் இருந்த முந்தைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம், கடந்த ஆண்டு பராமரிப்புப் பணியாளர்களுக்கு பொய்யான தகவல்களுடன் விசாக்கள் வழங்கப்பட்டதாகவும், குறைந்தபட்ச ஊதியத்துக்கும் கீழ் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் 'தெளிவான ஆதாரங்கள்' இருப்பதை ஏற்றுக்கொண்டது.
அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் விதிகள் 2024இல் கடுமையாக்கப்பட்டன. அவர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டது. மேலும், பராமரிப்புப் பணியாளர்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தற்போது குடும்பங்களை ஈர்க்காத வாய்ப்பாக இது மாறியுள்ளது.
ஜூலை 2022 முதல், பராமரிப்புத் துறையில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளை அனுமதிக்கும் சுமார் 450 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நிதியுதவி கிடைப்பதற்கான உரிமக் கட்டணத்தையும் அதனுடன் தொடர்புடைய நிர்வாகச் செலவுகளையும், அங்கு பணிபுரியவுள்ள வருங்கால ஊழியர்களிடம் வசூலிப்பது உள்துறை அமைச்சகத்தால் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கேரளாவில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள், இந்தியாவில் இன்னும் இந்த வழக்குகளை விசாரித்து வருவதாகவும், தேவைப்பட்டால் முகவர்களைக் கட்டுப்படுத்த சர்வதேச குற்றவியல் காவல் அமைப்புகளுடன் (இன்டர்போல்) இணைந்து செயல்படுவதாகவும் பிபிசியிடம் கூறினர்.
ஆனால், ஏற்கெனவே சுரண்டப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு, நீதி என்பது இன்னும் மங்கலானதாகவும், தொலைதூரக் கனவாகவுமே நீடிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு