"ரூ.9 லட்சம் கொடுத்து மகனின் மரணத்தை நானே விலை கொடுத்து வாங்கிவிட்டேனே" - ஒரு பாகிஸ்தானிய தந்தையின் கண்ணீர்

    • எழுதியவர், எட்ஷாம் அகமது ஷமி
    • பதவி, பிபிசி உருது

சௌதி அரேபியாவில் மரத் தச்சராக பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத் இக்பால் என்பவர் தனது 13 வயது மகனை ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்துள்ளார். அவரது இந்த முடிவு குறித்து தற்போது மிகவும் வருந்துவதாக ஜாவேத் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.

"இதற்கான ஏஜென்டுகள் எனது கிராமத்திலிருந்து பல சிறுவர்களை கிரீஸ் மற்றும் இத்தாலி நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். அவர்களின் பேச்சில் வசப்பட்ட எனது மகன், 'நீங்கள் என்னை ஐரோப்பாவிற்கு அனுப்பவில்லை என்றால், நான் வீட்டை விட்டு வெளியேறுவேன்' என்று எங்களிடம் மீண்டும்மீண்டும் சொல்லி வந்தார்", என்று ஜாவேத் கூறுகிறார்.

கடந்த வாரம் இதுபோன்ற புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மூன்று படகுகள் கிரீஸ் அருகே கடலில் கவிழ்ந்ததில் பாகிஸ்தானை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். அதில் ஜாவேத்தின் மகன் முகமது அபித்தும் அடங்குவார்.

தங்கள் குழந்தைகளை, பாகிஸ்தானை விட்டு செல்வதற்கு இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பெற்றோரிடம் அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகள் கவிழ்ந்த விபத்தில் 47 பேர் மீட்கப்பட்ட நிலையில், 35 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் கடந்த புதன்கிழமை, கிரீஸ் கடலோரக் காவல்படையால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அந்த 35 பேரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்று கிரீஸில் உள்ள தூதரக அதிகாரிகள் அறிவித்தனர்.

பாகிஸ்தானில் உள்ள மத்திய பஞ்சாபின் பஸ்ரூர் மாவட்டத்தில் வசிக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் பிபிசி உருது உரையாடியது.

'நானும் ஐரோப்பா செல்லும் நாள் எப்போது வரும்?'

ஜாவேத்தின் நான்கு குழந்தைகளில் அபித் மூன்றாவது குழந்தை ஆவார்.

"அபித்தின் மூத்த சகோதரனும் சகோதரியும் பள்ளிக்குச் செல்கிறார்கள், அபித் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்" என்று சௌதி அரேபியாவில் பணிபுரிந்து, அங்கேயே வசிக்கும் ஜாவேத் கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜாவேதின் உறவினர்களில் பலரும், அவரது கிராமத்தைச் சேர்ந்த மற்ற சிறுவர்களும் ஏஜென்டுகள் மூலம் கிரீஸ் சென்றுள்ளனர்.

இந்த சிறுவர்கள் அனைவரும் கிரீஸ் வந்த பிறகு சமூக ஊடகங்களில் இதுகுறித்து பதிவிடுவார்கள். இவர்கள் சமூக ஊடகத்தில் பரவும் வீடியோக்களை பார்த்ததும், "நானும் ஐரோப்பாவுக்கு செல்லும் நாள் எப்போது வரும்?" என்று அபித் கேட்பார்.

"நீ இன்னும் ஒரு சிறுவன் தான், நீ வளர்ந்ததும் அங்கு போகலாம், என்று நான் அபித்திடம் பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்ததார். என்னுடன் வேண்டுமானால் சௌதி அரேபியாவுக்கு வரலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அபிடாதின் ஒரே விருப்பம் ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டும் என்பது தான்", என்று கூறினார் ஜாவேத்.

இந்த விபத்தில் உயிரிழந்த பாகிஸ்தானியர்களில் ஒரு குழந்தையும் இருந்தது என்றும் உயிர் பிழைத்தவர்களுள் சிறு குழந்தைகளும் அடங்குவர் என்று சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கிரீஸ் நாட்டிற்கான பாகிஸ்தான் தூதர் அமர் அஃப்தாப் குரேஷி தெரிவித்தார்.

"சட்டவிரோதமாக குழந்தைகளை அனுப்பும் இந்த முறை மிகவும் ஆபத்தானது", என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த ஏஜென்டுகளை சந்தித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும் போதெல்லாம் அபித், ஐரோப்பா செல்ல தனது தாய் பணம் திரட்டவில்லை என்றால் அவர் வீட்டை விட்டு வெளியேறுவதாக பயங்காட்டுவார் என்று ஜாவேத் கூறுகிறார்.

"அபித்தின் தாய் அவருடன் என்னை தொலைபேசியில் பேச வைப்பார், நான் அபிதுக்கு விளக்குவேன். அவன் அந்த சமயம் அதனை ஒப்புக்கொள்வார். ஆனால் ஓரிரு நாட்களுக்கு பிறகு, அபித் மீண்டும் ஐரோப்பா செல்ல வேண்டும் என வலியுறுத்த தொடங்கிவிடுவார்", என்று ஜாவேத் கூறுகிறார்.

அபித் ஐரோப்பா செல்ல வேண்டும் என்பதற்காக ஜாவேத் தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியையும், தனது மனைவியின் சில நகைகளையும் விற்றார். அவர்கள் ஏஜென்டிடம் 25.6 லட்சம் பாகிஸ்தான் ரூபாயை(இந்திய மதிப்பில் சுமார் 7.9 லட்ச ரூபாய்) வழங்கியுள்ளனர்.

தனது மகன், முதலில் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் எகிப்துக்கு சென்று, பின்னர் லிபியா சென்றடைந்தார் என்றும், அங்கு தங்கி இருந்த இரண்டு மாதங்கள் முழுவதும் தினமும் தனது குடும்பத்தினருடன் அபித் தொடர்பில் இருந்தார் என்றும் ஜாவேத் கூறுகிறார்.

"அவர் மகிழ்ச்சியாக இருந்தார். சில சிரமங்கள் இருப்பதாகவும், ஆனால் அவை தற்காலிகமானவை என்றும், விரைவில் அவர் தனது இலக்கை அடைவார் என்றும் அபித் சொல்லிக்கொண்டே இருந்தார்", என்று ஜாவேத் தெரிவித்தார்.

"அபித் ஐரோப்பாவுக்கு செல்லாமல், இந்த உலகத்தை விட்டே செல்வார் என்பது அப்போது நாங்கள் நினைக்கவில்லை".

"கிரீஸ் அருகே உள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததாக ஒரு செய்தி பரவிய போது, ​​நாங்கள் அதுகுறித்து தகவல்களைப் பெற முயற்சித்தோம், ஆனால் எதுவும் தெரிய வரவில்லை," என்று ஜாவேத் நினைவு கூர்ந்தார்.

கடைசியாக, ஜாவேத்தின் குடும்பம் கிரீஸில் உள்ள அவர்களது நண்பர் ஒருவரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கான மருத்துவமனைக்குச் சென்று அபித்தின் உடலைக் கண்டார். இதையடுத்து கிரீஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்தும் ஜாவேத்தின் குடும்பத்திற்கு அழைப்பு வந்தது.

'நொடிக்கு நொடி இறந்து கொண்டிருக்கிறோம்'

மத்திய பஞ்சாபில் உள்ள மற்றொரு கிராமமான உச்சா ஜஜ்ஜாவில், தங்களது மகன் உயிரிழந்ததால் மற்றொரு குடும்பமும் சோகத்தில் இருக்கிறது. இதே விபத்தில் இர்பான் அர்ஷத்தின் 19 வயது மகனான முகமது சுஃப்யானும் உயிரிழந்ததாக கிரீஸில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தனது மகனை பத்திரமாக படகில் அனுப்புவதாகவும், கவலைப்பட தேவையில்லை என்று ஏஜென்டுகள் கடைசி நேரம் வரை ஏமாற்றி வந்ததாக இர்பான் அர்ஷத் கூறுகிறார்.

"கிரீஸ் அருகே படகு கவிழ்ந்ததாக கிராமத்தில் செய்தி பரவிய போது, எங்கள் வாழ்க்கையே இருள் சூழ்ந்தது போல இருந்தது. 30 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 9 லட்ச ரூபாய்) கொடுத்து என் மகனின் மரணத்தை நானே என் கையால் வாங்கியது போல உணர்கிறேன்", என்று இர்பான் கூறுகிறார்.

இர்பான் எண்ணெய் மற்றும் உரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர். அதில் இருவர் பஹ்ரைனில் வசிக்கின்றனர், மூன்றாவது மகன் ஏற்கனவே கிரீஸில் வசித்து வருகிறார். அவரது கடைசி மகனான முகமது சுஃப்யானை கிரீஸுக்கு அனுப்புவதற்காக தனது நிலத்தை விற்றார்.

முகமது சுஃப்யானின் மரணம் தொடர்பாக நான்கு பேர் மீது FIA (Federal Investigation Agency) மனித கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இர்பானின் கூற்றுபடி, சுஃப்யான் லிபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அங்கிருந்து அவர் சீக்கிரம் கிரீஸுக்கு அழைத்து செல்லப்படுவார் என்று ஏஜென்டுகள் அவரிடம் உறுதியளித்தார். ஆனால் அதற்கு பதிலாக, சுஃப்யான் லிபியாவில் இரண்டு மாதங்கள் பாதுகாப்பான வீட்டில் வைக்கப்பட்டார் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டது.

"வீணான உணவுகளை சாப்பிட்டதால் என் மகனுக்கு காலரா நோய் பாதிப்பு வந்தது, அது அவனை மிகவும் பலவீனப்படுத்தியது. நாங்கள் சுஃப்யானுடன் பேசும் போதெல்லாம், அவர் மிகவும் கவலையாக இருந்தார். முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறியதால் அவர் இவ்வாறு இருக்கலாம் என்றும் கிரீஸ் சென்றதும் அவர் மீண்டும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம்", என்று இர்பான் கூறுகிறார்.

இறுதியாக சுஃப்யான் படகு ஒன்றின் மூலம் கிரீஸுக்கு புறப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு, அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு, சுஃப்யானின் நண்பர்களிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டில், கிரீஸின் அதே கடல் பகுதியில் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 262 பாகிஸ்தானியர்கள் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள ஏஜென்டுகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கடந்த புதன்கிழமை அன்று, இந்த விபத்து குறித்து ஆலோசனை நட;jத அதிகாரிகள் கூடிய போது, இத்தகைய உணர்வுகள் மீண்டும் எதிரொலித்தன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும்மீண்டும் நடப்பது கவலை அளிப்பதாக கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், மனித கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் நீண்ட காலமாக பல்வேறு நாடுகளில் மனித கடத்தல் கும்பலை நடத்தி வருவதாக பெடரல் புலனாய்வு அமைப்பின் பிராந்திய இயக்குநர் அப்துல் காதர் கமர் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.

"இதுவரை FIA நடத்திய விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சந்தேகிக்கப்படும் நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இதுவரை நூற்றுக்கணக்கானவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்", என்றும் அவர் கூறினார்.

இந்த படகு விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பாததுதான் முக்கியமான பிரச்னை என்று அவர் கூறினார்.

மனித கடத்தல் தொடர்பாக இதுவரை 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் நான்கு பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.

வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் சுஃப்யானின் உடல் பாகிஸ்தானை வந்தடையும் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தன்னிடம் கூறியதாக இர்பான் கூறுகிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் நீண்ட காலமாக காதிருக்க வேண்டியதாக உள்ளது.

"நாங்கள் நொடிக்கு நொடி இறந்து கொண்டிருக்கிறோம். எங்கள் மகனின் உடலைப் பார்க்கும் வரை, நாங்கள் சாகக் கூடாது என நினைக்கிறோம், ஆனால் எங்களால் வாழ கூட முடியவில்லை", என்று இர்பான் கூறுகிறார்.

"மகன்களை இழந்தவர்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)